தொடர்கள்
தொடர்கள்
காதல் பொது மறை - 51 - காவிரிமைந்தன்

20210719220347750.jpg

20210719220421741.jpg

காவிரிமைந்தன்

முதல் நினைவு உனதல்லவா?
அன்பிற்கினியவளே....

எத்தனை எத்தனை நினைவலைகள் என்னைச் சுற்றியும் உன்னைச் சுற்றியும்.. என்ன சொல்கின்றன?

ஏதேதோ சொல்கின்றன! எல்லாம் எனக்கும் உனக்கும் மட்டும்தானே புரியும்!

தெள்ளிய நீரோடைபோல் பாசம்.. அது இன்றும் என்றும் நமக்குள் பேசும்! எங்கிருந்தாலும் என்ன.. இதயம் துடிப்பது உன் பெயரில்! வாழ்க்கையின் அர்த்தபுஷ்பங்கள் அழகாகப் பூத்தது உன்னைப் பார்த்தபோதுதான்!

நீ என்பது நானாகவும்.. நான் என்பது நீயாகவும் காதலில் ஆவது அன்பியலின் ஆராதனை!

அதில் உள்ள சுகம் தனிமை தருவதில்லை! பரஸ்பரப் பரிமாற்றம் மட்டுமல்லாமல்.. ஒருவருக்காக ஒருவர் என்கிற அஸ்திவாரம்!

ஒருநாள் விடிகிறது என்று வைத்துக்கொள்.. துயிலெழுந்தவுடன் முதல் நினைவு உனதல்லவா? அது ஆரம்பம்!

அன்றைய நாள் முழுவதும் இன்பம் வருகிற வழியாக.. இதயம் முழுவதும் அன்புத்தேன் வழிந்தோட.. அடியே உனை நோக்கி நான் ஓடிவருகிறேன்!

அங்கு மட்டும் என்னவாம்! நேர்த்திசையில் நெஞ்சங்கள் கூடிநிற்க.. நினைவலைகள் இன்பராகம் பாடியிருக்க.. அன்பே.. உன் பெயரை ஆசையுடன் நான் கூற.. அத்தான் என்னும் சொல்லை பதிலுக்கு நீ கூற.. புன்னைவன மரநிழலில்.. பூக்கள் கொட்டிய அத்தரையில் வா.. அமரலாம்.. என்றேன்!

தோளிலே சாய்ந்தபடி.. சில்லென்ற நடைபோட்டாய்!

சிங்கார வதனங்கள் ஒன்றா.. இரண்டா.. அதையெல்லாம் கண்ணாலே கண்ணுற்று.. போதையிலே மூழ்கிய எனை உன் மடி சாய்த்தாயடி!

பேசும் விழிகள் தந்தியடித்தன!

அதுதான் வந்துவிட்டேனே.. இன்னுமென்ன.. நான் என்ன உங்களின் கைகளுக்கு வீணையா என்று வாய்மொழிந்தாய்!

முன்மொழிந்த அந்தசுகம் பெண்மையிடம் எங்குவரும் என்று எதிர்கேள்வி கேட்டேன்! ஆராய்ச்சியெல்லாம் நீங்கள் நடத்துங்கள் என்றாய்!

விரல்கள் ஸ்வரங்கள் தேடின! மோகங்கள் மூழ்கலாயின! முத்தங்கள் முதலில் தோன்றின!

சத்தமில்லாத சங்கேத பாஷைகள் அங்கே அரங்கேறின!

‘ம்’ எனும் உந்தன் பின்னணி என்னை முன்னணிக்கு வரச் சொன்னது! கவிதை ஒன்று சொல்லடா என்று ஆசையாய் நீ கேட்டாய்!

இப்போதைக்கு உன் பெயர்தான் என் கவிதை என்றேன்!

அதை உச்சரிக்கிறேன் உள்ளத்தால் உணர்ந்துகொள் என்றேன்! இமைகள் மூடித்திறக்க.. இதழ்கள் கூடித்திறக்க.. இதயம் நாடுவதைப் பார் என்றேன்!

ஆம் என்று அழுத்தமாய் சொன்னாய்!

இதயக்கோலங்கள் இன்பவேதங்கள் இவையே காதலெனும் புதிய அகராதியை எழுதிக்குவித்தன!

காலம் இப்படியே இருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது கண்ணே.. கற்பனை கலக்காமல்.. காதலியே உன்னை அணைத்திருக்கும் திருநாள் ஒன்றே நான் விரும்புகிறேன்!

சத்தியமாய் உனக்காக நித்தமும் நான் காத்திருப்பேன் என்று கட்டியணைத்துக் கூறினாய்! மீட்டிய ராகங்கள் மீளாத இன்பத்தில் நமை சாய்த்தன!