தொடர்கள்
ஆன்மீகம்
கங்கா ஸ்நானம் ஆச்சா? - சுந்தரமைந்தன்.

2021931004205140.jpeg


ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும், தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. தீபாவளி திருநாள் வாழ்வில் இனிமை பொங்கச் செய்யும் ஓர் இனிய நாளாகும். இருள் உள்ள இடத்தில், ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது போல... மனதில் இருக்கும் இருள் அகல்வதற்கு வழி வகுக்கிறது இந்த தீபாவளி திருநாள்.

தீபாவளி திருநாளில் நண்பர்கள், உற்றார், உறவினர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும்போது, ‘கங்கா ஸ்நானம்’ ஆச்சா? என்று கேட்பது வழக்கம். இந்த அளவுக்கு தீபாவளி பண்டிகையில் கங்கை நதி முக்கிய பங்கு வகிக்கிறது.

தீபாவளிப் பண்டிகையின் தொடக்கமே எண்ணெய்க் குளியல்தான். தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம்.

கங்கா ஸ்நானம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் உள்ளது. தீபாவளியன்று காசிக்குச் சென்று கங்கையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். எண்ணெயில் லட்சுமியும், சீயக்காயில் ஓஷாதி தேவதைகளும் இருப்பதாக ஐதீகம். இந்தியாவில் பல நதிகள் இருந்தாலும், அதில் சிறப்பு வாய்ந்தது கங்கை என்பதால் அங்கு போய் குளிக்க வேண்டும் என்று வைத்துள்ளனர். இதனால்தான் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர் வந்தது.

2021931004255136.jpeg

புராணத்தில் கங்கா ஸ்நானம்:

கபில முனிவரின் சாபம் காரணமாக சாம்பலாகிய தனது சந்ததியினர் நற்பேறடைய பகீரதன் கடுந்தவம் மேற் கொண்டான். இதன் பயனாக பூவுலகத்திற்குத் திரும்பிய ஆகாயகங்கை, பரமசிவனின் திருமுடியில் தங்கியது. பின் கங்கை வேகம் தணிந்து பூலோகத்தில் பாய்ந்தது, தீபாவளியன்று தான். சிவனிடமிருந்து கங்கை பூமிக்குப் பாய்ந்து வந்த நேரமே பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படுகிறது. இது அதிகாலை 4 மணிக்கும், 6 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகும். சாம்பலாகிய பகீரதனின் சந்ததியினர் கங்கை நதியின் புனித தண்ணீர் பட்டு நற்கதியடைந்த தினம் தீபாவளி ஆகும்.

தீபாவளி அன்று சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். அதன்படி அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்கா ஸ்நானம் என்று சொல்கிறார்கள்.
நரகாசுரனை ஶ்ரீகிருஷ்ணர் அழித்த நேரம் அதிகாலை என்பதால் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.

விஷ்ணு புராணத்திலும், தீபாவளியன்று விடியற்காலையில் கங்கா ஸ்நானம் செய்த பின் மகாலட்சுமி பூஜையின் போது தீபங்களை வீட்டில் பல இடங்களில் ஏற்றி வைப்பதால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தீபாவளியன்று கங்கா ஸ்நானம்:

தீபாவளியன்று சுவாமி படத்திற்கு முன் ஒரு கிண்ணத்தில் எண்ணெய், சீயக்காய் வைத்து, “குடும்பத்தில் அனைவரும் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு, “வீட்டின் பெரியவர் மற்றவர்களின் தலையில் எண்ணெய் வைப்பார்கள்.

2021931004402226.jpeg


தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை உடல் எல்லாம் தேய்த்துக் குளிக்க வேண்டும். மிளகாய் வாயுவை அடக்கும். மிளகு, சீரகம் ஜீரணத்துக்கு உதவும். இஞ்சி பித்தத்தை தணிக்கும். மஞ்சள் குளிர்ச்சியை தரும். தலையில் எண்ணெய்யை அழுந்த தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.

தீபாவளியன்று பிரம்ம முகூர்த்தத்தில் வெந்நீரில் தான் குளிக்க வேண்டும். ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் நீராடினால் கூடுதல் சிறப்பு.
எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்கிய பின் புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டு, பெரியோரை வணங்கி ஆசி பெறுவர். பிறகு பட்டாசுகள் வெடித்தும், பலகாரங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டும், பரிசுகள் தந்தும் மகிழ்வர்.

கங்கா ஸ்நான பலன்கள்:

தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் கங்கா ஸ்நானம் செய்வதால் நம்முடைய கர்ம வினைகள் குறையும் என்பது ஐதீகம். மேலும் நாம் செய்த பாவங்கள் நீங்கி விமோசனம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் அன்று ஒன்று சேர்வதால், அன்று எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கி நீராடிய புனிதப் பயன் கிட்டும்.