அர்ச்சனா புக் பண்ணபடி அந்த தனியார் ஆட்டோ அவளுடைய வீட்டின் முன்னால் வந்து நின்றது. ’எந்த இடத்துக்கு போக வேண்டும்?’ என்று கேட்டான் அந்த கொடுவாள் மீசைக்கார ஆட்டோக்காரன்.
அவனைப் பார்த்ததுமே மெர்சல் ஆகிப் போன அர்ச்சனா இவன் ஒரு டுபாக்கூர் பார்ட்டியாக இருப்பானோ? நினைத்துக் கொண்டே,’வண்ணாரப்பேட்டை.க்கு’ என்றாள்.
வண்டியில ஏறிவிட்டு அப்பால அண்ணாண்ட போய்,அவனுடைய கெத்த காட்ட ஆரம்பித்துவிடுவானோ? இவள் ரொம்பவும் மெர்சலாயி போயிட்டா. யோசித்துக் கொண்டே பயணித்தாள்.
அதற்குள் அவனுக்கு ஒரு ஃபோன் வந்தது. கசமாலம். இந்த பிஸ்கோத்து மேட்டருக்கா எனக்கு ஃபோன் பண்ண? ஒரு நிமிஷம் நான் ரொம்ப பேஜாராகிப் போயிட்டேன். இப்பத்தான் ஒரு ஐட்டத்தை பிக்கப் பண்ணிட்டு நான் வண்ணாரப்பேட்டை போயிட்டு இருக்கேன்.’ என்றான்.தன்னை ஓர் ஐட்டம் என்று சொன்னதைக் கேட்டு அர்ச்சனா அதிர்ந்துதான் போனாள்.
இது அவனுடைய கணவனுடைய எம்.டி.யினுடைய வீட்டு ரிசப்ஷன் பார்ட்டி. அவன் வெளியில போய் இருக்கான்.அதனால அர்ச்சனா அதை அட்டெண்ட் பண்ண வேண்டியிருக்கு.
கோயம்புத்தூர் அர்ச்சனாவுக்கு மெட்ராஸ் பாஷை இன்னும் துளிக் கூட புரியல.ரொம்பவும்தான் கஷ்டப்படறா. அந்த ஆட்டோக்காரன்,’நான் உன்னை ஜாக்கிரதையா இட்டிட்டு கரெக்டா அந்தக் கல்யாணம் மண்டபம் முன்னாடி நிறுத்தறேன் பாரு. அப்பாலதான் இந்த முனியாண்டி எவ்வளவு கெத்தான டிரைவர்னு நீ தெரிஞ்சுக்குவ’என்றுக் கூவி முடித்தான்.
ஆட்டோ சீறிப்பாய்ந்து ஓடியது. அது மவுண்ட் ரோட்டை தாண்டி போய்க் கொண்டிருந்தது. கொடுவாள் மீசை ஆட்டோக்காரன் அவளை அடிக்கடி சைடு மிர்ரர்ல பார்த்துட்டே வந்தான். அர்ச்சனாவோ அலங்கார தேவதையா உடம்பு பூரா நகையை போட்டுட்டு, அந்தக் கல்யாண வீட்டுக்கு பந்தாவா கிளம்பி இருக்கா.
நிலைமையின் விபரீதத்தை புரிந்துக் கொண்ட அவள் தன்னுடைய பையில் தன்னுடைய நகையெல்லாம் கழட்டி வைத்தாள்.நகை வைத்திருந்த பையை இறுக்கமாக தன்னுடைய மடியில் மார்போடு கட்டி அணைத்துக்கொண்டாள்.
இதையும் ஆட்டோக்காரன் பார்த்து விட்டான். ’ஒருவேளை பையை அவன் அபேஸ் பண்ணிட்டா, என்ன பண்ணுறது பேசாம உடம்பிலேயே போட்டுட்டு இருக்கலாம்’ என்று நினைக்கத் தொடங்கினாள். ஆனால் திரும்பவும் அவற்றைப் போட்டுக் கொள்ள பயந்தாள்.
வழியில் போன ஊர்வலத்தின் நடுவிலே இவளுடைய ஆட்டோ மாட்டிக்கொண்டது.’இந்த நாடு என்னிக்குதான் திருந்துமோன்னு தெரியல’ன்னு சொல்லியபடி, ஆட்டோக்காரன் இடது பக்கமாக ஒரு சிறிய சந்துத்தெருவின் வழியாக லாவகமாக ஆட்டோவைத் திருப்பினான். அந்தத் தெருவில் ஆள் சந்தடி எதுவுமே இல்லை. அர்ச்சனாவின் பயம் இன்னும் அதிகமாகி விட்டது.
’ஏதாவது ஆபத்து என்று அலறினால் கூட ஆள் உதவிக்கு வரவாய்ப்பில்லை’ என்று நினைத்தாள். ஆனால்,அவள் பயந்தபடி ஒன்றும் நடக்கவில்லை.எப்படியோ அடுத்த அரை மணி நேரத்துல அந்த கல்யாண மண்டபத்து வாசலுக்கு போய் நின்றது. ஆட்டோ. வாசலில் நின்று கொண்டிருந்தவர்கள் இவளைப் பார்த்த உடனே டப்பு உள்ள பார்ட்டி என்று புரிந்துக் கொண்டு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார்கள். வரவேற்பின் மஜாவில் மூழ்கிப் போன அர்ச்சனா தன்னுடைய கைப்பையை ஆட்டோவில் மறந்து விட்டு, வேகமாக இறங்கி விட்டாள்.
உள்ளே போனப் பிறகுதான் கைப்பையை ஆட்டோவில் விட்டு விட்டு வந்ததை புரிந்துக் கொண்டு அதிர்ந்து போனாள்.திரும்பப் போக டப்புவும், போட்டிருந்த நகையெல்லாமும் அந்த கைப்பையில் தான் இருந்தது. அந்த ஆட்டோவை புக் பண்ண டீடைல்ஸ் இருந்தது.அதை வைச்சு ஃபோன் பண்ணி பையைப் பற்றிக் கேட்டாள்.
’அம்மா, நீ இறங்கும்போது பையோடதாம்மா இறங்கினீங்க .இப்போ என்கிட்ட கலாட்டா பண்றீங்களே. இந்த பேமானித்தன வேலையெல்லாம் எனக்கு தெரியாது நான் உழைச்சு சாப்பிடறவன். பார்க்கத்தான் இப்படி இருக்கேன் உங்க பொருளை நீங்க பொறுப்பாய் எடுத்துட்டு போகாம, என்னைக் குறை சொன்னா என்ன அர்த்தம்?’ என்று சொல்லி ஃபோனைக் கட் பண்ணி விட்டான்.
கூடியிருந்தவர்கள் காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த ஆட்டோ மண்டப வாசலில் வந்து நின்றது. அந்த கொடுவாள் மீசை ஆட்டோக்காரன் அந்தப் பையுடன் உள்ளே வந்தான். ’அம்மா இந்தாங்க உங்க பை. உங்களைக் கலாய்க்கத் தான் நான் அப்படிப்பேசினேன்.’என்றான்.
எங்கள மாதிரி ஆளுங்க பார்க்கத்தான் பயங்கரமாய் இருப்போம். மனசுக்குள்ள எம்ப்டி தான். நாங்க உழைச்சி சம்பாதிக்கிற காசு எங்களுக்கு வந்தா போதும். பையில எல்லா ஐட்டமும் கரெக்டா க்கீதா’ன்னு பார்த்துக்கோங்க.’சொல்லி விட்டுப் புறப்பட்டான். கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை புரிந்துக் கொண்ட அர்ச்சனா அவனுக்கு நன்றி சொன்னாள்.கல்யாண மேடையை நோக்கி கைகூப்பிய வண்ணம் சென்றாள்.கம்பெனி பஸ்ஸிலேயே திரும்பி வீட்டுக்கு போக எம்.டி.மனைவி ஏற்பாடு பண்ணிவிட்டது குறித்து அர்ச்சனா மிகவும் மகிழ்ந்து போனாள்.
Leave a comment
Upload