
கடந்த சில நாட்களுக்கு முன், மும்பையில் செயல்படும் ஐசிஎம்ஆர் எனும் தேசிய இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், ‘உலகிலேயே பாம்பு கடியால் இறப்பவர்களில் பாதிப் பேர் இந்தியர்களாக உள்ளனர். 2000 ம் வருடம் முதல் 2019-ம் ஆண்டுகளில், இந்தியாவில் சுமார் 28 லட்சம் பேரை பாம்பு கடித்துள்ளது. இதில் 12 லட்சம் பேர் பாம்புக் கடியால் இறந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக 58 ஆயிரம் பேர் வரை பாம்பு கடியால் இறக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், கால்நடை மேய்ப்பவர்கள், பாம்பு மீட்பவர்கள், பழங்குடியினர், தொலைதூர பகுதிகளில் வாழும் மக்கள் அடங்குவர். மேலும் ஒருவரை பாம்பு கடித்துவிட்டால், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல் மூடநம்பிக்கை, விழிப்புணர்வு இல்லாமை, முதலுதவி கிடைக்காத காரணத்தால் பலர் இறந்துள்ளனர்.
2020-ம் ஆண்டு, ஜூலை மாதம் வரையிலான கணக்கெடுப்பில், கடந்த ஓராண்டில் பாம்பு கடித்து இறந்தவர்களில் 94% பேர் இந்திய கிராமப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள். இதில் பாம்பு கடியால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத் என 8 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. மொத்த இறப்புகளில் 70% பேர் மேற்கண்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதில் உ.பி-யில் மட்டும் அதிகபட்சமாக 8,700 பேர் பாம்புக் கடியால் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்து ஆந்திராவில் 5,200 பேர், பீகாரில் 4,500 பேர் உயிரிழந்தனர். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பாம்புக்கடி சம்பவங்களில் அதிகமாக நிகழ்ந்துள்ளன…’ என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பொது சுகாதார நிபுணர்கள் கூறுகையில்...
‘‘கிராமப்புறங்களில் பெரும்பாலான ஆரம்ப சுகாதார மையங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கு போதுமான வசதி இல்லை. உலகில் 26 ஆயிரம் பாம்பு இனங்களில் 270 வகையான பாம்புகள் மட்டுமே மனிதர்களுக்கு மரணத்தை விளைவிக்க முடியும். அதிலும், 25 இனங்கள் மனிதனுக்கு மரணத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். இந்தியாவில் 15 வகை பாம்புகள் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை. மற்றவை விஷத்தன்மை கொண்டது அல்ல. பாம்பு கடித்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவேண்டும்…’’ என நிபுணர்கள் தெரிவித்தனர்.

Leave a comment
Upload