தொடர்கள்
கதை
‘கர்பக்கிரஹம்’ - வெ.சுப்பிரமணியன்

20210727143124763.jpeg

“நினைச்சுப் பார்க்கவே, ஈரக்குலை நடுங்கறது. இந்த சுவாமி சன்னதிக்குள்ளேயே, பிராணன் போகக்கூடாதான்னு ‘பட்டாபி’ கதறும் போது, கர்பக்கிரஹத்திலே, ஆவுடை மேல இருக்கிற லிங்கேஸ்வரரோட கண்களே ஜலப்பிரவாகையா ஆயிடுத்துன்னா பாருங்கோ” என்று மடப்பள்ளியருகே, கூடிநின்ற, ‘அவா’ எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“பட்டாபி மாமா… என்ன ஆச்சு?” என்று சீனு கேட்டான். “இன்னிக்கு காலையிலே, சிவபெருமானோட சன்னிதானத்தை, யாரோ ஒருத்தர் திறந்தார். அலங்காரத்தோட இருந்த லிங்கத்தின்மேல, அப்படியே பாலைவிட்டு அபிஷேகம் செஞ்சார். பார்த்ததும் நான் ஷாக்காயிட்டேன். படிக்கட்டுகிட்டே காவலுக்கிருந்த இரண்டு பேர், சத்தம்போட்டு, ‘என்னை’ உள்ளேயே போகவிடாம விரட்டிட்டா” என்றார் பட்டாபி.

“அங்கே வந்த, நம்ம கோவிலோட ஆஃபீசர், ‘யோவ்… புதுப்பூசாரி’, இனிமே நீதான் அர்ச்சனையும், தீபாராதனையும் செய்யணும். யாராவது கேட்டா… என்னை வந்து ஆஃபீஸிலே பார்க்கச்சொல்லு” அப்படீன்னு சொல்லிட்டு, காவலுக்கு ரெண்டுபேரை நிறுத்திட்டு விருவிருன்னு போயிட்டார்.

“அவர் பின்னாடியே போய் ‘நான்’ ஏன் உள்ளே போகக்கூடாதுன்னு? கேட்க நினைச்சேன். பாழாப்போன சரீரமும், மனசும், ஒத்துழைக்கலே. அதான்… நீங்களெல்லாம் வரட்டும்னு, மன-உளைச்சலோட, இங்கேயே வெயிட் பண்ணறேன்” என்றார் பட்டாபி.

“தீபாராதனையோட தணல்லேயும், சாம்பிராணிப் புகையோட நெடியிலேயும், சுவாமியோட கருவரைக்குள்ளேயே, முக்கால்வாசி ஆயுளைக் கடத்திட்டான் பட்டாபி. இப்பபோய், கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளினா… எங்கே போவான்? இது அதர்மமில்லையா?” என்று விம்மினார், மடப்பள்ளிக் கதவில் சாய்ந்திருந்த பட்டாபியின் தோழர்.

“இன்னிக்கு காலையிலே இருந்து, கோவில் கர்பக்கிரஹத்திலே உள்ளவாளுக்குத்தான் போதாத வேளையா இருக்கு. நீங்க எல்லோரும், இப்படி மடப்பள்ளி வாசலில் நின்னுண்டு, ‘கோஷம்’ போட்டேள்னா, ஆஃபீசர் பார்த்துட்டு, ஏதோ… நான்தான் உங்களைத் தூண்டிவிட்டு, மீட்டிங் போடறேன்னு, என்னையும், வெளியே துரத்திடுவாரோன்னு பயமாயிருக்கு” என்றார் மடப்பள்ளிக்கு உள்ளேயிருந்து, எட்டிப்பார்த்த குப்பண்ணா.

“எதுக்கு ஓய், இப்படி, ஆபீஸரைக் கண்டு வெலவெலத்து போரீர்?” என்று சீனு சொன்னதும், “உனக்கென்னப்பா, கோவிலோட வெளிப்பிரஹாரத்திலே, ஸ்தல விருக்ஷமான, வில்வமரத்து நிழல்லே, அக்கடான்னு போய் உட்கார்ந்துடுவே. எந்த ஆஃபீஸரும் அங்கே வர மாட்டார். அதனால, உன்னை யாருமே டிஸ்டர்ப் பண்ணமாட்டா” என்றார் குப்பண்ணா.

“மடப்பள்ளியிலே இருக்கிற, உம்மையுந்தான் யாரும் கண்டுக்கப் போறதில்லே. நீர் ஏன் அங்கலாய்க்கிறீர்?” என்று குப்பண்ணாவை மடக்கினான், இளவட்டமான சீனு.

“நீ வேறடாச் சீனு… என் தலைக்கு மேலேதான் எப்பவுமே கத்தி தொங்கிண்டிருக்கு. நம்மக்கோவில் ஆஃபீசர் என்னிக்கு வந்தாலும்… சுவாமி சன்னதிக்கு போறாரோ இல்லையோ, மடப்பள்ளியை எட்டிப் பார்க்காம போறதில்லே” என்றார் குப்பண்ணா.

“கோவில் பிரசாதம் ஃபிரீயா கிடைக்குமே. அதனாலதான், அந்த ஆஃபீசர், நம்ம மடப்பள்ளி பிரசாதத்தை, ஒரு பிடி பிடிக்காம போகமாட்டேங்கிறார்” என்றான் சீனு.

“ஆமாண்டா அம்பி… ஒருநாள், நம்மக் கோவில்ல, ‘வெண்பொங்கல்’ பிரசாதத்தை வாங்கி தின்னுட்டு, மடப்பள்ளியோட வாசல்லே நின்னுண்டு, ‘தலைசுத்தறது… வாந்திவரதுன்னு…’ ஒரே கலாட்டா பண்ணிட்டார், அந்த ஆஃபீசர்”.

“அன்னிக்கு, என்னாலதான் பிரசாதம் ‘ஃபுட்-பாய்சன்’ ஆயிடுத்துன்னு, என்னை அடிச்சு கொலையே பண்ணியிருப்பா. நல்லவேளை, பஹவானோட லீலையாலே, அன்னிக்கு, நம்ம மடப்பள்ளிப் பொங்கலை சாப்பிட்ட ‘பக்த கோடிகள்’ யாருக்குமே ஒண்ணும் ஆகலே. “அதனால அன்னிக்கு என் தலை தப்பித்தது” என்று குப்பண்ணா சொல்லி முடித்தார்.

அங்கே கலங்கிய கண்களுடன் வந்தார் ‘அனந்து’. “வாசல்லே இருக்கிற ‘பிள்ளையார்’ சன்னதிக்கு, இன்னியிலிருந்து ஒரு புது அர்ச்சகரை, அப்பாயின்ட் பண்ணிட்டாளாம். இனிமே கருவரைக்குள்ளே நான் காலெடுத்து வைச்சா, விரட்டியடிக்க சொன்னாராம், அந்த ஆஃபீசர்” என்று புலம்பினார் அனந்து.

“ஏங்காணம், உம்மோடது, சின்ன சன்னதிதானே? அங்கே தட்ல, எப்பவாவதுதானே, சில்லறை விழும். அதை ஆபிஸர் ‘அபேஸ்’ பண்ணும்போது, அபசகுனமா கத்தினீரா? உண்மையைச் சொல்லும்… அப்புறம், எதுக்கு உம்மை விரட்டணும்” என்றான் சீனு.

அனந்துவோ, “நான் இருக்கிற சன்னதியோட வாசல்லே, ‘கஜானனன்’ என்று எழுதியிருந்துது. இனிமேல், கடவுளோட ‘நேம்-போர்டு’ சமஸ்கிருதம் கலக்காம, ‘சுத்தத் தமிழில்’ இருக்கணும்னு, அந்த ஆஃபீசர் அவரோட ஜூனியரிடம் சொல்லிட்டு, ஒரு பேப்பரை எடுத்து, “கசானனன்” அப்படீன்னு எழுதி, ‘இப்படி மாத்தி எழுதுன்னு’ சொன்னார். அவர் எழுதினதைப் பார்த்து, சத்தமா சிரிச்சுத் தொலைச்சுட்டேன்”
‘தமிழும்’ தெரியாத, அந்த அசமஞ்ச ஆஃபீசர், “எவண்டா சத்தம் போட்டது…? அந்த நாயைத் தூக்கி வெளியே எறி” அப்படீன்னு சொல்லி, என்னை அந்த சன்னிதானத்தைவிட்டு விரட்டிட்டார்” என்று தேம்பினார் அனந்து.

கொஞ்ச நேரங்கழித்து, ‘முருகன்’ சன்னதியிலிருந்த ‘வைத்தி’, தன் மூக்குப்பொடி நாசியை, துடைத்தபடியே, ‘அவாளோட’ கூட்டத்தில் சங்கமித்தார். “உமக்கென்ன பிரச்சனை?” எனக் கேட்டான் சீனு.
“பிள்ளையார் சன்னதியிலே, ஏதோ கசமுசன்னு சத்தம் வந்தது. உடனே நான், ‘முருகன்’ சன்னதிக்குள்ளே இருந்து வெளியே வந்து, ‘என்ன அனந்து? எதாவது பிரச்சனையான்னு’ கேட்டேன். அனந்துமேல இருந்த கோபத்திலே, அந்த கடங்கார ஆஃபீசர், ‘உங்களையெல்லாம் தூக்கி அடிச்சுருவேண்டா’ அப்படீன்னு கோபமா கத்தினார். பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ண வைச்சிருந்த கொழுக்கட்டையை எடுத்து, ஆத்திரத்தோட என்மேல விட்டெறிஞ்சார். அது என் இடது கால்ல பட்டு, ஒரு விரலே பிஞ்சுபோச்சு. அதான், தாங்கித்தாங்கி நடக்கிறேன்” என்றார் வைத்தி.

காலை மணி பத்தாகியிருந்தது. சன்னிதானத்துக்கு அருகில், நின்றுகொண்டிருந்த அந்தக் கோவிலின் ‘ஆஃபீசர்’, தனது ஜூனியர் ஆஃபீசரிடம், புலம்பிக்கொண்டிருந்தார்.

“பத்து நாளாவே, மேலிடத்து உத்தரவுபடிதான், இந்த கோவில்ல மாற்றங்களை செய்கிறோம். இன்னிக்கு காலையிலேதான், நியூ அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்களை குடுத்தோம். அதற்குள்ளே, சென்னை ஹைக்கோர்ட்டிலே இருந்து, டெல்லி சுப்ரீம்கோர்ட் வரைக்கும், ஒரு கூட்டம் போய், நம்ம மேல வழக்கு போட்டிருக்காங்க”, என்று உரக்கவே சொன்னார்.

அவசரக் குடுக்கையான சீனுவோ, “பட்டாபி மாமா… ஆஃபீசர் சொன்னதைக் கேட்டேளா? பிரஹாரத்தை விட்டு, நம்மவாளை துரத்தின வழக்கு, சுப்ரீம் கோர்ட்டு வரைக்கும் போயிடுத்தாம்” என்று சொல்லவும்...

“சும்மாயிருடா சீனு” என்றார் பட்டாபி.

“நம்ம கோஷ்டியிலேயே, சட்ட நுணுக்கங்களும், விஷய ஞானமும், உலக அறிவும், தெரிஞ்சவர், ‘அம்பாள்’ சன்னிதியிலே இருக்கிற சங்கரன் மாமாதான். அதனால… அவர்கிட்டே, அட்வைஸ் கேட்கலாம்” என்று ஏகமனதாக முடிவெடுத்து, ‘அவா’ எல்லோரும், அம்பாள் சன்னதிக்குப் போனார்கள்.

அம்பாள் சன்னதிக்கு பக்கத்திலே இருந்த மண்டபத்தில் கூடியிருந்த ‘அவா’ மத்தியிலே, ‘அறிவு ஜீவியான’ சங்கரன் மாமா பேச ஆரம்பித்தார்.
“கோவில்ங்கிறது… ஜனங்களோட நம்பிக்கையின் அஸ்திவாரம். ஆயிரம் வருஷமா அப்படியே ஃபாலோ பண்ணிண்டுவர ‘கோவிலோட சம்பிரதாயங்களை’, இஷ்டத்துக்கு மாத்தக்கூடாதுன்னு ‘அரசியல் அமைப்புச் சட்டமே’ சொல்லறது.”

“மனித உடம்பிலே எல்லா உறுப்புகளுமே முக்கியந்தான். அதுக்காக, இதயத்தை எடுத்து மூளைக்கு பக்கத்திலே வைக்கறேன், கண்ணைக் கொண்டுபோய் கால் முட்டியிலே வைக்கறேன், மூக்கை முதுகுக்கு மாத்தறேன், நுரையீரலை மூக்குகிட்டேத் தொங்கவிடறேன்னு, எந்த டாக்டராவது முயற்சி செய்தால், அந்த மனித உடம்பிலே, உறுப்புகள் இருக்கும். ஆனால் ‘உயிர்…’ தங்காது”.

“அதுமாதிரிதான், வழிவழியா கோவிலில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களை மாற்றக்கூடாது. அப்படிச் செய்தால், அந்தக் கோவிலில் எல்லாம் இருக்கும். ஆனால் ‘கடவுள்’ இருக்கமாட்டார்”.
“பார்க்கும் உரிமை கண்ணுக்கு மட்டுமா, நான் பார்க்கக் கூடாதான்னு நாக்கு கேட்டா எப்படி? அதேபோல கால் செய்யற வேலையை, மூக்கு செய்ய முடியாது. முதுகுக்கு வேலை இல்லாட்டாலும், முதுகு இல்லாம உடம்பு பூர்த்தியாகாது. அப்படித்தான்… கோவில்ல, இன்னாருக்கு இன்னவேலைன்னு ஒதுக்கியிருக்கு. எந்த வேலையையும், யார் வேண்டுமானாலும் செய்யலாம்னு முடிவெடுப்பது அதர்மம்”.

“சன்னிதானத்தை விடவும் உயரமான கோபுரத்திலே இருக்கிற புறாக்களை, இனிமே கர்பக்கிரஹத்துக்குள்ளே குடியமர்த்தப் போறோம். அதேபோல், பிரஹாரத்து யானையை, கோவில் கோபுரத்து உச்சியிலே வைத்து அழகு பார்க்கப்போறோம். உத்திரத்திலே தலைகீழா தொங்கற வவ்வால்களுக்கு, மடப்பள்ளியிலே உட்கார நாற்காலி போடறோம்னு சொல்லிண்டு, எல்லாத்தையும் இடம் மாற்ற நினைப்பது, அறிவீனம்.”

“கோவில்களோட ஆகமவிதிகளுக்கும், தொன்று தொட்டுவரும் வழிபாட்டு முறைகளுக்கும், முரண்பாடான மாறுதல்களை, எப்படி தன்னிச்சையா செய்யக்கூடாதோ, அதேபோல, சன்னிதானத்துக்குள்ளே தலைமுறை தலைமுறையா இருக்கிற “நம்மவாளை” வெளியே போகச்சொல்ல, யாருக்குமே உரிமை கிடையாது” என்று பிரசங்கித்தார் சங்கரன் மாமா.

“அப்போ… அந்த ஆஃபீசர் சொன்ன கோர்ட்டு-வழக்கு இதெல்லாம் ‘நம்ம’ சம்மந்தப்பட்டது இல்லையா?” என்றான் சீனு,

புன்னகைத்தபடியே ”அட மண்டுகளா… அந்த ஆஃபீசர் சொன்ன கோர்ட்டு, வழக்கு, இதெல்லாம், ‘மனுஷா’ சம்மந்தப்பட்டது. “பல்லிகளான நமக்கு” கருவறைதான் கோர்ட்டு, பஹவான்தான் ஜட்ஜ். போங்கப்பா… போய் நீங்க கடவுளுக்கு செய்யற, நித்தியப்படி கைங்கரியங்களை வழக்கம்போல, நிம்மதியா செய்யுங்கோ” என்றார் சங்கரன் மாமா.

எல்லாப் பல்லிகளும் மகிழ்ச்சியில் ஆனந்தக்கூத்தாடின. அங்கே வந்த ஆஃபீசரோ “என்னய்யா… அங்கே ‘பல்லிகள்’ எல்லாம் ஒரேயடியா சத்தம் போடுதுங்க. மொதல்ல அதுகளை இந்த கோவிலை விட்டு துரத்தணும்” என்று சவுண்டு விட்டார்.

‘பட்டாபி, சீனு, அனந்து, வைத்தி மற்றும் சங்கரன்’ ஆகிய “பல்லிகள்” மூச்சுவிடும் சத்தங்கூட கேட்காதபடி, தத்தம் பூர்வீக வாசஸ்தலமான, ‘கர்பக்கிரஹம்’ இருக்குமிடம் நோக்கி ஊர்ந்தன. ‘குப்பண்ணா’ என்ற பல்லியும் மடப்பள்ளிக்குள்ளே தஞ்சமானது.