தொடர்கள்
சினிமா விமரிசனம்
ஜெய் பீம்! - தி.குலசேகர்

2021100223043605.jpg

இது நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது, அவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். ஒரு திரைப்படம் பார்க்கிற உணர்வை இந்த படைப்பு எங்கேயும் ஏற்படுத்தவில்லை. இயக்குநர் ஞானவேல் ஒரு வாழ்க்கையை, நம் கண் முன் உலவ விட்டிருக்கிறார். காவல் துறையில் உள்ள சுயநல கிருமிகள் எளிய மக்களை எப்படியெல்லாம் பகடையாக்கி, பந்தாடுகிறார்கள் என்பதை அட்சரம் பிசகாமல் படம் பிடித்திருக்கிறார்கள். துளி மிகையில்லாமல் நடந்த, நடக்கிற உண்மை சம்பவங்களில் ஒன்று நம் கண் முன்னே நெகிழ்வோடு விரிகிறது.

20211003161700474.jpg

முன்னாள் நீதிபதி சந்துரு

பழங்குடி சமூகத்தை சார்ந்த இருளர்களின் வாழ்க்கையில் நடக்கிற நெஞ்சை பதற வைக்கிற அந்தச் சம்பவம் பார்க்கிற ஒவ்வொருவரையும் அநீதிக்கு எதிராக பொங்கி எழ வைத்திருக்கிறது. நியாயத்திற்காக, அறத்திற்காக துணிந்து குரல் கொடுக்க வேண்டுமென்கிற எண்ணத்தை பார்க்கிற ஒவ்வொருவரின் இதயத்திலும் இந்த படைப்பு விதைத்து விடுகிறது.

முதலில் சூர்யாவிற்கு, முதல் நன்றி தெரிவிக்க தோன்றுகிறது. இந்த படத்தை ஜோதிகாவோடு இணைந்து தங்களின் 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருப்பதோடு, நாயகனாகவும் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஆடல், பாடல், சண்டை காட்சிகள் என்று எதுவும் இல்லை. ஆனாலும், பார்க்கிறவர்களின் மனங்களில் நீக்கமற நிறைந்து கொள்கிறார். சூர்யா, சூர்யாவாக தோன்றவேயில்லை. இதில் சூர்யாவோடு கர்ணன் புகழ் ரெஜிஷா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். லிஜோ மோல் செங்காணி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ரெஜிஷா பழங்குடியின மக்களுக்கு இரவு நேரத்தில் பாடம் சொல்லித் தருகிற ஆசிரியையாக வருகிறார்.

மணிகண்டன், பாம்பு பிடிக்கிற வேலையை ஊடுவேலையாக செய்து கொண்டு, செங்கல் சூலையில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரின் அந்யோன்யமான மனைவி லிஜோ மோல், பாம்பு கடிக்கு முறிவு மருந்து தயாரித்து உயிர் காக்கும் காட்டு மருத்துவச்சியாக இருக்கிறார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை. இப்போது, லிஜோ நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவர்களின் கனவு... ஓலை வீட்டிலிருந்து ஒரு கல் வீட்டை எப்படியாவது அந்த இடத்தில் கட்டி விட வேண்டும் என்பது தான்.

இந்த நேரத்தில் ஒரு தனவந்தர் குடும்பத்திற்குள் பாம்பு புகுந்து விட, அதை பிடிக்கச் செல்கிற மணிகண்டன் மீது, உதவி செய்ததற்கு உபத்திரவம் செய்கிற கதையாய் அந்த வீட்டில் உள்ள நகையை திருடி விட்டதாக திருட்டு பழி விழுகிறது. சந்தேக கேஸில் அவனை காவல் துறையினர் அழைத்துச் செல்கிறார்கள். சென்றவன் திரும்பி வருவதில்லை. அவன் தன்னோடான சகாக்கள் இருவரோடு சேர்ந்து தப்பியோடி விட்டதாக காவல்துறை சொல்கிறது. அவனை மீட்டுத் தர அவனின் மனைவி மேற்கொள்கிற அறப் போராட்டமும், அதற்கு உறுதுணையாக பொதுவுடமை சிந்தனையுள்ள சூர்யா மற்றும் பழங்குடியினருக்கான ஆசிரியையாக இருக்கிற ரெஜிஷாவும் உடன் நிற்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் ஒரு அம்சமாக இருக்கிற காவல் துறையை சேர்ந்த சிலர் ஒரு பழங்குடியினத்தை சேர்ந்த அப்பாவியை, செய்யாத குற்றத்தை செய்ததாக ஒத்துக் கொள்ளும்படி அடித்து அடித்தே சாகடிக்கிறார்கள். அதை மறைக்க நினைப்பதோடு, செய்யாத குற்றத்திற்கான குற்றவாளியாகவும் அந்த மடிந்து போன அப்பாவியை நிறுவ முனைகிறார்கள்.

காவல்துறையிலும் மனிதாபிமானமுள்ள சிலர் இருக்கிறதையும் இந்த படைப்பு பதிவு செய்ய தவறவில்லை. அதே சமயம், அவர்களும் தங்களின் உயரதிகாரிகளின் பேராசை காரணமாக விதிக்கப்படுகிற கட்டளைகளைக்கு விருப்பமில்லாவிட்டாலும் கீழ்படிந்து செல்ல வேண்டிய சூழ்நிலையே இருக்கிறது. அவர்கள் நேர்மையாக தங்களின் வேலையை செய்ய நினைத்தாலும், இந்த பெருச்சாளிகள் அத்தனை சுலபத்தில் அப்படிப்பட்டவர்களை செயல்பட அனுமதித்து விட மாட்டார்கள். இங்கே உண்மை பேசுவதென்பதோ, அறம் சார்ந்து வாழ நினைப்பதென்பதோ மிகப்பெரிய சவாலாக மாறிப்போயிருக்கிறது. அத்தனை சமூக முரண்கள் கொண்ட தேங்கிப்போன சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது வெட்கக்கேடான விசயம் தான். அதற்காக இந்த சமூகம் எப்போது உண்மையாக வெட்கப்பட்டு கூசிப்போய் தலை கவிழ்கிறதோ, அன்று தான் இங்கே ஜனநாயகத்தின் உண்மை அர்த்தம் புரிபடும்.

இது உண்மையில் ஒரு ஜனநாயக நாடு தானா? இங்கே, ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும், லாக்அப் மரணம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. காவல் துறையின் நோக்கமே குற்றங்களை தடுப்பது மட்டுமல்ல. குற்றவாளிகளை திருத்துவதும் தான்.

20211002230955799.jpg

மணிமேகலை காப்பியத்திலேயே மணிமேகலை சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுகிற சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இங்கே தான் திருந்துகிற குற்றவாளிகளையும், காவல்துறையில் பலர் திருந்தவிடாமல் வைத்துக் கொண்டு, மாமூல் வசூலிக்கிற கேந்திரமாக பயன்படுத்துகிறார்கள். திருந்த நினைக்கிற குற்றவாளிகளும் காவல்துறையில் உள்ள பேராசை பெருச்சாளிகளுக்கு அஞ்சியே குற்றவாளிகளாக விருப்பமின்றி நீடிக்கிற நிலையே இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது கசப்பான நிஜம்.

அதிகாரம் கையில் இருக்கிற தைரியத்தில் திருடர்களை விட மோசமான திருடர்களாக, குற்றவாளிகளை விட கொடூரமான குற்றவாளிகளாக காவல்துறையில் பலர் மாறி விடுவதோடு, தண்டனை அடையாமல் உலா வந்து கொண்டும் இருக்கிறார்கள்.

உண்மையில் காவல்துறை சார்ந்த சட்டதிட்டங்களில், தேவையான மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். அவர்கள் பக்கம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உண்மையை வெளிக்கொண்டு வர அடித்து மிரட்ட வேண்டியிருக்கிறதாக சொல்லப்படுகிறது. அதில் கொஞ்சமே உண்மை இருக்கிறது. புத்திசாலித்தனமாக இன்ட்ராகேஷன், புலனாய்வு, துப்புதுலக்குதல், சிசிடிவி, லை டிடெக்டர் என நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு, உடல் ரீதியாக துன்புறுத்துகிற வன்முறை இன்றியே பெரும்பாலும் உண்மையை கண்டுபிடிக்க இயலும் என்பதே உண்மை.

காவல்துறை குற்றம் செய்கிற குற்றவாளிகளை தண்டிக்கிறார்கள். குற்றம் செய்கிற காவல்துறையை சேர்ந்தவர்களை யார் தண்டிப்பது? என்று ஒரு வசனம் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. யோசிக்க வைக்கிற வசனம் அது.

சட்டத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உடல் ரீதியான துன்புறுத்தலை கூட, முறையான நெறிப்படுத்தல்களோடு தவிர்க்க முடியாத தருணங்களில் அனுமதிக்கலாம்.

அதே சமயம், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிசிடிவி பொருத்தப்பட வேண்டியது அவசியம். குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமெதற்கு? காவல்துறை தங்கள் பக்கம் நியாயமும், அறமும் இருக்கிற பட்சம், சிசிடிவி பொருத்துவதை எதற்காக எதிர்க்கிறார்கள். அங்கே நடக்கிற அராஜக வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிவிடும் என்கிற அச்சத்தில் தானே? இருளர்களின் வாழ்க்கையில் இருள் படிந்திருக்கிற காவல்துறையை சேர்ந்த கயவர்கள் எப்படியெல்லாம் தங்களின் அதிகார பலத்தை வைத்து சூரையாடுகிறார்கள் என்பதை மிகை நாடக பாணி எதுவும் இல்லாமல் யதார்த்தமாகவே வெளிப்படுத்தியிருக்கிறது இந்த படைப்பு.

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என்பதை ஒரு மக்கள் போராட்டமாகவே அனைவரும் முன்னெடுக்க வேண்டிய காலத்தில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை இந்த படைப்பு உணர்வார்த்தமாக பறைசாற்றுகிறது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிறோம். இது தான் ஜனநாயகமா? இது பணநாயகம். போலி ஜனநாயகம். இங்கே உண்மையான ஜனநாயகம் மலர்ந்தாக வேண்டும் என்கிற தாபத்தையே இந்த படைப்பு வெளிப்படுத்தி இருக்கிறது.

நாயகன் ஒரு வக்கீலாக இருந்தாலும், இந்த படைப்பில் சோரம் போகிற காவல்துறையை சேர்ந்தவர்களை மட்டும் தோலுரித்து காட்டவில்லை. எதிர்க்கட்சி வக்கீலாக யதார்த்தமாக நடித்திருக்கும் குருசோமசுந்தரம் வகையறாக்களின் தகிடுதத்தங்கள் வாயிலாக நீதித்துறையில் உள்ள சுயநலவாதிகளையும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்.

இந்த பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள், காட்டை நம்பி இயற்கையோடு இயற்கையாக இயைந்து வாழ்கிற மண்ணின் பூர்வகுடிகள். இவர்களில் பலருக்கு ரேஷன் கார்டு இல்லை. ஆதார் அட்டை இல்லை என்று சொல்லி அரசு அதிகாரிகள் சாதி சான்றிதழ் தர மறுக்கிறார்கள். ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, கேஸ் சிலிண்டருக்கான அட்டை என ஒவ்வொரு மனிதர்களுக்கும் அடிப்படையாக ஒரு அரசு வழங்கியிருக்க வேண்டிய அட்டைகளை அவர்களுக்கு வழங்காதது அவர்கள் குற்றமா? அரசு கேந்திரங்களின் குற்றமா? அவர்கள் அல்லவா அனைவருக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வழங்கப்பட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது அவர்கள் பிழை அல்லவா? பிழையை செய்கிறவர்களே அந்த எளிய மக்கள் நோக்கி பிழை சொல்கிறார்கள். தவறு செய்கிறவர்களை அந்த எளிய மக்கள் நோக்கி குற்றம் சுமத்துகிறார்கள். புத்தியற்று செயல்படுகிறவர்களே அந்த எளிய மக்கள் நோக்கி புத்தி சொல்கிறார்கள். இதனை அரசுகள் தட்டிக் கேட்கிற போது தானே உண்மையான ஜனநாயகம் மலரும். அதுவரை ஷுடோ டெமாக்ரட்டிஸம் தான் ஜனநாயகம் என்கிற போர்வையில் உலா வந்து கொண்டிருக்கும்.

அதற்கு இங்கே தடையாக இருப்பது சாதிய கட்டுமானம். உலகத்தில் இந்து மதம் இருக்கிற இடத்தில் மட்டுமே சாதிகள் இருக்கின்றன. பல நூறு சாதிகள். ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களின் ஓட்டுகளையும் வாங்கி தான் அந்த கிராமங்களில் பிரசிடென்டுகளாக பல அதிகார வர்க்கத்தினர் உலா வருகிறார்கள். அவர்கள் அந்த பழங்குடி மக்களுக்காக எந்த உதவியும் செய்வதில்லை. உதவி செய்ய வேண்டாம். அவர்களுக்கான சாதி சான்றிதழ், அத்யாவசிய அரசு வழங்கும் அடையாள அட்டைகள் அத்தைனையும் பெற்றுத் தருவதில் இவர்களுக்கு என்ன சிரமம். அதைக் கூட இவர்கள் முறையாக செய்வதில்லை. பழங்குடி மக்களுக்கு முறையான படிப்பு வழங்கப்படுவதில்லை. படிப்பறிவற்றவர்களாக, அறியாமையிலேயே எப்போதும் உழல வைக்கப்படுபவர்களாகவே அவர்களை, அதிகார வர்க்கம் வைத்துக் கொள்ள பார்க்கிறது. அவர்கள் படித்து விடக்கூடாது. சமூக, பொருளாதார, அரசியல் அதிகார பகிர்வில் சமன் நோக்கி பங்கு கேட்டு அவர்கள் வந்து விடக்கூடாது என்றே மேட்டுக்குடி அதிகார மையம் நினைக்கிறது. அவர்கள் முதுகில் தொடர்ந்து சவாரி ஏறித் திரியவே ஆசைப்படுகிறது. அவர்களை எக்காலத்திலும் தீண்டத்தகாதவர்களாகவே வைத்திருக்க அந்த உயர்அடுக்கில் இருப்பதான மனோபாவம் நினைக்கிறது. பேதங்களை தீர்ந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளவும் செய்கிறது.

ஜெய் பீம் என்பது தலித்துகள் என்று அழைக்கப்படுகிற அடையாளத்தின் எழுச்சி சொல் மட்டுமல்ல. அது ஒடுக்கப்பட்ட அத்துணை மக்களுக்குமான எழுச்சி சொல். அது சாதியம் அற்ற சொல். மனிதத்திற்காக சொல். மானுட நேயத்திற்கான சொல். பேரன்பின் மகோன்னத சொல்.

ரெஜிஷா ஒரு காட்சியில் சாதிய ஒடுக்குமுறை பற்றிய ஒரு குழந்தையின் கேள்விக்கு, படிக்கணும்.. எல்லாரும் படிக்கணும்.. படிக்க ஆரம்பிச்சா, எல்லாமே மாற ஆரம்பிச்சிரும்னு சொல்கிற இடம் எளிய உண்மையின் உறைவிடம்.

இறுதிக்காட்சியில் செங்காணியிடம், காவல் அதிகாரி தேவையான நஷ்டஈட்டுத் தொகை வாங்கி தருகிறேன். இந்த வழக்கை வாபஸ் வாங்கிவிடும்படி மன்றாடவே செய்வார். அப்போது செங்காணி இப்படி சொல்வார். ‘என் மனசுல சாமியா இருக்கிற என் கணவனை அடிச்சி கொலை செஞ்ச என் கணவரோட உசுருக்கு கூலியா நீங்க தர்ற பணத்தில நானும் என் பிள்ளைகளும் வயிறு வளக்கணுமா.. அது என் புருஷனோட ரத்தத்தை நேரடியா குடிக்கறதுக்கு சமம்.. எனக்கு நியாயம் தான் வேணும்.. என்று தீர்க்கமாக உரைக்கிற இடம், சிலிர்ப்பான இடம். தீப ஒளி திருநாளில் வெளியாகி இருக்கிற இந்த படைப்பு, இந்த சமூகத்தில் ஒளி ஏற்றி வைக்க வேண்டுமென்கிற பிரயாசையோடு படைக்கப்பட்டிருக்கிற ஒரு உண்மையான படைப்பு.