தொடர்கள்
சிறு தொடர்கதை
மறு வாசனை... - 3 - அய்யாசாமி

20210729084110422.jpeg

சுவாமிமலை வந்திறங்கி, ஆலயம் தரிசனம் செய்துவிட்டு ஆணையர் அலுவலகம் திரும்பிய போது, மதியம் பன்னிரெண்டு மணியாகியிருந்தது. அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது வழக்கம் போல்.

ஓரிருவர் பக்தர்களுக்கு ஆலய அனுமதி சீட்டுக் கொடுத்துக்கொண்டும், அரசு ஊழியர்களுக்கும், மந்திரியை சார்ந்தவர்களுக்கும்,
பாஸ் வழங்கி கொண்டு இருப்பதால், இந்தத் துறையில் சாமியை விட பக்தர்களால், ஆசாமிகளே அதிகம் கொண்டாடப்படுவர் போலத் தெரிகிறது.

அறநிலையத்துறை ஆணையர் வருகைக்காக காத்திருந்தார் குரு.

அந்தச் சமயத்தில் காவல்ஆய்வாளர் ஒருவர் வந்து யாருய்யா குரு? என கேட்டு வா, என அவரை அழைத்த போது, விஷயம் ஏதும் புரியாமலும் நடப்பவை எதுவும் அறியாமலும், வருவதற்கு மறுத்தபோது... குருவை கைகளை ஓங்கி அடிக்க வந்ததால், அமைதியாக சாட்சிநாதரை மனதில் நினைத்தப்படி அவர்களுடன் வாகனமேறி சென்றார் குரு.

ஒழுங்கு மரியாதையாக இதில் கையெழுத்தை போடு என்றார் ஆய்வாளர்.

என்ன எழுதியிருக்கேள் என்று கேட்டார்...

காணாமல் போன அந்த ஐம்பொன் சிலையை என் தந்தைதான் களவாடி,
மாற்று சிலையை அங்கே ஒப்படைத்தார், அது எனக்கும் தெரியும் என்று எழுதி இருக்கு என்றார் ஆய்வாளர்.

இடையில் போன் வரவே...

இல்லைய்யா... இன்னும் இல்லை. நான் வாங்கி விடுகிறேன் ஐயா. வாங்கிட்டு பேக்ஸ் செய்கிறேன் ஐயா... எனக் கூறியவர்...

இப்போ பேசினது யார் தெரியமா..? காவல்துறை கமிஷனர். மேட்டர் அத்தனை பெரிசு.

உன் அப்பனோ செத்துட்டான், அந்த சிலையோ பெரிய இடத்திற்கு கை மாறி போயிடுச்சு, கேஸை ஊத்தி மூடுகிறதுக்குத்தான் கேட்கிறோம். நீ போடுகிற ஒரு கையெழுத்திலேதான் பல அரசு அதிகாரிகளின் வாழ்க்கை அடங்கியிருக்கு.

மறுத்தின்னா சிலையை நீதான் களவாடினே என்று புதுசா ஒரு கேஸைப் போட்டு, உன்னை அசிங்கப்படுத்திடுவேன் என மிரட்டினார் ஆய்வாளர்.

காவல் நிலையமே காலடி படாத குருவின் கால்கள் தானாக நடுங்கியது, “ஈஸ்வரா..” “ஈஸ்வரா..” என முனகியது வாய்.

பின் துணிந்தவன் சாட்சிநாதரை மனத்தில் நிறுத்தி அம்பாளை நினைத்து கையெழுத்து போட்டுக்கொடுத்தான்.

அது அவனை மட்டுமல்ல... அவன் குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதப்போகிறது என தெரியாமல்...