தொடர்கள்
Daily Articles
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 40 - கலைமாமணி பாரதி திருமகன்

20211006194135954.jpeg

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆசியில், ஆலோசனையில் – ‘ஆனந்தம்’ என்ற நிலைக்கு சிறைவாசிகளை மகிழவைக்க – என் தந்தையும் நாங்களும் புழல் சிறைக்கு சென்று, வெற்றிகரமாக வில்லிசை நிகழ்ச்சி நடத்தினோம்.

இந்நிகழ்ச்சி, அப்போதைய சிறைத்துறை டிஜிபி நட்ராஜ் தலைமையில் சிறப்பாக நடந்து முடிந்தது. இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் தகவல் சென்றுவிட்டது! ஆஹா… அங்கிருந்து எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அது என்னவென்று விகடகவி வாசகர்கள் ஆவலாக காத்திருந்திருப்பீர்கள். அதென்ன..? அப்துல் கலாம் வீட்டிலிருந்து எங்களுக்கு அன்பான ஒரு தொலைபேசி அழைப்பு..!

எதிர்முனையில் – அப்துல் கலாம் வீட்டில் வில்லிசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நண்பர் சக்திபெருமாள். அவர், அப்துல் கலாம் பிஏ ஷெரிடன் கூறிய தகவலை எங்களிடம் விவரித்தார். அவர்தான், அன்றைய டெல்லி தமிழ் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்ததாகவும் கருதுகிறேன்.
அவரது உரையாடல் – ‘‘அம்மா, பாரதி… அப்துல் கலாம் ஐயாவின் விருப்பத்துக்கு இணங்க, உங்களின் தந்தை புழல் சிறையில் வில்லிசை நிகழ்ச்சி நடத்தினீர்கள். இதற்காக அவர், தனது சொந்த சேமிப்பு பணத்திலிருந்து கவிஞருக்கு ஊதியம் தரவேண்டும் என விரும்புகிறார்.
பொதுவாக, ஒரு நிகழ்ச்சிக்கு கவிஞர் எவ்வளவு தொகை வாங்குகிறார் என பிஏ ஷெரிடனிடம் கேட்க சொல்லியிருக்கிறார். அவர் என்னை அழைத்து, இத்தகவலை உங்களிடம் கூறச் சொன்னார். சொல்லுங்க பாரதி, கவிஞரின் வில்லிசை நிகழ்ச்சிக்கான ஊதியம் எவ்வளவு..?’’ என சக்திபெருமாள் மூச்சுவிடாமல் பேசினார்.

இதைக் கேட்டதும் நான் அதிர்ந்துவிட்டேன். ‘அப்துல் கலாம் ஐயாவின் வேண்டுகோளுக்கு இணங்க, புழல் சிறையில் வில்லிசை கச்சேரி செய்த சேவைக்கு, அவரிடம் இருந்து பணம் வாங்குவதா..?’ என யோசிக்க ஆரம்பித்தேன்.

அவர் இந்தச் சேவையை தந்ததே மிகப்பெரிய பாக்கியம்! அதற்கு போய் பணம் வாங்குவதா..? இத்தகவல் எனக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இத்தனை வருட அனுபவத்தில், இந்த கேள்விக்கு என் தந்தை என்ன பதில் சொல்வார் என எனக்குத் தெரியாதா..?

லைனில் இருந்த நண்பர் சக்திபெருமாளிடம், ‘‘அண்ணா… நாங்கள் பணம் வாங்க மாட்டோம்! அப்துல் கலாம் ஐயாவின் தன்னலமற்ற சேவைக்கு எங்களின் சிறு பங்களிப்பு… இதற்கு பணம் வேண்டவே வேண்டாம்! அவரது அன்புக்கு விலை ஏது..? அது, எங்களுக்குக் கிடைத்த வரம், பாக்கியம்..!

அப்துல் கலாம் ஐயாவின் வேண்டுகோளை நாங்கள் நிறைவேற்றினோம் என்ற ஆத்ம திருப்தியே எங்களுக்கு வரவு..!’’ என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தேன்.

20211006194223991.jpeg

இத்தகவலை அப்துல் கலாம் பிஏ ஷெரிடனிடம் பலமுறை சக்திபெருமாள் தெரிவித்துள்ளார். எனினும், இதற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சம்மதிக்கவே இல்லை!

அவரும் விடாப்பிடியாக, ‘‘நான் கவிஞருக்கு ஏதேனும் தந்தாக வேண்டும். இதுவே என் முடிவு!’’ எனக் கூறி, தனது சொந்த வங்கி கணக்கில் இருந்து, ஒரு காசோலையில் தொகையை நிரப்பி, எங்களின் வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பிவிட்டார்!

அந்தக் கடிதத்தை வாங்கி பார்த்த எங்கள் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி… அதில், அப்துல்கலாம் கையெழுத்திட்ட ஒரு காசோலை, அத்துடன் ஒரு பாராட்டு கடிதம்..! இதுவே, எங்கள் கலை வாழ்க்கையின் மிகச் சிறந்த ‘பொக்கிஷம்’!

அடுத்து ஒரு இன்ப அதிர்ச்சி… அந்தக் காசோலையை எங்களின் வங்கி கணக்கில் போட்டோம். அந்த கையெழுத்தை பார்த்ததும், வங்கி மேலாளர் முதல் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி, பெருமை, வியப்பு, அதிசயமாக இருந்தது!

இதுகுறித்து என் தந்தையிடம் விவரங்களை கேட்டு, எங்கள் அனைவரையும் வங்கி ஊழியர்கள் மனதார பாராட்டினர். நானும் மகிழ்ந்தேன் – கவிஞரின் ஒரு பெருமைக்குரிய மகளாக!
இன்று அந்த சம்பவத்தை நினைத்து பார்த்தாலும், அப்துல் கலாம் ஐயாவின் அன்பை எண்ணி ஆனந்த கண்ணீர் பெருகுகிறது. அவரது கருணை உள்ளம், கடவுள் வாழும் இல்லம்..!

இதேபோல் வேறு பல சம்பவங்களை அடுத்த வாரம் சுவையாக எடுத்துக் கூறுகிறேன். அதுவரை…

– காத்திருப்போம்