தொடர்கள்
கதை
கொஞ்சம் மிருகம்... - கி. ரமணி

20210727143554146.jpeg

அட்லாண்டாவில் இருந்து என் நெருங்கிய நண்பன் ராஜசேகர் போன வாரம் போன் பண்ணியிருந்தான்.

விஷயம் இதுதான்....

அவன் சித்தி சாந்த லட்சுமிக்கு எழுபத்தெட்டு வயதாகிறது. ஞாபக சக்திசற்று குறைந்தவர். திருமணமாகவில்லை. போன வருஷம் வரை தன் தமக்கையும் ராஜசேகரனின் பெரியம்மாவும் ஆன ராஜலட்சுமியுடன் சென்னையில் வசித்து வந்தார்.

ராஜலட்சுமியும் திருமணமாகாத ரிட்டையர் ஆன பௌதிக பேராசிரியர்.
தன் எண்பதாவது வயதில் சமீபத்தில் ராஜலட்சுமி இறந்து விட்டார். வீடு இருக்கிறது. பணமும் ஓரளவு இருக்கிறது.

ஆனால் சாந்தலட்சுமியை யார் இனிமேல் கவனிப்பது.? ராஜசேகரின் பெற்றோரும் உயிருடன் இல்லை. கொரோனோ காலத்தில் அவனால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வர இயலவில்லை.

தற்போதைக்கு வீட்டு வேலை செய்யும் பெண்மணி கவனித்துக்
கொண்டிருக்கிறார். இது எவ்வளவு நாள் தாங்க முடியும்.

“பேசாமல் அசிஸ்டட் சீனியர் சிட்டிசன் ஹோம் எதிலாவது சேர்த்து விடலாமே” என்றேன்.

“சரி தான். நானும் விசாரித்துப் பார்த்து விட்டேன். இதில் தான் எனக்கு ஒரு உதவி தேவை. அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்ப்பது அவசியமாக இருக்கிறது.

சென்னைக்கு அருகாமை என்றால் வசதி. எனக்கு உன்னைத் தவிர வேறு யாருமில்லை. சென்னைக்குப் பக்கத்தில் நல்ல உதவி அமையப் பெற்ற முதியோர் இல்லமாக ஒன்றைக் கண்டுபிடித்து என் சித்தியை அதில் சேர்க்க வேண்டும். கொரோனா காலத்தில் இது கஷ்டம்தான். இருந்தாலும் எனக்காக இதை செய்வாய் என்று நம்புகிறேன்” என்றான்.

“சரி” என்றேன்.

“ரொம்ப அதிகமாக செலவு செய்ய முடியாது. ஃபைவ் ஸ்டார் எல்லாம் வேண்டாம். மீடியம் பட்ஜெட். சௌகரியமாக இருக்கணும். அவ்வளவு தான். பார்த்துக்கொள். உனக்கான செலவுகளை நான் கொடுத்து விடுகிறேன். கொரோனா குறைந்ததும் அங்கு வருகிறேன்” என்றான்.

“நான் தேடிப்பார்த்து, நல்ல இடமாய் சேர்த்து விடுகிறேன். முடிந்த போதெல்லாம் போய் பார்த்தும் வருகிறேன். என் செலவுகளைப் பற்றி கவலைப்படாதே” என்று சொல்லி விட்டு தேட ஆரம்பித்தேன்.

நிறைய இடங்கள் ஸ்க்ரீன் செய்தபின்... மூன்று இடம் தான் தேறியது.

பூந்தமல்லி பக்கமிருந்த ஒரு இல்லத்தில் - கொரோனா நேரத்தில் ஒன்றும் செய்வதற்கில்லை. புது அனுமதி கிடையாது - என்று கறாராக சொல்லி விட்டார்கள்.

நீலாங்கரையில், - உதவிக்கு ஆள் தற்போது போதுமானதாக இல்லாததால், சிறிது நாட்கள் ஆகும் என்றார்கள். புது அனாதை இல்லத்துக்கு முடிந்தால் டொனேஷன் கேட்டார்கள்.

செங்கல்பட்டு பக்கம் ஸ்ரீ கிருபா என்று ஒரு இல்லம் இருப்பதாகவும், நன்றாக செயல் படுவதாகவும் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு தேடியபோது, தொலைபேசி எண் கிடைத்தது. மன நலம் குன்றியவர்களுக்கும், வயது முதிர்ந்தோர்க்கும் அங்கு தனித்தனியாக இல்லங்கள் இருப்பதாக சொன்னார்கள். போன் செய்தேன்... காலை மணி பத்து இருக்கும்.

போனை மறுபக்கம் எடுத்தது ஒரு பெண். நளினமான ஆங்கிலத்தில் பேசினாள்.

“உங்களுக்கு என்ன வேண்டும். நான் டாக்டர் க்யூரி பேசுகிறேன்.”

“குட் மார்னிங் டாக்டர். நான் ஒரு ரிடயர்ட் என்ஜினீயர். என் உறவுக்காரப் பெண்மணிக்காக பேசுகிறேன். அவருக்கு வயது எழுபத்தெட்டு. சில மாதங்களுக்கு முன்பு அவரது துணையாகக் கூட இருந்த அவரது சகோதரி” என்று சொல்லிக் கொண்டு போனேன்.

“சார். வள வள என்று நீட்டிக் கொண்டே போகாமல், விஷயத்தை டக்கென்று என்று சொல்லுங்கள். எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.”

“... ம்ம் வந்து மேடம்.... அந்தப் பெண்மணியை உங்கள் இல்லத்தில் சேர்க்க எண்ணுகிறேன். அதுபற்றி....”

“மனநல காப்பகமா, முதியோர் இல்லமா...”

“மேடம்.. அந்த அம்மாளுக்கு கொஞ்சம் ஞாபக சக்தி குறைவு என்பதைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும்....”

“சார். யு ஆர் பீட்டிங் அரௌண்ட் தி புஷ். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. எங்கள் அண்ணாநகர் ஆஸ்பத்திரியில் கன்சல்ட் செய்யுங்கள்.”

“சரி மேடம்... போன் நம்பர்... பெயர்” என்று இழுத்தேன்.

கூகுளில் பாருங்கள் என்று போனை வைத்து விட்டாள்.

எனக்கு ரொம்ப கடுப்பு தான். ஆனால் என்ன செய்ய. நண்பனுக்கு உதவ வாக்கு வேறு கொடுத்தாச்சு. இந்த மாதிரி மனிதர்களை மேனேஜ் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

அந்த லேடி டாக்டருக்குத் தான் எவ்வளவு அரோகன்ஸ். கொடுங்கோலரான டீச்சர் தன் வகுப்பில் பயந்த மக்கு மாணவனிடம் காட்டுவது போல் ஒரு காட்டம். சே!

ஸ்ரீ கிருபா என்ற இல்லத்தின் பெயரில் ஆஸ்பத்திரி இருக்குமோ என்று தேடிப்பார்த்தேன்.

கடைசியில் அண்ணாநகரில் ஒரே ஒரு ஸ்ரீ கிருபா தான் இருந்தது. பேசியதில் அது ஒரு பல் மருத்துவமனை என்று புரிந்தது. செங்கல்பட்டுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி விட்டார்கள்.

மறுநாள் செங்கல்பட்டு இல்லத்துக்கு போன் பண்ணி மீண்டும் அண்ணா நகர் நம்பர் / அட்ரஸ் கேட்கலாம் என்று தோன்றியது.

மறுபடியும் அந்த சிடு சிடு பெண் டாக்டரிடம் எப்படிப் பேசுவது என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது. மனைவியிடம் கெஞ்சி விஷயத்தை சொல்லி அந்தப் பெண்ணிடம் பேச வைக்கலாம். பெண்ணுக்கு பேயே
இரங்கும் பட்சத்தில், ஒரு பெண் டாக்டர் இரங்க மாட்டாளா? என்று தோன்ற மனைவியிடம் விண்ணப்பித்தேன்.

என் அதிர்ஷ்டம் ஒப்புக்கொண்டு மனைவி போன் செய்தாள்.

ஸ்பீக்கரில் போட்டாள்...

எடுத்தது வழக்கம்போல அந்த டாக்டர் கியூரி தான்.

“டாக்டர் க்யூரி.... ம்ம்.. என்ன வேண்டும்” என்றாள் ஆங்கிலத்தில்.

“ஒண்ணும் இல்ல. என்னோட ரிலேடிவ் லேடி, எழுபத்தெட்டுவயசு ஆறது......”

“இதைப்பற்றி நேத்து ஒருத்தர் பேசினாரே அதே கேஸா..”

“ஆமாம் டாக்டர்.. வந்து”

“என்ன வந்து, போயி? அதான் க்ளியரா சொல்லியிருக்கிறேனே நேத்து. அண்ணா நகர்ல கான்டாக்ட் பண்ண சொல்லி.”

“பண்ணிட்டோம் மேடம் ஆனா இந்த மாதிரி முதியோர் இல்லம் இல்லை. அது ஒரு பல் மருத்துவமனை....”

“உங்களுக்கு கூகுள்ள சரியா தேட தெரியலை. இதெல்லாம் நான் தான் உங்களுக்கு கத்துக்கொடுக்கணுமா?”

“இல்ல மேடம்... அந்த போன் நம்பர், அட்ரஸ் மட்டும் கொடுத்தீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்.”

“யூ ஷுட் நோ தட் ஐ அம் வெரி பிஸி. எனக்கு ஹோம் நிர்வாகம் தவிர வேற முக்கியமான ரிசர்ச் வொர்க்கும் இருக்கு.”

“மேடம்.. ப்ளீஸ்... ப்ளீஸ்.. மேடம்.....” சரணாகதித் தத்துவத்தைப் பிரயோகித்தாள்.

பேய், புளியமரம் விட்டு கொஞ்சம் இறங்கின மாதிரி தான் தோன்றியது.
‘இரங்குமா’ என்பது இன்னும் நிச்சயமா தெரியவில்லை.

“சரி.. சரி... திருப்பித் திருப்பி போன் பண்ணாதீங்க. நான் சொல்ற அட்ரஸை ஒழுங்கா எழுதிக்குங்க.”

டாக்டர் ஹேமா, எம்பிபிஎஸ். எம். டி, சைகியாட்டரி என்று பெயர், டிகிரி எல்லாம் சொல்லி அட்ரசும், போன் நம்பரும் சொன்னாள்.

அவசர அவசரமாக எழுதிக் கொண்டேன்.

“போன்ல டாக்டர் ஹேமா கிடைக்க மாட்டாங்க. டாக்டர் ரொம்ப பிசியானவர். நேர்ல பேஷண்ட்டைக் கூட்டிக்கொண்டு போய்.....”

“பேஷன்ட் இல்ல மேடம்.... வயதானவர்..”

“குறுக்க பேசாதீங்க. யாரா இருந்தாலும் சரி. அவரை கூட்டிக்கொண்டு போய் டாக்டர் ஹேமா கிட்ட காட்டுங்க. அவர் ஒப்புதல் பண்ணாதான், இங்க சேர்க்க முடியும். ஹேமா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனவர். சீக்கிரம் செய்யுங்கள். அடிக்கடி அனாவசியமா எனக்கு போன் செய்ய வேண்டாம்.”

போனை துண்டித்து விட்டாள். அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள் மனைவி.

மனைவியிடம் பேசிய பின் முடிவு செய்தேன்...

“பாவம், ராஜசேகருடைய சித்தியை இதற்கெல்லாம் அலைக்கழிக்க வேண்டாம். நான் போய் முதலில் அந்த டாக்டர் ஹேமாவைப் பார்த்துப் பேசறேன். ஹும். இவளே இப்படி என்றால்... அந்த ஹேமா எப்படி இருக்கப் போகிறாளோ? முன்ன பின்ன இந்த மாதிரி வேலை எல்லாம் செய்து எனக்கு அனுபவமும் இல்லை” என்று சொல்லி அடுத்த நாள் அண்ணா நகர் சென்றேன்.

அரை மணி தேடலுக்கு பிறகு, இடத்தை கண்டு பிடித்தேன். தனி வீடு. பெரிசு. கொஞ்சம் பழசு. வாசலில்...

டாக்டர் ஹேமா MBBS M.D. (psychiatry) என்ற போர்டு.
கன்சல்ட்டிங் டைம் 10 am to 6 pm.
ஞாயிறு விடுமுறை என்று எழுதி இருந்தது.

வெளி கேட் திறந்து, உள்ளே வராண்டா சென்று வீட்டு வாசல் கதவை தட்டினேன்.

கொஞ்ச நேரம் திறக்கவேயில்லை...
வாசலில் ஒரு டாக்டரின் பயிற்சி செய்யும் மருத்துவமனைக்கான அடையாளம் எதுவும் இல்லை. ஒரு பேஷன்ட்டோ உதவியாளரோ கூட இல்லை. ஒரு நாற்காலி கூட கிடையாது. ஐந்து நிமிடங்கள் சென்றன.

உள்ளே இருந்து எந்த சப்தமும் இல்லை. ஒரு வேளை வீட்டில் யாரும் இல்லையோ? அப்புறம் வரலாம் என்று முடிவு பண்ணி திரும்பும் போது, கதவு திறந்து ஒரு பழுத்த முதியவர் வெளியே வந்தார்.

“என்ன வேணும் உங்களுக்கு?”

“டாக்டர் ஹேமாவை பார்க்கணும்.”

“முடியாது. ஹேமா ப்ராக்டிஸ் பண்ணறதில்லை இப்போ.”

“சார்.... நீங்க?”

“ஹேமாவோட தாத்தா.”

“டாக்டர் க்யூரி தான் செங்கல்பட்டுல இருந்து பேசி, இந்த அட்ரஸ் குடுத்து டாக்டர் ஹேமாகிட்ட பேச சொன்னாங்க.”

“எனக்கு க்யூரியும் தெரியாது, டொமெட்டோ ப்யூரியும் தெரியாது.”

“டாக்டர் ஹேமா எங்க இருப்பாங்க, சொல்லுங்க சார். அவங்களுக்கு நிச்சயம் தெரியும்.”

“இங்க ஹேமா இல்லை” என்று கூறி கதவை சாத்தி விட்டார்.

ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பின்... மனைவியுடன் பேசி இருவரும் மறுநாள் நேராக செங்கல்பட்டு இல்லம் சென்று, அந்த இல்லத்தின் தலைவரையே பார்ப்பது என்று முடிவு செய்தோம்.

காரில் சென்ற போது, கூகிள் மேப்... ஸ்ரீ கிருபா காப்பகத்துக்கு, குழப்பாமல் சமத்தாக வழி காட்டியது எங்கள் பெரிய பாக்கியம்.

உள்ளே லேசில் நுழைய முடியவில்லை. செக்யூரிட்டியிடம் காப்பகத் தலைவரைப் பார்க்க வேண்டுமென்றும் எங்கள் உறவினரை சேர்ப்பதற்காக என்றும் கூறினோம்...

“கொரோனா நேரத்தில் யாரையும் உள்ளே விடுவது இல்லை சார்” என்ற போது அவர் கையில் 50 ரூ வைத்தேன். கையை மூடியபடி... “இருந்தாலும் உள்ளே சென்று கேட்டு விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு செக்யூரிட்டி சென்றார்.

ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்து காரை உள்ளே அனுமதித்தார். ரிசப்ஷனுக்கு சென்று கேட்கச் சொன்னார்.

டாக்டர் க்யூரி மட்டும் ரிசப்ஷன் பக்கத்தில் இருந்து விடக்கூடாதே என்று பிரார்த்தித்துக் கொண்டே உள்ளே சென்றோம். அங்கு ஒரு வயதான ஆண், வழுக்கைத் தலை, காவி வேஷ்டியுடன் இருந்தார்.

“என்ன வேணும் சொல்லுங்க சார். என் பெயர் ராகவன் - மேனேஜர்” என்றார்.

விஷயத்தைக் கூறி காப்பக தலைவரைப் பார்க்க வேண்டுமென்றோம். போனில் யாரிடமோ பேசினார். பின் ஒரு அறையை காட்டி “செகரட்டரி அம்மா ரூம்” என்று சொல்லி உள்ளே செல்லச் சொன்னார்.

எங்கள் கையில் சானிடைசரை, கல்யாண ரிசப்ஷன் வாசலில் காண்ட்ராக்டரின் பெண் அலுவலர் பன்னீர் தெளிப்பது போல், லேசாக தெளித்து உள்ளே அனுப்பி வைத்தார்.

ரூமுக்குள் சென்றோம்....

வெள்ளைப் புடவை, முகக் கவசம் அணிந்த வயதான அம்மாள் எழுந்து வந்து எங்களை வரவேற்றார். ஞாபகமாக சமூக இடைவெளி காத்தார். உட்காரச் சொன்னார்.. எங்கள் பேர், ஊர் கேட்டார். பின்னர் “ஐ அம் பானுமதி” என்றார்.

வந்த விஷயத்தை சுருக்கமாக சொன்னோம்....

அந்த அம்மாள் பானுமதி, மலையாள உச்சரிப்பில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் கலந்து மணிப்பிரவாளமாகப் பேசினார்.

ஏன்... தங்கள் முதியோர் காப்பகம் தான் சென்னையில் மிகச் சிறந்தது என்று விளக்கினார். உடம்பு முடியாத முதியோருக்கு உதவி செய்ய தனியாக பணியாளர் உண்டு என்றார். உணவு, சுற்றுச்சூழல், மருத்துவ வசதி, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, மத வழிபாடு போன்றவற்றில் அங்குள்ள சிறப்பான அம்சங்கள் பற்றி விளக்கினார்.

ஒவ்வொரு மாடியிலும் ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்காலி, பிராணவாயு வசதிகள் உண்டு, ஒரு அனுபவமுள்ள டாக்டர் தினமும் வருவார் என்றார்.
முதியோர் பாதுகாப்புக்காக தாழ்ப்பாள் அற்ற கதவுகள், வழுக்காத பாத்ரூம் தரை, உள்ளது பற்றிக் கூறினார்.

கொரோனோ தடுப்பு ஏற்பாடுகள் பற்றி விளக்கினார். மூன்று கிலோமீட்டருக்குள் ஒரு பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ஏகப்பட்ட வெண்டிலேட்டர் வசதியுடன் இருப்பதையும் நினைவூட்டினார்.

போன், லேப்டாப், டிவி போன்றவற்றை உபயோகிக்கலாம் என்றும் தங்கள் wi-fi அந்தப் பிரதேசம் முழுவதும் மிகுந்த சக்தியுடன் வியாபித்து இருப்பதையும் விவரித்தார்.

மாசத்துக்கு முப்பதாயிரம் ஆயிரம் ரூபாய் பிளஸ் ஒரு லட்ச ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட் என்றும் சொன்னார்.

பக்கத்து காம்பவுண்டில் இருப்பது அவர்களது மனநோய் காப்பகம் என்றும் அங்கும் சிலர் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்.

கடைசியில் “முன்பே எங்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் வரும் நாளைக் கூறியிருந்தால், ஸ்பெஷலாக உங்களைக் உள்ளே கூட்டி செல்ல ஏற்பாடு செய்திருக்க முடியும். இன்று நீங்கள் உள்ளே சென்று பார்க்க இயலாது, கொரோனா பாதுகாப்பு
காரணமாக” என்றார்.

“ரொம்ப நன்றி அம்மா. எங்களுடன் நேரம் செலவழித்ததற்கு. ஆனால், இப்படி முன்னறிவிப்பு இல்லாமல் நாங்கள் வர வேண்டியதற்கு காரணமே உங்கள் டாக்டர் ஒருவர் தான்” என்று என் மனைவி தடால் என்று சொல்லிவிட்டாள்.

“அப்படியா புரியலையே” என்றார் செகரட்டரி அம்மாள்.

நான் விளக்கினேன்....

ஒவ்வொருமுறை நான் இங்கு போன் செய்து விவரங்கள் அறிய முயன்ற போதும், உங்கள் டாக்டர் க்யூரி தான் போனில் காரமாகப் பேசி தவறாக வழி காட்டிவிட்டார். அவருடன் பேசுவதற்கே பயமாக இருக்கிறது” என்று கூறினேன்.

“அப்படி ஒரு டாக்டர் இங்கு கிடையாதே? தவிர ரிசப்ஷனிஸ்ட் தானே போனை எடுப்பாள்” என்று அதிர்ச்சி ஆன பானுமதி பின், “மேனேஜர்” என்று உச்ச ஸ்தயியில் அழைத்தார்.

ரிசப்ஷனில் இருந்த ராகவன் அரக்கப் பரக்க உள்ளே ஓடி வந்தார்.

“யாரு சார் இவங்களோட இரண்டு நாள் முன்ன நம்ம போன்ல பேசினது.”

“நான் இல்லை மேடம்” என்றவர், பின் யோசித்து...

“நம்ம மன நல காப்பகத்திலே போன மாசம் சேர்ந்த அந்தப் பொண்ணு தான் இரண்டு நாளா ரிசப்ஷன் டேபிள்கிட்ட உட்கார்ந்து கொண்டிருந்தது. நான் இல்லாத போது அது ஒருவேளை கால் எடுத்திருக்கும்.”

மேடம் கடுப்பாகி... “என்ன சார்... இப்படி எல்லாம் நாம அலோ பண்ணலாமா?”

“சாரி மேடம். ரெண்டு நாளா நான் காப்பகம் உள்ளே பிஸி. ரிசப்ஷனிஸ்ட் வேற ஒரு வாரம் லீவு போட்டுட்டா. பாதி பேருக்கு மேல கொரோனாவால வரலை.”

“சரி.. சரி.. இனிமே ஜாக்ரதயா இருங்க” என்ற மேடம் எங்களைப் பார்த்து...

“சாரி சார். அந்தப் பெண் ஒரு மாதமாக எங்கள் ஸ்பெஷல் மெடிக்கல் கேரில் இருக்கிறாள். மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்னு சொல்றாங்களே... அப்படிப்பட்ட ஒரு மன நோயாளி. ஒங்க தமிழ் அந்நியன் பட விக்ரம் போல. சில வேளைகளில் தன்னை வேறு ஒருவராக நினைத்துக் கொண்டு விடுகிறாள்.. தான் தான் ரேடியம் கண்டுபிடித்த, இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற மேரி க்யூரியின் மறுபிறவி என்று சொல்வாள். கதிர் இயக்கமுள்ள மூலகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து, மூன்றாவது நோபல் பரிசு பெறப் போவதாக வேறு சொல்லிக் கொண்டிருக்கிறாள்” என்று சிரித்தாள்.

“ஆனால், மறுபடியும் சில நேரம் கழித்து நார்மல் ஆகிவிடுவாள். அவள் முன்பு சொன்னது, செய்தது எதுவும் அவளுக்கு ஞாபகம் இருக்காது.
ஆனால், அது எப்போ நார்மல் நிலைக்கு வரும், எப்போ திரும்ப மாறும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனா பாவம் தங்கமான பொண்ணு சார்.”

எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது.

“ரேடியமான பொண்ணுன்னு சொல்லுங்க. ஒருவேளை ஒரிஜினல் மேரி கியூரியும் அந்தக் காலத்தில் இப்படித்தான் இவள் மாதிரி காரணமில்லாம எல்லாரிடமும் எரிச்சலாக, கோபமா பேசி இருப்பா போலிருக்கிறது.

சரி. ஆனால், இந்தப் பெண் என்னிடம் டாக்டர் ஹேமா என்ற மன நோய் மருத்துவரின் விலாசம் எல்லாம் கொடுத்தாளே. ஏன்? விலாசம் சரி தான். ஆனால், அந்த ஹேமா தான் அங்கே இல்லை” என்றேன்.

“எப்படி அங்கே இருப்பாள். இவள் தானே டாக்டர் ஹேமா!” என்று சிரித்தார் பானுமதி அம்மாள்.

அப்படியா என்று ஆச்சர்யமடைந்தேன்.

ஆமாம் சார், எம்டி சைக்கியாட்ரி முடித்து ப்ராக்டிஸ் ஆரம்பித்து நன்றாக செய்துகொண்டிருந்த ஹேமாவுக்கு, இந்த மன நோய் சமீபத்தில் தான் ஏற்பட்டது.

இதை Dissociative Identity Disorder (DID) என்று, சிக்கலான வேறு ஒரு பேரிலும் சொல்கிறார்கள். பொதுவாக ஒரு பெரிய அதிர்ச்சிக்குப் பின் அந்த மோசமான ஞாபகங்களை மறக்கடிக்க, ஒருவரது ஆழ்மனது செய்யும் வேஷ மாற்றங்கள் என்று இதை எளிதாக புரிந்து கொள்வதற்காகக் கூறலாம்.

ஆறு மாதம் முன்பு அவளுடைய தந்தை தாய் இருவரும் ஒரே வார இடைவெளியில் கொரோனவால் மரணமடைந்த சோக நிகழ்வு மற்றும் அதன் தாக்கம், இதற்குக் காரணமாயிருக்கலாம். பெண்களுக்கு அதிகமாக ஏற்படுவது இது. ஆனால் அபூர்வமானது.

இப்போது சில சமயங்களில் அவளாகிய ஹேமாவை வேறு ஒருத்தியாக, தன் தோழியாக, சிறந்த மனநல மருத்துவராக நினைத்துக் கொள்கிறாள்.
ஆனால், தன்னை மேடம் க்யூரியாக எண்ணுகிறாள்.

சீக்கிரம் குணம் அடைவாள் என்று எந்த கேரன்டீயும் இதற்கு இல்லை. சிறந்த சைக்கியாட்ரிஸ்ட்கள் உதவியுடன் சிகிச்சை கொடுக்கிறோம். பிரார்த்திக்கிறோம். அவ்வளவு தான்.

அவளுடைய தாத்தா தான் அவளுடைய ஒரே உறவினர் மற்றும் கார்டியன்.

“ரொம்ப சாரி... கேட்கவே ரொம்ப பாவமா இருக்கு..” என்ற நான்...

“ஹேமாவை நாங்கள் ஒரு முறை பார்க்கலாமா” என்றேன்.

“ஒய் நாட்” என்ற மேடம்... மேனேஜரிடம், ஹேமாவை அழைக்கச் சொன்னார்.

ஐந்து நிமிடங்களில் அழகாக அமைதியாக ஹேமா வந்தாள். முப்பது வயதுக்குள் இருக்கவேண்டும்.. வசீகரமான சிரிப்பு.

“இவங்க என் பிரண்ட்ஸ்” என்று எங்களை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள் பானுமதி அம்மாள். ஹேமா கை கூப்பினாள்.

“ஹலோ. இரண்டு நாள் முன்பு நான் உங்களுடன் போனில் பேசினேன், என் எழுப்பத்ததெட்டு வயது சித்தி பற்றி. ஞாபகம் இருக்கா” என்றாள் என் மனைவி.

புன்னகையுடன் மறுத்த ஹேமா....
“அப்படி எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையே. நீங்கள் இங்கு வேற யாருடானாவது பேசி இருப்பீங்க. எனி வே, வெரி நைஸ் மீட்டிங் யூ ஆன்ட்டி” என்றாள்.

“உங்கள் பிரண்ட் டாக்டர் ஹேமாவை எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றேன்.

“என்ன, ஜோக் அடிக்கறதா நினைப்பா அங்கிள். ஐ அம் டாக்டர் ஹேமா என்று சிரிப்புடன் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

ஒரு நிமிஷம் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

பின் மனைவி சொன்னாள்...
எங்கள் சித்தி சாந்த லட்சுமி இங்க தான் வந்து இருக்காப்போறாங்க. நீ தான்மா கொஞ்சம் பர்சனலா அவங்களை கவனிச்சுக்கணும், ஆஸ் அ டாக்டர்.”

“அஃப் கோர்ஸ் ஆன்டி, நிச்சயமாக. என் நினைவில் அவர் பெயரை வைத்துக் கொள்ளுகிறேன். எப்பொழுது வருகிறார்கள் என்று எனக்கு அப்புறம் சொல்லுங்கள்” என்று கண்களில் உண்மை நிரம்பி வழிந்து பளபளக்கக் கூறினாள்.

பின் தனியாக பானுமதி அம்மாள் அருகில் சென்று, ஹேமா மெதுவாகப் பேசியது என் மனைவியின் பாம்புச் செவிக்கு கேட்டு விட்டது.

“மேடம். இந்த அங்கிள், ஆன்ட்டி இரண்டு பேர்க்கும் சைக்கியாட்ரிக் பிராப்ளம் எதுவும் இல்லை தானே? பின் ஏன் இப்படி கொஞ்சம் குழப்பமா பேசறாங்க? அப்படி ஏதாவது இருந்தா என்கிட்ட தயங்காமல் சொல்லுங்க. ஐ மே பி ஆப் சம் ஹெல்ப். பார்த்தால் பாவமா இருக்கு” என்றாள் ஹேமா.

சாந்தலட்சுமியை அடுத்த முறை அழைத்துக் கொண்டு வந்து விடுவாதாக பானுமதி அம்மாளிடம் கூறிவிட்டு, வீட்டுக்கு காரில் செல்லும்போது மனைவி...

“இனிமே மாசம் ஒரு தடவை இங்கு வந்துட்டு போகலாம். சாந்த லட்சுமி சித்திக்காக மட்டும் இல்லை. இந்தப் பொண்ணு ஹேமாவுக்காகவும் தான்” என்றாள்.

சரி என்று அமோதித்தேன்.

எப்எம் ரேடியோவை ஆன் செய்தேன். பாட்டு மிதந்து வந்தது.

“கொஞ்சம் மிருகம்... கொஞ்சம் கடவுள்...
ஒன்றாக சேர்த்தால் எந்தன் நெஞ்சம்......”