ஊட்டி என்றாலே மலைகளின் அரசி என்று அழகாக அழைக்கப்படும் ஒரு மலை சுற்றுலா தளம் என மனதிற்குள் ஒரு குளு குளு ஏற்படும் ...
ஒரு சிறிய ஊர், உலக பிரசித்தி பெற்ற ஒன்று என்பது இந்தியாவிற்கே பெருமையான விஷயம் என்றால் மிகையாகாது.

பிரிட்டிஷார் கண்டுபிடித்த ஒரு சொர்க்க பூமி தான் ஊட்டி... கோயம்பத்தூர் கலெக்டர் ஜான் சல்லிவன் கண்டுபிடித்த மலை ஊர் தான் ஊட்டி. இந்த மாவட்டத்தின் பழங்குடியினரான தோடர் இன மக்கள் ஒத்தை கல் மந்து என்று அழைத்தனர்.

அதை ஜான் சல்லிவன் ஒட்டகமண்ட் என்று அழைத்தார். அதுவே Ootacamund என்று உருவானது. 1972 ஆம் ஆண்டு உதகமண்டலம் என்று மாற்றி அமைத்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். சிறிய ஊரான ஊட்டி உலக சுற்றுலாக்களை கவர்ந்த ஒன்று...
பிரிட்டிஷார் உருவாக்கின பொட்டானிக்கல் கார்டன், ஏரி, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் இங்கு உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள். பிரிட்டிஷார், அரசர்கள் என்று முக்கிய விஐபி-கள் இங்கு வந்து தங்கி, ஓய்வு எடுக்கும் ஒரு வாசஸ்தலமாக மாறிய ஒரு மலை பிரதேசம்.

இந்தியாவிலேயே பழமையான நகராட்சி, ஊட்டி நகராட்சி என்பது பெருமையான ஒன்று. அப்படிப்பட்ட நகராட்சி... 200-வது வருடத்தை அடுத்த வருடம் ஜூன் மாதம் சிறப்பிக்க இருக்கிறது.

இந்த பெருமையான ஊட்டி நகராட்சி, சிறந்த நகராட்சி என்ற விருதை தமிழக அரசு வழங்கியுள்ளது. கடந்த சுதந்திர தினத்தன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தால் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி பெற்று கொண்டார்.

ஊட்டி வரலாற்றில் இப்படிப்பட்ட விருது கிடைப்பது முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த நகராட்சி, மாநிலத்தில் முதல் நிலை நகராட்சி என்பதே ஒரு சிறப்பான விஷயம். பழைய காலத்தில் மிக முக்கிய நகராட்சியாக கருதப்பட்டது. நாட்டின் ஜனாதிபதி, ஆளுநர்கள் ஊட்டி வரும்போது நகர்மன்றம் வரவேற்பு என்பது முக்கியமான ஒன்று....

முன்னாள் நகர மன்ற தலைவி லலிதா தனபாலை தொடர்பு கொண்டு பேசினோம்... “தமிழக அரசு ஊட்டி நகராட்சிக்கு ஒரு விருது அளித்துள்ளது என்பது பெருமையான ஒன்று... 2001 முதல் 2006 வரை நிறைய பணிகளை செய்துள்ளேன். நகர மன்ற உறுப்பினர்கள், பல அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த வேறுபாடும் இல்லாமல் நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்... கோடப் மந்து கால்வாய் தான் ஒரு சவாலான வேலையாக இருந்தது. பார்க்கிங் நம்ம ஊரில் ஒரு பெரிய பிரச்சனை. மார்க்கெட் கூட புதியதாக கட்டப்பட வேண்டும். இப்படி பல விஷயங்கள் இருந்தாலும்... ஊட்டி அழகான ஊர். நம்ம கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா, கடந்த நான்கு வருடமாக நீலகிரியை ஒரு சிறந்த மாவட்டமாக மாற்றியுள்ளார். இந்த விருது கூட அவரின் சிறந்த பணிக்கு கிடைத்த மரியாதை என்று கூட எடுத்து கொள்ளலாம். இன்னும் அதிகமான புதிய திட்டங்கள் வகுத்து, உலக அந்தஸ்தில் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக ஊட்டி இடம் பெரும். இந்த விருதை வழங்கிய தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள்”...

முன்னாள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நம்மிடம் கூறும் போது...
“ஊட்டி நகராட்சி என்பது ஒரு பெருமை வாய்ந்த நகராட்சி. இங்கு நகர மன்ற தலைவராக லிங்கன், டாக்டர். பாசுவையா, கேம்பையா, சுந்தராஜ் என்று சிறப்பித்துள்ளனர். அந்த வரிசையில் நானும் ஒரு தலைவராக பணிபுரிந்து நிறைய வேலைகளை செய்துள்ளோம். 36 வார்டு உறுப்பினர்களும், ஒரு வி.ஐ.பி-கள் போலத்தான். உலக அந்தஸ்தை பெற்ற ஊட்டி நகருக்கு, ஒரு சிறந்த விருதை தமிழக அரசு கொடுத்துள்ளது சிறப்பு.

இந்த விருதுக்கு முக்கியக் காரணம் நம்ம கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா என்று சொன்னால் மிகையாகாது. மக்களின் வரிப் பணம் மற்றும் மார்க்கெட் வாடகை வருமானத்தில் தான் நகராட்சியை நடத்த முடிகிறது. மற்ற மாவட்டங்களில்... பேருந்து நிலையங்களில் இருந்து நகராட்சிக்கு தின வாடகை கிடைக்கிறது. நம் ஊட்டி நகராட்சிக்கு அப்படி வருமானம் இல்லை. அதனால் தான் பிங்கர் போஸ்டில் ஒரு பஸ் நிலையம் கட்ட அன்றைய கலெக்டர் அனந்தராவ் விஷ்ணு பாட்டில் முயற்ச்சி எடுத்தார். அப்பொழுது நிதி ஆணையாளர் சுந்தரதேவன் இருந்தார். பல முயற்ச்சி எடுத்தும் நடைமுறை படுத்த முடியவில்லை. மாநகராட்சிகளுக்கு கூட மத்திய அரசு விருதுகள் வழங்குகின்றன. அதில் ஹைதராபாத், போபால், இண்டூர், சண்டிகார், மைசூர் ஆகிய நகரங்கள் சிறந்த பரிசுகளை தொடர்ந்து பெற்று வருவது உண்டு... ஊட்டி நகரில் கோடப்மந் ஒரு சவாலாக இன்று வரை உள்ளது. அதே போல வாகனங்கள் பார்க்கிங் ஒரு பெரும் சவால் தான். அதை எல்லாம் நகராட்சி சமாளிக்க வேண்டியுள்ளது. ஊட்டி நகராட்சி ஏற்கனவே ஒரு சிறப்பு நிலை நகராட்சி. இந்த நகராட்சிக்கு விருது கிடைத்தது என்பது ஆணையாளர் முதல் கடைநிலை ஊழியர் வரையுள்ள அனைவருக்கும் பொருந்தும் பாராட்டுக்கள்” என்று முடித்தார்...
மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா கூறும் போது...

“ஊட்டி நகராட்சிக்கு இந்த விருதை நம் தமிழக அரசு வழங்கியுள்ளது, தூய்மை பணியாளர்களையே சாரும். அவர்களின் மகத்தான பணி பாராட்டுக்கூறியது. ஆணையாளர் சரஸ்வதி, நிறைய சிறந்த பணிகளை மேற்கொண்டுள்ளார். அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பாராட்டுக்கள். மாவட்ட நிர்வாகமும் பல வழிகளில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நல்கியுள்ளோம்.
நகரை மிக தூய்மையாக வைத்து கொள்வது இந்த விருதுக்கு ஒரு வாய்ப்பு. பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பைகளை பிரித்து எருவாக மாற்றியுள்ளது... அந்த எருவை, நிறைய விவசாயிகள் வாங்கி செல்வது சிறப்பை சேர்த்துள்ளது. கடை நிலை ஊழியர் முதல் ஆணையாளர் வரை இந்த விருதுக்கு காரணமானவர்கள் அனைவருக்கும் பாராட்டு..
இந்த விருது கிடைக்க காரணமாக இருப்பவர்கள் ஊட்டி நகர வாசிகளும் கூட. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், இந்த விருது கிடைத்திருக்காது. அவர்களின் ஒத்துழைப்பு மேலும் தொடர வேண்டும்...
இந்த விருதை வழங்கிய நம் முதல்வர் அவர்களுக்கு நன்றி.... உன்னத உதகைக்கு கிடைத்த ஒரு விருது இது என்பதை பெருமையாக கூறுகிறேன்.
சுதந்திர தினத்தன்று கோட்டைக்கு சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கரத்தில், ஊட்டி ஒரு சிறந்த நகராட்சி என்ற விருதை பெற்று வந்த நகராட்சி ஆணையாளர் சரஸ்வதியை சந்தித்து பேசினோம்...

“படு பிசியாக இருந்த ஆணையாளரை சந்திக்க நேரில் சென்றோம்... நிறைய பாராட்டு சான்றிதழ்களை அடுக்கி வைத்து கொண்டு, தன் பச்சை பேனாவில் கையெழுத்தை போட்டு கொண்டே பேசினார். விருது பெற்று வந்ததற்கு வாழ்த்துக்கள் கூறினோம்...
இந்த விருது எந்த வகையில் கொடுத்தார்கள்..? என்று கேட்க...
கொரோனா பணியை சிறப்பாக செய்துள்ளோம். அது ஒரு முக்கிய காரணம். பின்னர்.. தடையில்லாத குடிநீர் விநியோகம். கடந்த ஐந்து வருடமாக... திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக செயல் படுத்தியுள்ளோம். நிறைய விவசாயிகள் ஆர்கானிக் எருவை வாங்கிச் செல்கிறார்கள்.
சுதந்திர தினத்திற்கு பத்து நாட்களுக்கு முன், ஒரு டீம் ஊட்டி வந்து நகராட்சியின் பணிகளை ஆய்வு செய்து, இந்த சிறப்பான விருதுக்கு பரிந்துரை செய்தனர். அதன் பேரில் தான் இந்த விருது கிடைத்தது... அதிலும் முதல்வர் ஸ்டாலின் கரத்தால் இந்த விருதை பெற்றது பெருமையான விஷயம்...
இந்த விருது உங்களை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கும். உங்கள் புதிய திட்டங்கள் என்ன? என்று கேட்க...
நகரின் தூய்மையை மேலும் சிறப்பிக்க செய்ய இருக்கிறோம். ஊட்டி மார்க்கெட்டில் நிலுவையில் உள்ள 38 கோடி வாடகை பணத்தை வசூல் செய்வது என் முதல் வேலை. நகரில் உள்ள டாய்லெட்டுகள் புதுப்பிக்க படும். அதிலும் வெளிநாட்டு சுற்றுலாக்கள் பயன்படுத்தும் வகையில், புது டாய்லெட்டுகள் கட்டும் பணி துவக்கப்படும். உலக அந்தஸ்தை கவரும் வண்ணம் புதுப்பிக்கப்படும். சாலைகள் இன்னும் சிறப்பாக மேம்மபடுத்தப்படும், உலக தரத்தில் உயர்த்தப்படும். சாலையோர கடைகள் புதியதாக கட்டப்பட்டு, ஒரு மாடல் நகராக விரைவில் மாற்றி அமைக்கப்படும். ஏற்கனவே... மதுரை, திருமங்கலம் நகராட்சியில் ஆணையாளராக இருந்த போது, சிறந்த நகராட்சி விருது கிடைத்துள்ளது. குன்னூரில் ஆணையாளராக இருந்த போது, நடவடிக்கை பல எடுத்து, வளர்ச்சி பணிகளை நடத்தியுள்ளேன்.
என்னை இங்கிருந்து மாற்ற பல முயற்ச்சிகள் நடந்தது... மீண்டும் அரசு என்னை இங்கு பணியில் அமர்த்தியுள்ளனர். இன்னும் என் பணி சிறந்த முறையில் இருக்கும். சரியான விஷயங்களுக்கு சிறந்த நடவடிக்கையும், சரியில்லாத விஷயங்களுக்கு தக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்த விருது, உதகை நகரை அபார வளர்ச்சிக்கு கூட்டி செல்லும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், தக்க ஒத்துழைப்பை நல்கி வருகிறது. அரசு வழங்கியுள்ள 15 லட்சமான ஊக்கத்தொகையை, நகரின் தகுந்த வளர்ச்சி பணிக்கு உபயோகிக்க திட்டமிட்டுள்ளேன்... எங்களின் பணி தொடரும், ஊட்டி நகர் மெருகேறும்” என்று முடித்தார்.

ஊட்டி நகராட்சி என்றவுடன் நினைவுக்கு வருவது பிரிட்டிஷ் ஆணையாளர் மற்றும் நகர் மன்ற தலைவர் டேவிஸ் தான். தினமும் தன் குதிரையில் நகரை சுற்றி வலம் வந்து, வளர்ச்சி பணிகளை கண்காணிப்பார். அவரின் பெயரில் உள்ள டேவிஸ் பார்க் பொலிவிழந்து காட்சி அளிக்கிறது. டேவிஸ் டேல் அவரின் பெயரில் குடியிருப்பு பகுதியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு விருது, ஊட்டி நகராட்சிக்கு கிடைத்தை குறித்து நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் தர்மலிங்கத்துடன் பேசினோம்...

“ஜான் சல்லிவன் உருவாக்கின ஒரு அழகிய மலை ஊர் தான் ஊட்டி. தமிழக அரசு கொடுத்துள்ள விருது நல்லது தான். அதே வேளையில் விருதுக்கு ஏற்றபடி நகர் இருக்கிறதா என்றால் ஒரு மிக பெரிய கேள்வி குறி தான். இந்தியாவில் உள்ள மிக பழமையான நகராட்சி தான் ஊட்டி. பிரிட்டிஷ் காலத்தில் நகராட்சி ஆணையாளர், ஒரு கலெக்டர் அந்தஸ்தில் இருந்தவர். நகரை மிகவும் அழகாக வடிவமைத்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். பிரிட்டிஷ் ஆணையாளர் டேவிஸ் தான் அதிக வருடம் ஊட்டி நகராட்சியை நிர்வகித்தவர். அவர் காலத்தில் ஊட்டி சுத்தமான, அழகான சிறந்த நகராக பராமரித்து வந்ததை வரலாறு எடுத்து கூறுகிறது... இப்பொழுது இருக்கும் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் பழைய ஊட்டி வரலாற்றை புரட்டி பார்க்கவேண்டும்... அப்பொழுது தான் இதன் அருமை புரியும். ஊட்டி வரலாற்றை பற்றி எழுதின சர் .பிரெட்ரிக் பிரைஸ், தான் எழுதிய அந்த புத்தகத்தை முடிக்கும் பொழுது.... “ஊட்டியின் 200-வது ஆண்டு விழா சிறப்பிக்கும் போது, என் ஆன்மா அந்த நிகழ்வில் வந்து அமரும்” என்று எழுதியது உருக வைக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பான உதகை நகரை விரைவில் உருவாக்கவேண்டும். அடுத்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஊட்டி நகரின் 200-வது ஆண்டு வருகிறது. விருது பெற்றுள்ள ஊட்டி நகராட்சி என்ன செய்ய போகிறது என்று தான் புரியவில்லை” என்று முடித்தார்.
வரலாற்று சிறப்புமிக்க ஊட்டி நகராட்சி சிறந்த விருதை முதல்வரின் கரத்தால் பெற்றுள்ளது... அதன் சிறந்த வளர்ச்சியை எப்படி முன்னின்று நடத்த போகிறார் ஆணையாளர் சரஸ்வதி என்பதை உன்னிப்பாக அனைவரும் கவனித்து வருகின்றனர்.

Leave a comment
Upload