
தீபாவளி என்பது புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிக்கும் ஒரு பண்டிகை மட்டுமல்ல... தீபாவளி நன்னாளில்... செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், நவநிதிகளையும் வைத்துள்ள குபேரரையும் ஒரு சேர பூஜை செய்வதன் மூலம் நமது வீட்டில் செல்வம் செழிக்கும், என்றுமே பணப்பற்றாக்குறை இருக்காது. சகல கிரக தோஷங்களும்,பாவமும் தீர்ந்து அஷ்ட ஐஸ்வர்யங்களும் லட்சுமி கடாட்சமும், பெயர், புகழும் உண்டாகி செல்வந்தனாய் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை..
ஸ்ரீமகாலட்சுமி செல்வத்துக்கு அதிபதி. புகழ், கல்வி, வீரம், வெற்றி, புத்திரபாக்கியம், தைரியம், தனம், தான்யம், சுகம், இன்பம், அறிவு, அழகு, கௌரவம், அறம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் ஆகிய பதினாறு செல்வங்களையும் அருள்பவரும் இவரே. இதனால்தான் ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’ என்று பெரியோர்கள் வாழ்த்துகின்றனர்.
செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி என்றால், மகாலட்சுமியின் அருள்பெற்றவர்களுக்கு செல்வங்களை அருள்பவர் குபேரன் ஆவார்.

குபேரன் பார்வதிதேவியின் கருணையினால், தான் இழந்த கண்பார்வையைப் பெற்றவர். சிவபெருமான் இவரை வடதிசைக்கு அதிபதியாக நியமித்து அரசாளச் செய்தார். அன்று முதல் வடதிசைக்கு ஏற்றம் உண்டானது. இதனால் “வாழப் பிறந்தவனுக்கு வடக்கு” என்ற சொல்வழக்கும் உண்டாயிற்று.
திருப்பதி வெங்கடாஜலபதிக்கு திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன.
குபேரன் திருமுத்துகுடையான் கீழ் தாமரை மலர் மீதுள்ள ஆசனத்தில் ஒரு அபயமுத்திரையுடன் அமர்ந்திருக்கிறார். அவரது இருபுறமும் சங்க நிதி, பதும நிதி, என்ற தன தேவதைகள் வீற்றிருப்பர். அவர் தன் அருகே இரத்தினங்களை உதிரும் கீரிப்பிள்ளை வைத்திருப்பார். இத்தகைய சிறப்புமிக்க குபேரனை மகாலட்சுமியுடன் இணைந்து பூஜை செய்வதன் மூலம் குறைவற்ற செல்வநிதியை வாரி வழங்குவார்.

லட்சுமி குபேர பூஜை செய்யும்முறை:
தீபாவளி நன்னாளில் மாலை நேரத்தில் லட்சுமி குபேர பூஜை செய்யலாம். இந்த பூஜை செய்வதால் குபேரன் அருளும் அன்னை மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.
தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு முன்பே லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது. நமது வீட்டில் மகாலட்சுமியை வரவேற்க அன்று மாலை வீட்டு வாசலில் வண்ண கோலமிட வேண்டும். வீட்டின் பூஜையறையில் குபேர கோலம் இட்டு அதன் மேல் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். இப்படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சிறிய குடத்தை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.
முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, பிள்ளையார் பூஜையை தொடர்ந்து, மகாலட்சுமி விளக்கு வடிவிலோ அல்லது படமாகவோ அல்லது கலசத்தில் ஆவாஹனம் செய்து பூஜிக்கவேண்டும்.
மகா லட்சுமியை வழிபட்ட பிறகு, குபேரர் அஷ்டோத்திரத்தை சொல்லி தாமரை இதழ்கள் (அ) சிவப்பு நிற பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர்.

குபேரர் அஷ்டோத்திரத்தை சொல்லி, குபேரனை உபாசித்தால் குபேரன் திருவருளோடு மகாலட்சுமியின் பேரருளையும் பெறலாம் என்கிறது மந்திர சாஸ்திரம்.
பிறகு தூப தீபம் காட்டி, இனிப்புகள் மற்றும் பால் பாயசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். சிரத்தையுடன் ஸ்ரீமகாலட்சுமி குபேர பூஜை செய்து, அளவற்ற செல்வங்களைப் பெற்று சிரமமில்லாமல் வாழ்வோம்.
குபேர காயத்ரி :
ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி!
தந்நோ குபேர ப்ரசோதயாத்
குபேர மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேர லக்ஷ்மியை
கமல தாரிண்யை தனார்ஷிண்யை சுவாஹா
குபேர ஸ்லோகம்
ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம் மே
தேஹி தேஹி தாபய ஸ்வாஹா
குபேர தியானம்
மநுஜ வாஹ்ய விமான வரஸ்திகம்
கருட ரத்ன நிபம் நிதி தாயகம் !
சிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம் !!
பொருள்: மனிதர்களால் தாங்கப்படும் விமானத்தில் வருபவரும், கருடன் கண் போன்ற ரத்னம் அணிந்தவரும், நிதிகளின் தலைவரும் சிவபெருமானின் தோழருமான குபேரனை துதிக்கின்றேன்
லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார் என்பது ஐதீகம். செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு.
இந்த தீபாவளி லட்சுமி குபேர அருளால் எல்லோருக்கும் சந்தோஷத்தையும் செழிப்பையும் வழங்கட்டும். அக இருள் நீங்கி ஒளி பெறுக தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!


Leave a comment
Upload