செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பதாக தமிழக அரசு சொல்லி இருக்கிறார்கள். அதே சமயம் கொரோனா அலை அக்டோபர் மாதத்தில் உச்சமடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிய நிலையில்... பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவது குறித்து உங்கள் கருத்து என்ன?

எஸ்தர் செல்வராணி. வண்டலூர்.
குழந்தைகளுக்கு மிக மிக அவசியமான கல்வி, கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தாலும்... மருத்துவ நிபுணர்களின் அறிவுரை, அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு போன்ற காரணங்களாலும், தடுப்பூசி இன்னும் குழந்தைகளுக்கு செலுத்தாததை முன்னிட்டு பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டியதாக உள்ளது.
சுஷ்மா - 9 ஆம் வகுப்பு மாணவி, தாம்பரம்.
நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாததால், பள்ளிக்கு செல்ல ஆசையாக இருந்தாலும் கொரோனா வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
சு.ஹயக்ரீவன் - 8 ஆம் மாணவன், மடிப்பாக்கம்.
இந்த ஒரு வருடத்தில் ஆன்லைன் வகுப்பால் மிகவும் மன உளைச்சலாக இருக்கிறது . நேரிடை வகுப்பாக இல்லாமல், தினமும் 6 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து இருப்பது மனதை சோர்வடைய செய்கிறது. சீக்கிரம் பள்ளி திறந்தால் மகிழ்ச்சியே.
ம. உமா மகேஸ்வரி, குரோம்பேட்டை.
என் மகள் 8 ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த ஒரு வருடமாக ஆன்லைன் வகுப்பை கைப்பேசியிலும், லேப்டாப்பிலும் மாறி மாறி பார்த்து அவள் கண் பார்வைகளில் பிரச்சினை உண்டாகி விட்டது. கண்ணில் நீர் வழிவதும், லேப்டாப் திரையில் எழுத்துகள் சரியாக தெரியவில்லை என்று கூற ஆரம்பித்ததால் கண் மருத்துவரை அணுகினோம். சொட்டு மருந்து கொடுத்து “கண்ணுக்கு ரொம்ப strain கொடுக்கிறீர்கள். 8 மணி நேரம் தொடர்ந்து கைப்பேசி, கணினி பார்ப்பது நல்லதல்ல” என்று டாக்டர் கூறுகிறார். வகுப்புகளையும் தவிர்க்க முடியாது. இருதலைக்கொல்லி போல் தவிக்கிறோம்.
ம.செல்வகுமார், நாகை.
ஒரு வருட காலமாக பள்ளி செல்லாமல், நண்பர்களை பார்க்காமல், பள்ளி விளையாட்டுகளில் பங்கேற்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, குழந்தைகளின் மனநிலையே சோர்வாக மாற்றி உள்ளது. கொரோனாவோ ஒரு புறம் அச்சம் காட்டினாலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி விரைவில் வந்துவிட்டால், தைரியமாக பள்ளி அனுப்ப முடியும்.
சுந்தரி மனோஜ், ஆதம்பாக்கம்.
ஆசிரியர் பாடம் எடுக்கும் போது எழும் சந்தேகங்களுக்கு.., கேள்விகள் , கலந்துரையாடல் செய்யாமல்... ஒரு வகுப்பின் 50 மாணவர்கள், தங்களது ஆசிரியர், கணினி திரையில் எடுக்கும் பாடத்தை வாயை திறக்காமல் கடனே என்று கவனிக்கிறார்கள். இதில் எப்படி அறிவு வளரும், நீங்களே சொல்லுங்கள்..!? கொரோனாவால் ஒரு வருட படிப்பு மண்ணாக போனது தான் மிச்சம். அதிலும் என் மகன்கள் படிக்கும் பள்ளியில் கட்டணம் மட்டும் ஒரு பைசா குறையாமல் வாங்கி கொண்டார்கள்.
கொரோனாவால் மிக குறைந்த அளவே குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. அதனால் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் போதும். ஒரு பெஞ்சுக்கு ஒரு மாணவன் என்ற கணக்கில் உட்கார வைத்து ஒரு வகுப்பறையில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் மற்றும் கொரோனா பாதுகாப்பு முறைமைகளை பின் பற்றி பாடங்களை எடுக்கலாம். குழந்தைகள் படிப்பு பாழாகி போகிறதே என்று வருத்தமாக உள்ளது.

Leave a comment
Upload