
அந்த நாளும் வந்திடாதோ!
நூற்றாண்டு விழா காணும் தன் அண்ணன் செம்பனார்கோயில் எஸ்.ஆர்.ஜி. சம்பந்தம் பற்றி கேட்டபோது... இளையவர் எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணா முகத்தில் பரவசம், பெருமை, திடீர் சோகம், ஆனந்த கண்ணீர் என்று அத்தனை உணர்வுகளையும் மாறி மாறி பார்க்க முடிந்தது. சென்னை - பாலவாக்கத்தில் உள்ள அவரது மகன் குருமூர்த்தியின் அமைதியான வீட்டில் அவரை சந்தித்தோம்.

அவரது கொள்ளுப்பேரன் ரேயான் சாய் அவ்வப்போது ஓடிவந்து அவரது மடியில் தாவி உட்கார்ந்துவிட்டு வழுக்கிக் கொண்டு ஓடினான். “அந்த நாளும் வந்திடாதோ..” என்று பழைய பாட்டு ஒண்ணு இருக்கு. அந்த சந்தோஷ நாட்களில்தான் அவ்வப்போது மூழ்கி விடறேன். அந்த நினைவே எனக்கு எனர்ஜி டானிக் மாதிரி” என்று ஆரம்பித்தார் ராஜண்ணா! உடம்பு தான் அவர் வேகத்திற்கு இடம் தரவில்லையே தவிர பழைய சிந்தனைகளில் எந்த தடுமாற்றமும் இல்லை. பெயர்களை சற்று மறந்து விட்டாலும் சம்பவங்களை கோர்வையாக சொன்னதில் ஆச்சரியம்... அவ்வப்போது நாம் மறந்து போன பழைய வார்த்தைகள்!
“அப்போ ஒன்பது பத்து வயசு இருக்கும். தலைமுடியை ஜோரா பின்னியிருப்பேன் (சிரிக்கிறார்). எனக்கும், பந்தநல்லூர் தட்சிணாமூர்த்திக்கும் அண்ணன் தான் ஒரு நாள் சாமி படத்திற்கு முன்ன உட்கார வச்சு நாதஸ்வரத்தை எடுத்து தந்தது. பந்தநல்லூர்காரர் என் மனைவிக்கு பெரியப்பா பிள்ளை. பிற்காலத்தில் பெரிய நாதஸ்வர வித்வானாக புகழ் பெற்றார். அன்னிக்கு நாதஸ்வரத்தை பிடித்தவன் தான் நான்! இப்பவும் பிடிக்கத்தான் ஆசை. வீட்டில் இந்த நாதத்தை கேட்டே வளர்ந்ததால் எனக்கு சீக்கிரம் சங்கீதம் வந்துடுச்சு. பதினோறு வயசிலேயே பந்தநல்லூர் தட்சிணாமூர்த்தியோட ஒன்றரை வருஷம் வாசித்திருக்கேன்!
அப்புறம் ஒரு நாள் அண்ணனோட வாசிக்கலாம்னு இருவரும் முடிவு பண்ணோம். பந்தநல்லூர்காரரும் கெளரவமா வழி விட்டார். பதிமூணு வயசுல அண்ணனோட வாசிக்க ஆரம்பிச்சேன். என்னைவிட பத்து வயது மூத்தவர் அவர். குருவோடயே வாசிக்கறது எவ்வளவு பெரிய பாக்யம்! அப்புறம் அவரும் நானும் பிரியவே இல்லை - அவர் இறுதி மூச்சு வரை. ஐம்பது வருஷம் தொடர்ந்து வாசித்திருக்கோம். அப்புறமும் வாசித்தோம். எத்தனை மல்லாரி, எத்தனை பல்லவி, எத்தனை கல்யாணி, எத்தனை கமாஸ், எத்தனை தில்லானா... அதெல்லாம் சொல்லி மாளாது! என்னோட இசை வாழ்க்கையில ஒரு நாள் கூட, ஒரு கச்சேரியில கூட அண்ணனை முந்தணும்னு நான் நினைச்சதில்லை. நான் ராகம் வாசிக்கும்போது என்னை வாசிக்க விட்டு ரசிக்கும்! அண்ணன் உருப்படிகளை ரொம்ப கிரமமா வாசிக்கும். ஸ்வரங்களை பொறுத்தவரை இரண்டு பேருமே அன்றைய கற்பனைக்கு ஏற்றாப்பல ஒருத்தருக்கு ஒருத்தர் வழி விடுவோம். அதாவது ஒருத்தருக்கு கற்பனை ஜோரா வந்துச்சுன்னா அடுத்தவங்க சுதாரிச்சுடுவோம்!
இந்த ஐம்பது வருஷத்தில்... தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, டெல்லி, கல்கத்தா, பாம்பேன்னு எங்கெங்கோ சுற்றியிருக்கோம். எங்களோட அதிர்ஷ்டம், தெய்வ அருள்... ஒரு நடை எங்களை ஒரு கோயிலிலோ விழாவிலோ கூப்பிட்டா அடுத்த முறையும் நிச்சயம் அழைப்பு வரும். கச்சேரி இல்லைன்னு தொடர்ந்து ஒரு வாரம் நாங்க படுத்ததில்லை.
அப்போல்லாம் வித்வான்கள் ஒருத்தரை ஒருத்தர் மதிச்சு இடம் தருவார்கள். உதாரணமா, சங்கரன்கோயிலில் ‘ஆடி தபஸ்’ ஐந்து நாள் உற்சவம் நடக்குது. வித்வான்கள் வரிசையாக உட்கார்ந்து ஆளுக்கொரு கீர்த்தனையை மாறி மாறி வாசிப்போம். எங்களுக்கு எதிரே அந்த காலத்தில் பெரிய பெயர் பெற்ற குழிக்கரை பிச்சையப்பா உட்கார்திருக்கார். எங்களுக்கெல்லாம் சீனியர். நானும் அண்ணனும் ஒரு கீர்த்தனையை வாசிச்சு முடிக்கிறோம். அடுத்தது அவங்க வாசிக்கனும். பிச்சையப்பாவோ ‘வாசிங்க... வாசிங்க... ரொம்ப நல்லா இருக்கு’ என்று அடுத்த கீர்த்தனையையும் வாசிக்கச் சொன்னார். அவ்வளவு ஏன்... மூணாவதையும் வாசிக்கச் சொன்னார். நாங்கதான் எழுந்துட்டோம். அப்படியொரு பண்பு, ரசனை, பரந்த மனசு அப்போது இருந்தது.
மதுரை பக்கம் சோழவந்தானில் நடந்த சம்பவம். டி.ஆர். மகாலிங்கம் பிறந்த ஊர். மதுரையில் சேதுராமன் பொன்னுசாமி இருக்கும்போது எங்களைக் கூப்பிட்டு வாசிக்கச் சொன்னார்கள் நிர்வாகிகள்! மதுரை மணி அய்யரிடம் நான் பாட்டு கற்றுக்கொண்டது, நண்பர்களோடு ஜாலியா சினிமா பார்த்தது.. எல்லாம்...
அடுத்த வாரம்..

Leave a comment
Upload