தொடர்கள்
அரசியல்
மோடியின் பரிசுகள் ! அசந்து போன தலைவர்கள் - மாலா ஶ்ரீ

20221018071058236.jpg

இந்தோனேஷியாவின் பாலி தீவில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜி-20 மாநாட்டின் நிறைவு நாளில், இந்தோனேஷியாவிடம் இருந்து அடுத்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்திய தலைமையின்கீழ் ஜி-20 ஒருங்கிணைந்ததாகவும், லட்சியமும் தீர்க்கமும் செயல் வல்லமையும் கொண்டதாகவும் இருக்கும். இவ்வுலகுக்கு உத்வேகத்தையும், ஒருங்கிணைந்த செயல்பாட்டையும் வழங்கக்கூடியதாக இருக்கும் வகையில் ஜி-20ன் பணிகளை இந்தியா மேற்கொள்ளும்!" என்று உறுதி தெரிவித்தார்.

மேலும் நிறைவு நாளில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பாரம்பரிய நினைவுப் பரிசுகளை வழங்கி அசத்தினார்.

20221018071218138.jpg

அமெரிக்க அதிபர் ஜோ பிடன்: இமாசலப் பிரதேசத்தின் பாரம்பரிய கங்க்ரா ஓவியத்தில் வரையப்பட்ட இயற்கை வண்ணங்களால் உருவாக்கப்பட்ட மரங்கள், மாடு-கன்றுக்குட்டி, மேகம், மழை, பறவைகள் என இயற்கையான பின்னணியில் காதலை பகிர்ந்து கொள்ளக்கூடிய தம்பதி சமேத ராதாகிருஷ்ணன் படம்.

20221018071249629.jpg

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்: குஜராத்தில் தயாரிக்கப்பட்ட 14 கைகளுடனும், ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு ஆயுதத்துடனும் சிங்க வாகனத்தின்மீது துர்க்கை அமர்ந்த கோலத்திலும், அதற்குக் கீழ் 3 பெண்கள் நடனமாடுவது போன்று காட்சியளித்த துணி ஓவியம்.

20221018071329609.jpg

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ்: குஜராத்தின் சோட்டா உதய்பூர் பகுதியில் ரத்வா கைவினை கலைஞர்கள் வடிவமைத்த பித்தோரா ஓவியம். இது, பழங்குடி மக்களின் நாட்டுப்புற கலையை பிரதிபலிக்கிறது. மேலும், இந்த ஓவியம் ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்களின் புள்ளி ஓவியத்தைப் போன்று இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்தார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி: குஜராத்தின் பலவண்ணங்களின் கலவையாக, இருபக்கமும் ஒன்று போல் காட்சியளிக்கும் சால்வி குடும்ப துப்பட்டா.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோருக்கு, குஜராத்தின் கட்ச் பகுதியில் தயாரிக்கப்படும் 'அகேட் கிண்ணம்.

20221018071418877.jpg

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு, குஜராத்தின் சூரத்தில் தயாரிக்கப்படும் வெள்ளிக் கிண்ணம், இமாசலப் பிரதேசத்தின் கின்னூரில் தயாரிக்கப்படும் புகழ்பெற்ற சால்வையும் பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுக்கு, இமாசலப் பிரதேசத்தின் மண்டி மற்றும் குலு மாவட்டத்தைச் சேர்ந்த உலோகக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட 'கனல் பித்தளை இசைக்கருவி செட்' இந்திய நாட்டின் பரிசாக அளிக்கப்பட்டது.

பாஜக காரர்களைக் கேட்டால் மோடியே இந்தியாவின் பரிசுதான் என்று சொல்வார்கள். ஆனால் மோடி கொடுத்த பரிசு ஒவ்வொரு தலைவர்களும் நினைவு வைத்துக் கொள்ளும் படி யார் ஐடியா கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த டீமுக்கு பிடியுங்கள் நமது பாராட்டை.

மாலா ஶ்ரீ