தொடர்கள்
தொடர்கள்
நேசித்த புத்தகங்கள் - 37 - வேங்கடகிருஷ்ணன்

20211002114907259.jpg

வேலையைக் காதலி!

20211002115359792.jpg

என்னுடைய பயிற்சி வாழ்க்கையின் குருவும், சிறந்த எழுத்தாளரும், நல்ல மனிதருமான டாக்டர். கார்த்திகேயன் அவர்கள் எழுதிய புத்தகம் தான் “வேலையைக் காதலி”. இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்தபோது, விரும்பி படித்தேன். முதலில் என் ஆசிரியர் எழுதிய ஒன்று, என்று தான் படிக்கத் துவங்கினேன். அவர் சொல்லாத துவங்கிய விஷயம், அடுத்தடுத்த அத்தியாயங்களில் சுவாரஸ்யமெடுக்க, தொடர்ந்து படித்தேன்.

நாற்பது அத்தியாயங்களில் விரிவாக இதனை அலசியிருக்கிறார். நேற்று ஒரு வாட்சப் குழுவில், இந்தப் புத்தகத்தை பற்றி பேச அழைத்திருந்தார்கள். எனக்குத் திடீரென ஒரு எண்ணம்... இந்தப் புத்தகத்தை எழுதியவரும் இணைந்தால் எப்படி இருக்கும் என்று... யோசித்து, அவரை அழைத்தேன். உடனே ஒப்புக் கொண்டவர், அந்த ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி, பலருக்கும் அவரைத் தெரிந்தும் இருந்தது. அந்த நிகழ்வில் அவர் பகிர்ந்து கொண்டவைகள்:

“இந்த தொடருக்கு ஆசிரியர் அசோகன் தலைப்பு கேட்டபோது “வேலையே காதலி”, “வேலைதான் காதலி” என்று இரண்டு தலைப்புக்கள் முன்வைத்தேன். அவர் இரண்டையும் அழகாய் இணைத்து “வேலையைக் காதலி” என்று தலைப்பு தந்தார். முதல் வாரம் எழுதிய பிறகு, வரவேற்பு நன்றாக இருக்கவேண்டுமே என்று பயந்து கொண்டிருந்தேன்... வாசகர்களிடையே, மிக நல்ல வரவேற்பு. நாற்பது வாரங்கள் போனதே தெரியவில்லை. இதைப் படித்துவிட்டு தன் ராஜினாமாவைக் கிழித்துப்போட்ட வாசகர் முதல், மீண்டும் வேலைக்கு போன ரிடையரான மனிதர், வேலை கிடைக்காமல் தற்கொலைக்கு முயன்றவர் மனம் மாறியது என இந்தத் தொடர் ஏற்படுத்திய தாக்கங்கள் பல...” என்றார்.

நிகழ்ச்சியில் ஒருவர்.... “இது எழுதவேண்டும் என்று தோன்றியது ஏன்?”

டாக்டர். கார்த்திகேயன்... “வேலை கிடைப்பதற்கு மட்டும் வழி சொல்லாமல், வேலை செய்யும், செய்யப்போகும் அனைவருக்குமான நம்பிக்கை தொடராய் இது இருக்க வேண்டும் என்று நினைத்து தான் இதை எழுதினேன், என்றார். மேலும் “இது முழுக்க... முழுக்க... மனித வளம் (Human Resource) சார்ந்து இல்லாமல், உளவியலையும், நிறைய தகவல்கள் சார்ந்தும் இருக்குமாறு வடிவமைத்ததே இதன் வெற்றிக்கு காரணம்” என்றார்.

ஒரு காதல் பாடம் என்னும் முதல் அத்தியாயத்தில் துவங்கி, செருப்புக்கேற்ற கால் என்று முரண் பட்டு,

“வெறுங்கை என்பது மூடத்தனம்,
விரல்கள் பத்தும் மூல தனம்”

என்று குறுங்கவிதை சொல்லி, என் வாழ்க்கை என் கையில் என்று தலைவர் பன்ச் டைலாக் சொல்லி, கலைஞர் கருணாநிதியை வம்புக்கிழுத்து, வேலையில் தேனிலவு கொண்டாட வைத்து, பிக் பாஸ் (இது கமல் பற்றியில்லை ) பற்றி சொல்லி, அலுவலக அரசியலை கையாளும் விதம் குறித்து கோடிட்டு காட்டி, என்னே நானே கெடுத்துக்கிட்டாதான் உண்டு என்று சொல்பவரை நல்வழிப்படுத்தி, நெருக்கடி = வாய்ப்பு, ரெண்டும் ஒரே வார்த்தைதான் என் ஆச்சரியப்படுத்தி... பிசினஸ் பண்ணபோறீங்களா? என்று பொறுமையாய் அறிவுரை சொல்லி, வேலையை மட்டும் அல்ல... வாழ்க்கையை காதலிப்பது ஏன் முக்கியம் என்று விளக்கி, நிகழ்காலத்தில் வாழவேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி, நீங்களும் உலக நாயகன் தான் என புகழ்ந்து, முதியவர்கள் பற்றிய கவிஞர் கண்ணதாசன் வரிகளை சொல்லி, நாற்பதாவது அத்தியாயத்தை நிறைவு செய்கிறார்....

“கடந்த காலமோ திரும்புவதில்லை
நிகழ்காலமோ விரும்புவதில்லை
எதிர்காலமோ அரும்புவதில்லை
இது தானே அறுபதின் நிலை!”

சிவாஜி காலம் முதல், சிம்பு காலம் வரை இன்றும் நிலைத்திருக்கும் கமல்ஹாசனின் இளமை ரகசியம், புதிதாக வரும் எதையும் தேடி எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளும் தன்மையே. உங்கள் தொழில் உலகில் நடப்பதையெல்லாம் கவனித்து மாற்றங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டால், நீங்களும் உலக நாயகன் தான்.! என்று முடிக்கிறார்.

வேலையையும் காதலித்து, வாழ்க்கையையும் காதலிப்பவர்கள், அதாவது உறவின் அருமை தெரிந்து அவர்களோடு சேர்ந்து, சந்தோஷமாய் இருப்பதே வாழ்க்கையின் லட்சியம் என்பதை நமக்கு அழகாய், எளிமையை, ஒரு சிறு புன்னகையோடு உணர்த்துவது இப்புத்தகத்தின் சிறப்பு.

“வேலையைக்காதலி - வாழ்க்கையைக் காதலிக்க சொல்லும் வாத்தியார் !!”

அனைவருக்கும் விகடகவியின் உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!!