தொடர்கள்
தொடர்கள்
பெண் மனதை பேணிக்காப்போம்... - 25 - சுபஸ்ரீ

2021072522455501.jpg

சகோதரிகளே!

சொல்வதிலிருந்தே காயம் ஆறுதல் துவங்குகின்றது.

ரெனே ரோமனோ ஒரு பேச்சாளர், சமூக நல போராளி, குறிப்பாக சிறுவயது பாலியல் கொடுமைக்கு ஆளாகி மீண்டவர்கள் குரலாக ஒலிப்பவர்.. தானே ஒரு பாதிப்படைந்தவராக இருந்தபோதிலும், தன்னுடைய மீட்பு நிகழ்ந்தது எவ்வாறு என்பதை விளக்கி கூறுகிறார். அதன்முலம் ஏராளமான பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கையளித்து, அவர்களை தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தவைத்து, அதன் மூலம் அவர்களின் மீட்பிற்கான பயணத்தை துவங்கச் செய்கிறார்.

அவர் பல முறை யோசித்து பின் வாங்கிய பிறகு, ஒரு நாள் தற்கொலை உதவி ஹெல்ப் லைனை அழைக்கிறார். எதிர்முனையில் பேசியவர் மிக பொறுமையாக, இடைமறித்து கேள்விகள் கேட்காமல், நம்பிக்கையளித்து இவரை பேசவைக்கிறார். இவரின் கதை முழுவதையும் கேட்கிறார். முடிவில் இவருக்கு வாழ்த்து சொல்கிறார். “கங்கிராஜுலேஷன்ஸ்! நீங்க இதை வெற்றிகரமா கடந்து வந்துருக்கீங்க”. இந்தப் பாராட்ட அவங்க எதிர்பாக்கல. இப்படி அவர் சொன்னது, இவங்க மனசுல பெரிய ஆறுதலை தந்துச்சி. தற்கொலை முயற்சியை கைவிட்டாங்க, கவுன்சிலிங்க்கு போனாங்க. அவருடைய தன்னபிக்கையும், தைரியமும் அதிகமாச்சு. அடுத்தவங்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். அவங்களோட அம்மா, கூட பொறந்தவங்க, அவருடைய கணவர் எல்லாரும் அவர் பின்னாடி இருந்தாங்க. அவர் உதவி கேட்டார். அதன் மூலம் வாழ்க்கையில் இந்த அதிர்ச்சியின் தாக்கத்தையும் மீறி ஜெயிச்சார்.

அவர் சொல்வது என்னன்னா... ஒரு வருஷத்துல இந்தியா முழுவதும் பதிவாகும் பாலியல் துன்புறுத்தலுக்கான வழக்குகளை விட, இரு மடங்கு அதிகம் பதிவாகாம கைவிடப்படுற, மறைக்கப்படுகிற வழக்குகள்.
இவர் மேலும் சொல்வது என்னன்னா... நிறைய பதிப்படைத்தோர் அமைதியா இருக்கறதுக்கு காரணம்... அதை அவங்க அவமானமா நினைக்கறது தான். இந்த அதிர்ச்சி வெளியிடப்படாமல், உள்ளேயே புதைத்து வைக்கப்பட்டால், அதன் விளைவுகளாக மன நல, உடல் நல பாதிப்புகள் ஏற்படும். அது தீவிரமாக மாறி அவங்களையே சிதைத்து விடும்.

ரெனே பாதிக்கப்பட்டோர் அனைவரையும், தங்கள் கதைகளை சொல்லச்சொல்லி வேண்டுகோள் வைக்கிறார். அவரைப் பொறுத்தவரை, சொல்வதிலிருந்தே காயம் ஆறுதல் துவங்குகின்றது. அவர் தப்பி பிழைத்தவர்களை, உண்மையை எடுத்து சொல்ல சொல்கிறார். அவர்கள் சொல்லும் உண்மை மூலம், மற்ற பாதிக்கப்பட்டோர் பயன் பெற முடியும். உதவி கேட்பதிலும், நம்முடைய உண்மையை சொல்வதற்கும் நமக்கு அவமானம் தேவையில்லை. நமக்கு என்ன நடந்திருந்தாலும் நல்லதொரு, சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்திட நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்கிறார். அவரின் முக்கியமான கருத்தே “சந்தோஷமாயிருப்பதே மிகச்சிறந்த பழிவாங்கல்” என்பது தான். மேலும் மீட்பு குறித்த கருத்துக்கள், சுய பராமரிப்பு பயிற்சிகள், காணொளிகள் பற்றி அறிந்து கொள்ள www.thunai.org இணைய தளத்தை அணுகவும்.