
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பதா வேண்டாமா என்ற விவாதத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் லடாய் தற்போது பெரிதாகிக் கொண்டு வருகிறது. அதே சமயம்... அதிமுக உள் விவகாரத்தில், பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு என்ன..? சசிகலாவை சேர்த்துக் கொள்ளும் விஷயத்தில், பாரதிய ஜனதா தலையிடுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு சசிகலா சிறைக்குப் போன போது டிடிவி தினகரனை ஒதுக்கினார்கள். பிரிந்து இருந்த ஓ. பன்னீர் செல்வத்தை, எடப்பாடியுடன் சேர்த்து வைக்கும் வேலையை பாரதிய ஜனதா தான் செய்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி சொல்கிறபடி தான், அதிமுக ஆட்சி செய்தது. துணைவேந்தர்கள் நியமனம் கூட, பாரதிய ஜனதா தான் முடிவு செய்தது. அதே சமயம்... பொன்ராதாகிருஷ்ணன் போன்ற உள்ளூர் தலைவர்கள் அதிமுகவை விமர்சிக்கும்போது, அதற்கு ஓபிஎஸ் பதில் சொன்னார்...
சட்டமன்ற தேர்தலின் போது... சசிகலாவை சேர்த்துக் கொள்ள விரும்பினார், அமித்ஷா. இதற்கு பன்னீர்செல்வம் ஓகே சொன்னார்... எடப்பாடி பிடிவாதமாக வேண்டாம் சசிகலா என்று மறுத்துவிட்டார்.
தற்போது மீண்டும் சசிகலா இணைப்பு விஷயம் பெரிதாகி உள்ளது. இப்போது அரசியல் நிலைப்பாடு என்ன என்று கமலாலயத்தில் சில முக்கிய தலைவர்களை விசாரித்தபோது, அவர்கள் சொன்னது இது...
சசிகலா விவரம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம், இதில் எங்களுக்கு என்ன வேலை என்கிறார்கள். ஏற்கனவே... அதிமுக உட்கட்சி விஷயத்தில் நீங்கள் நிறைய முறை தலையிட்டு, பஞ்சாயத்து செய்தவர்கள் தானே. திடீரென ஏன் இந்த மனமாற்றம் என்றால்... அவர்கள் பதில் இனிமேல் அப்படி தான்... திமுகவுக்கு மாற்று இனி அதிமுக கிடையாது, பாரதிய ஜனதா தான். தோல்வியடைந்த பாரதிய ஜனதா தலைவரை, எம்பி ஆக்கி அமைச்சராகி இருக்கிறோம். அண்ணாமலையை தலைவராக்கி இருக்கிறோம். ஏற்கனவே தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் ஆனார். இப்போது இல. கணேசன் ஆளுநர். இப்படி பாரதிய ஜனதா தமிழ் நாட்டின் மீது கரிசனத்தோடு தான் இருக்கிறது. இதனால் பாரதிய ஜனதா, தான் திமுகவிற்கு மாற்று என்ற பேச்சு பொதுமக்களிடையே பரவலாக வரத்தொடங்கி விட்டது.

அண்ணாமலைக்கு தான், முதல்வரே இப்போது பதில் சொல்கிறார். அண்ணாமலை போக்குவரத்து துறையில் ஊழியர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வாங்குவதில் ஊழல் என்று சொன்னதும், முதல்வர் அதை பற்றி நேரடியாக விசாரித்து, அதன் பிறகு தலைமைச் செயலாளர், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இனிப்பு பொருட்கள் ஆவின் நிறுவனத்தில் தான் வாங்க வேண்டும் என்று கடிதம் எழுதிவிட்டார். சத்துணவு ஊழியர்கள் சிலர், சத்துணவு அமைச்சர் வீட்டில் சமையல் வேலை பார்க்கிறார்கள் என்று சொன்னதும்... அவர்களை மீண்டும் திரும்பவும் சத்துணவு அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டார்.

டெல்லி தலைமைக்கும் மாதந்தோறும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது நான்கு அமைச்சர்களை மத்திய உளவுத்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயலாம். இதுதவிர... முதல்வர் ஸ்டாலினுக்கு சொந்தமான சிலர் மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறார்கள். எல்லாமே அண்ணாமலை தந்த தகவலின் அடிப்படையில்தான்.
தற்சமயம்... தமிழ்நாட்டில், பாரதிய ஜனதா ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி என்ற இமேஜ் வளையத்தை உருவாக்க அண்ணாமலை முயற்சி செய்கிறார். அதே சமயம்... அ திமுகவின் கட்டமைப்பு இப்போது சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே அந்தக் கட்சியை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும். அதற்கு பதில் நமது கட்சியை இன்னும் வேகமாக வளர்க்கச் செய்வோம் என்ற அண்ணாமலை யோசனைக்கு, டெல்லி தலைமை பச்சை கொடி காட்டி விட்டது.
விடுமுறை தினங்களில் கோயில் திறக்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து கோயில்கள் திறக்கப்பட்டது. இதேபோல் ராமேஸ்வரம் தீர்த்தம் அனுமதி மறுக்கப்பட்டது பற்றி நிருபரிடம் பேசினார். தற்போது அதற்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாரதிய தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் ஒரு திவாலான எனர்ஜி கம்பெனிக்கு 5000 கோடி மதிப்புள்ள ஆர்டரை தமிழக மின்சார வாரியம் தர இருக்கிறது. அந்தச் கம்பெனி பெயரை நான் வெளியிட விரும்பவில்லை, தேவைப்படும்போது ஊழல் தொடர்பான ஆவணங்கள் ஒவ்வொன்றாக வெளியிடுவேன் என்றார். உடனே மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சார வாரியத்தில் ஊழல் நடந்துள்ளதாக அவர் சொல்லியுள்ள அந்த ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும், இல்லையென்றால்... மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார். உடனே அண்ணாமலை... மின்வாரியம் சார்பில் வழங்கப்பட்ட பணப்பட்டுவாடா விவரம் கொண்ட எக்சல் ஷீட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கூடவே... கோபாலபுரம், பிஜிஆர் எனர்ஜி, மின்சார அமைச்சகம், செந்தில் பாலாஜி இந்த நான்கு புள்ளிகளை இணைத்து பாருங்கள், விடை எளிதில் புரியும் என்று சூசகமாக ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் அண்ணாமலை,
ஸ்டாலின், உடனே உளவுத்துறையை அழைத்து, அண்ணாமலைக்கு இந்த உள் விவகாரங்களை தருபவர் யார்? அதிகாரிகளா அல்லது ஆளும் கட்சிப் பிரமுகர்களா என்று விசாரித்து தனக்கு சொல்ல சொல்லியிருக்கிறார்.

இதன் நடுவே பிஜிஆர் நிறுவனம், தங்கள் மீது அபாண்ட குற்றச்சாட்டு சொல்லியதாக ஐநூறு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அண்ணாமலைக்கு அனுப்பியது. அண்ணாமலை அந்த நோட்டீசை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து என்னிடம் 500 கோடி எல்லாம் இல்லை, 2, 3 ஆடுகள்தான் எனக்கு சொந்தம். நீங்கள் வழக்குப் போடுங்கள், ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறேன் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வழக்கறிஞர் நோட்டீசை பதிவு செய்து, பதில் பதிவு செய்திருக்கிறார். அதன்பிறகு அந்தக் கம்பெனி மௌனம் ஆகிவிட்டது.

செந்தில் பாலாஜியும் தன் பங்குக்கு அண்ணாமலையை வம்புக்கு இழுக்கிறார். அண்ணாமலை தலையில் வெறும் களிமண் தான் இருக்கிறது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் எதையும் சொல்லாமல், தன் ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது உளறிக் கொண்டிருக்கிறார். ஆதாரங்கள் இருந்தால் வெளியிட வேண்டியது தானே என்று நிருபர்களிடம் சவால் விட்டிருக்கிறார்.
அதற்கு பதிலாக... மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது, அமைச்சர் வழக்கு தொடரட்டும் என்று நிருபரிடம் பதில் சொல்லிய அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில் 2011-2016 போக்குவரத்து மோசடி, 2015இல் வேலை மோசடி, 2011-ல் நதி மணல் மோசடி, தற்போது 2021ல் மின்சார ஊழல்... அவர் மின்சாரத்துறை அமைச்சர் பதிவிலிருந்து விலக வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதன் பிறகு செந்தில் பாலாஜி கப்சிப்.

அதிமுக உட்கட்சி விஷயத்தில், பாரதிய ஜனதா தலையிடாது என்பதை சசிகலா - ஓபிஎஸ் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார்கள். மதுரை, தேனி என்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்கிறார். சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் என்று தீபாவளி வாழ்த்துச் செய்தி தொண்டர்களுக்கு அனுப்பியிருக்கிறார்.
எது எப்படியோ... பாரதிய ஜனதா தனி ரூட் போட்டு, தனது பயணத்தை தொடங்கியிருக்கிறது. இது எத்தனை நாள் என்பது தமிழக பாரதிய ஜனதாவுக்கு தெரியுமா என்பது சந்தேகம்.

Leave a comment
Upload