
கடந்த அக்டோபர் 29 அன்று மதியம் மாரடைப்பால் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் மரணமடைந்தார். இந்தச் செய்தியை கேட்டு தென்னிந்திய திரைஉலகத்தினர் மட்டுமில்லாமல் புனித்தை அறிந்த மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
46 வயதில் மாரடைப்பினால் மரணமா..? என்று அனைவரும் அதிர்ந்து போயினர்.
கன்னட திரையுலகின் முடி சூடா மன்னனும், கன்னடமக்களின் இதயத்தில் என்றுமே அணையா விளக்காக விளங்கும் டாக்டர் ராஜ்குமாரின் இளைய புதல்வர் தான் புனித் ராஜ்குமார்.
இவரை ரசிகர்கள் எல்லோரும் பவர்ஸ்டார் என்றும் அப்பு என்றும் பாசத்தோடு அழைப்பார்கள்.
புனித் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் மட்டுமின்றி கன்னட ஹீரோக்களிலேயே அதிகப்பட்ச சம்பளம் பெற்று வெற்றி நாயகனாக வலம் வந்தவர்.
புனித் சென்னையில் பிறந்தவர். அவரது சிறுவயது பெயர் லோகேஷ் என்பதும் அநேகருக்கு தெரியாது.

புனித 6 மாத கைக்குழந்தையாக இருந்தபோது, முதன்முறையாக வெள்ளித்திரையில் தோன்றினார். 1976-இல் அவரது தந்தை டாக்டர் ராஜ்குமார் நடித்த ப்ளாக் பஸ்டர் திரைப்படம் “பிரேமதா கனிகே” தான் புனித்துக்கு முதல் படம்.
தந்தையை போன்றே அபாரமாக பாடும் திறமை புனித்துக்கும் உண்டு. தனது 6 வயதில் பிரபல இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா இசையமைத்த “பாணி தாரியல்லி சூர்யா...” என்ற பாடல் தான் முதன் முதலில் அவர் பாடிய பாடல்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ப்ளாக் பஸ்டர். இவர் நடித்த பல படங்கள் பிற மொழிகளில் வெற்றிகரமாக ரீமேக் செய்யப்பட்டுள்ளன.
புனித் தன்னுடைய 10 ஆவது வயதிலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர். அந்த தேசிய விருது உட்பட நான்கு மாநில விருது, 5 ஃபிலிம்ஃபேர் விருது, 4 சைமா விருது, 2 சவுத் ஸ்கொப் விருது என்று பல்வேறு விருதுகளை பெற்று இருக்கிறார்.
இவையெல்லாம் புனித் நடிகராக இருந்து கன்னட திரையுலகில் அவர் செய்த சாதனைகள்

ஆனால், உண்மையில் அவர் எப்பேர்பட்ட மனிதர் என்பதை அவரை பற்றி அதிக விவரம் அறியாத மக்கள், அவரது இறப்பிற்கு பிறகு அவற்றை அறிந்து இப்படி ஒரு நல்லவரா என்று கண்ணீர் சிந்துகிறார்கள்.
புனித்தின் தாயார் பர்வதம்மா, உயிரோடு இருந்த போதே அவருடன் சேர்ந்து மைசூரில் இருக்கும் “ஷக்திதாம ஆசிரமம்” மூலம் பல தர்மகாரியங்கள், பரோபகாரங்கள் செய்து வந்திருக்கிறார்.
15 இலவசப்பள்ளிகளை நடத்தி, ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வியை கொடுத்திருக்கிறார். இவர் நடத்தி வந்த பள்ளிகளில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்துள்ளனர். அதே போல 16 முதியோர் இல்லங்களை இவர் நடத்தி வந்துள்ளார்.
புனித் தனது வருமானத்தில் பாதிக்கு பாதி இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான தர்மகாரியங்களுக்கு வெளியுலகிற்கு தெரியாமல் செலவிட்டு வந்திருக்கிறார்.
இவர் பல்வேறு படங்களில் பாடியும் அதன் மூலம் வரும் வருவாயையும் தன்னுடைய தொண்டு நிறுவனங்களுக்கு பயன்படுத்திக் கொள்வாராம். அரசு விளம்பரங்ளில் நடிக்க ஒரு பைசா கூட புனித் வாங்கியதில்லை...
புனித் கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பின் பிரதான தூதராக விளங்கினார்.. 2006 வரை அவரது தந்தை ராஜ்குமார் தூதராக இருந்தார். ராஜ்குமார் இறந்த பிறகு, 2011-இல் புனித்திடம் சென்று தூதராக இருக்கவும், அரசு சார்பு விளம்பரத்தில் நடிக்கவும் கேட்டுக்கொண்ட கர்நாடக அரசு, அதற்காக எவ்வளவு பணம் வேண்டும் என்று புனித்திடம் கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு “எங்க அப்பா இதே விஷயத்திற்காக ஒரு பைசா கூட வாங்கல.. இப்ப நான் மட்டும் எப்படி வாங்குவேன்..? இதை நம்ம ஊரு விவசாயிகளுக்காக செய்கிறேன். எனக்கு பணம் வேண்டாம்” என்று கூறி இலவசமாகவே விளம்பரங்கள் நடித்து கொடுத்திருக்கிறார்.

22,000 கர்நாடக கிராமங்களில் இருக்கும் 24 லட்சம் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் கர்நாடக அரசு செய்கிறது.
இன்று இந்தியாவில் பால் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் “அமுல்”க்கு அடுத்த இடத்தில் மொத்தம் ரூ. 16,000 கோடி வருட வருமானம் ஈட்டும் கர்நாடக பால் கூட்டுறவு அமைப்பின் “நந்தினி” இருக்கிறது. “நந்தினி” ப்ராண்டை மக்களிடம் கொண்டு சேர்த்ததன் பிண்ணனியில் ராஜ்குமார் மற்றும் அவரது மகன் புனித்தின் பங்கு பெருங்காரணமாக இருப்பதை மறுக்க இயலாது.
புனித் அரசு விளம்பரங்கள் மட்டுமின்றி உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுக்கு கூட இலவசமாகவே விளம்பரப்படங்கள் நடித்து வந்திருக்கிறார்.
“பணத்தின் பின்னே எப்போதும் நாம் ஓடக்கூடாது” என்று புனித் சொல்வாராம்.
கர்நாடக அரசின் ஐபிஎஸ் அதிகாரி இஷாபந்த் அவரது டிவிட்டர் பதிவில்...
“இதுவரை காவல்துறை சார்பாக எடுக்கப்பட்ட மக்களுக்கான விழிப்புணர்வு விளம்பரங்களிலும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இலவசமாக நடித்து கொடுத்தவர் புனித்.. எந்த நேரத்தில் அவரை அணுகினாலும், தனது பிஸியான வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு, தாமதம் செய்யாமல் உடனேயே நடித்து கொடுத்து விடுவார். இம்மாதிரியான அபூர்வமான மனித நேயமிக்கவர்களை காண்பதரிது” என்று மிகவும் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார்.
இப்படியாக தான் வாழ்ந்த காலத்தில், பல உதவிகளை செய்து வந்த புனித், இறந்த பின் தனது ‘கண்ணை’ தானமாக வழங்கி இருக்கிறார். பெங்களூர் நாராயண நேத்ராலயா மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையின் மூலம் பார்வையற்ற 4 பேருக்கு பார்வை கிடைத்திருக்கிறது.
வழக்கமாக கண்களை அதிகபட்சம் இருவருக்கு தான் பொருத்த முடியும்.
ஆனால், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால், 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. அதாவது ஒவ்வொரு கண்ணையும் இரண்டாக வெட்டி..., ‘கார்னியா’ எனப்படும் விழிப்படலம் முன்பகுதி, பின்பகுதியாக தனி தனியாக பிரிக்கப்பட்டது. முன் பகுதி விழிப்படலம் இருவருக்கும்; பின் பகுதி விழிப்படலம் இருவருக்கும் பொருத்தி இருக்கிறார்கள். புனித்தின் இரு கண்களும் ஆரோக்கியமாக இருந்ததால் தான் இது சாத்தியமாயிற்று என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
ஒரு பெண், மூன்று ஆண்கள் என கர்நாடகாவை சேர்ந்த 4 இளம் வயதினருக்கு, அக்டோபர் 30 தேதியன்று... அதாவது புனித்தின் பூத உடலை மண்ணில் அடக்கம் செய்வதற்கு ஒரு நாள் முன்னமே புனித்தின் கண்கள் அவர்களுக்கு பொருத்தப்பட்டன.
புனித்தின் தந்தை ராஜ்குமாரும், அவரது தாய் பர்வதம்மாவும் 1994-ல், முதல் முறையாக இதே நாராயணா நேத்ராலயாவில் ‘கண் தான வங்கி’ துவக்கி வைத்தது குறிப்பிட்டதக்கது. 2006-ல், ராஜ்குமார் இறந்த போது அவரது கண்களும், 2017ல் பர்வதம்மா இறந்த போது அவரது கண்களும் தானம் செய்யப்பட்டது. பெற்றோர் போன்று புனித்தும், அவரது கண்களை தானம் செய்துவிட்டார்.
எவ்வளவோ நடிகர்கள்.. மக்களின் பேராதரவு பெற்று சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்துடன் பெரும் செல்வந்தர்களாக வாழ்கின்றனர். ஆனால் தம்மை வாழவைக்கும் இந்த சமூகத்திற்கு, திரும்ப என்ன செய்கிறார்கள்? கோடிகளை கொட்டிக் கொடுத்து வாங்கிய சொகுசு கார்களுக்கு வரி கட்டவும், கல்யாண மண்டபங்களுக்கு வருமான வரி செலுத்தவும், வாடகை செலுத்தவும் மூக்கால் அழுது, நீதிமன்றம் வரை சென்று போராடுகிறார்கள். “அவர்கள் ஏன் செய்ய வேண்டும்..? அவர்கள் உழைக்கிறார்கள்.. அதை சொந்தமாக அனுபவிக்கிறார்கள்..!” என்று சிலர் கேட்கலாம்.
ஒரு படத்துக்கே 20, 30, 50, 100 கோடிகள் என வாங்குவதா உழைப்புக்கேற்ற பணம்? உழைப்புக்கேற்ற பணம் என்றால் சில லட்சங்களில் அடங்கி விடும். அந்த உழைப்பு(!)க்கு அவ்வளவுதான் உண்மையான மதிப்பு என்கிறார்கள் பொது மக்கள்.
தான் வியர்வை சிந்தி சம்பாதித்த காசில் ரூ150 டிக்கெட்டுக்கு, ரூ. 2000 கொடுத்து முதல் ஷோ காண வருகிறானே அபிமானம் கொண்ட ஏமாந்த ரசிகன் ஒருவன். அவன் காசை தான், கோடிகளாக... நடிகர், இயக்குநர், இசை அமைப்பாளர் என்று பிய்த்து வாயில் போட்டுக் கொள்கிறார்கள். “சம்பாதிப்பதில் ஒரு சிறு பாகமாவது இந்த சமுதாயத்திற்கு திருப்பி செய்ய கூடாதா..?” என்று பலர் கேட்பதும் நியாயமான கேள்வியே...
ஆனால், படங்களில் ஏழைகளின் காவலனாகவும்... 5 ரூபாய் டாக்டராகவும், ஊழலை, லஞ்சங்களை ஒழிப்பவனாகவும் நடிக்கும் பெரும் ஹீரோக்கள், படத்தின் இயக்குநர்கள், நிஜத்தில் கருப்புப்பணத்தில் கொழித்து வருமான வரி கட்டாமல் தப்பிக்கும் வழியை தேடுகிறார்கள். கடந்த திங்களன்று... தனது புது படமான “ஜெய்பீம்” மூலம் கிடைத்த வருமானத்தில், 1 கோடி ரூபாயை இருளர் சமூகத்தினரின் கல்வி செலவிற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்த நடிகர் சூர்யா போன்ற மிகச் சிலர், இந்த சமுதாயத்திற்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்து, செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். உச்ச நட்சத்திரங்கள் அவசர அவசரமாக ஆயிரம் கோடிகளில் பணம் சேர்த்து கொண்டிருக்க..., சூர்யா, புனித் ராஜ்குமார் போன்றவர்கள் புண்ணியத்தை சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
புனித்தின் வாழ்க்கை... தமது வாழ்வில் முன்னேறிய ஒரு மனிதன், தான் சார்ந்த இந்த சமுகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இளைய சமுதாயத்திற்கு கற்பிக்கிறது.
“ஒரு மனிதனின் புகழை சொல்ல அவன் மரணிக்க வேண்டியதாய் இருக்கிறது” என்று சொல்வார்கள்.
போலி ஹீரோக்கள் உலவும் உலகில், ‘புனித்’ போன்ற நல்லுள்ளம் கொண்ட ‘புனித’, உயர்ந்த மனிதர்களை பார்ப்பது மிக அரிது. இயற்கை அவரை இளம் வயதிலேயே அழைத்து கொண்டாலும், தனது தர்மகாரியங்களால் அவர் என்றுமே மக்களால் நினைவு கூறப்படுவார்.

Leave a comment
Upload