சென்னையில் உள்ள திருத்தலங்களில் மிகவும் பழமையான குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாச பெருமாள் கோயில் இரண்டும் இணைந்து சென்னை நகரின் மையத்தில் கோயம்பேட்டில் அமைந்துள்ளது. இவை இரட்டைக் கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த கோயில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. மேலும் இவை இரண்டும் இராமாயணத்துடன் தொடர்புடையவை,
இராமர் அஸ்வமேத யாகம் செய்யும்போது அனுப்பிய குதிரையை (அஸ்வம்) லவ - குசன், வால்மீகி மகரிஷி ஆசிரமம் வழியாக வரும்போது அதனைப் பிடித்துக் கட்டிப் போட்டனர். அரசனின் குதிரையைக் கட்டிப்போட்ட இடம் 'கோயம்பேடு' என்றாயிற்று.
கோ = அரசன், தலைவன் (இங்கு ராமபிரானைக் குறிக்கிறது)
அயம் = குதிரை (சமஸ்கிருதத்தில் ‘அஸ்வம்’ என்பதற்கு இணையான தமிழ்ச் சொல்)
பேடு = கட்டுதல், பிணித்தல்
கோ எனும் அரசனான ராமனின் குதிரைகளை குச-லவர்கள் இருவரும் அயம் எனும் இரும்பு வேலியால் கட்டி வைக்கப்பட்ட தலம் இதுவென்பதால் `கோயம்பேடு' எனப் பெயர் பெற்றதாகவும் கூறுவர். `பேடு' என்றால் `வேலி' என்ற பொருளும் உண்டு. அருணகிரிநாதர் இந்தத் தலத்தில் அருளும் முருகனைப் பாடும்போது `கோசை நகர்’ என்று கோயம்பேட்டைப் பற்றிப் பாடியிருக்கிறார். இரண்டு கோயில்களுக்கும் பொதுவாக ஒரே திருக்குளம் அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு.
கோயிலின் தொன்மை மற்றும் வரலாறு:
இந்தியத் தொல்பொருள் அளவீட்டுத் துறையினர் இக்கோயிலில் 14 கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர். இதன்படி, இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. 12 ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழர் மற்றும் விஜயநகர மன்னர்களால் இந்த கோயில் மேம்படுத்தப்பட்டது. பண்டைய காலங்களில் இந்த இடம் கோசை நகர், கோயாட்டிபுரம் மற்றும் பிரயாச்சிதபுரம் என்று அழைக்கப்பட்டதாக பண்டைய நூல்களிலிருந்து தெரிகிறது.
குறுங்காலீஸ்வரர் கோயில்:
கோயம்பேடு என்ற ஊரும் இல்லை, குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை, வடக்குப் பார்த்த சிவனும் இல்லை, மடக்கு போன்ற லிங்கமும் இல்லை – என்பார்கள்.
கோயம்பேடு என்ற பெயர் கொண்ட ஊர் வேறு எங்கும் இல்லை.
குறுங்காலீஸ்வரர் என்ற ஈஸ்வரனுடைய நாமம் வேறு எங்கும் இல்லை. வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள ஈஸ்வரன் மூலவராக
இங்கு அருள்பாலிக்கின்றார். மடக்கு போன்ற லிங்கம் என்பது இங்குள்ள ஈஸ்வரனின் லிங்க பாணம் ஒரு மடக்கை அதாவது பானை மூடப் பயன்படும் மூடியைக் கவிழ்த்தது போல் இருக்கும். ஆகவே அவ்வாறு சொல்வார்கள்.
காசி புண்ணிய க்ஷேத்திரம் இருக்கும் வட திசையை நோக்கி சிவபெருமான் வீற்றிருப்பதால், இத்தலம் காசிக்கு இணையான "மோட்ச தலம்" என்ற பெருமையைப் பெறுகிறது.
சிவபெருமான் அருள் பொழியும் திருத்தலமாக மட்டுமல்லாமல், பித்ரு தோஷ நிவர்த்திக்குரிய முதன்மையான பரிகாரத் தலங்களில் ஒன்றாகவும் பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இராமபிரானைப் பிரிந்த சீதாதேவி, வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, லவன் மற்றும் குசன் என்ற இரு புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் தந்தை இராமபிரான் என்று அறியாமல், அஸ்வமேத யாகக் குதிரையைத் தடுத்து நிறுத்தி, இராமரின் படையினருடன் போரிட்டனர். இந்தச் செயல், தந்தையை எதிர்த்துப் போரிட்டதால், அவர்களுக்கு "பித்ரு தோஷம்" ஏற்பட்டது. இந்த பித்ரு தோஷத்தைப் போக்க, வால்மீகி முனிவரின் ஆலோசனைப்படி, லவ-குசா இத்தலத்தில் பலாமரத்தின் அடியில் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டனர். அவர்கள் சிறுவர்களாக இருந்ததால், உயரமாக இருந்த லிங்கத்தை முழுமையாகப் பூஜிக்க இயலவில்லை. பக்தர்களான சிறுவர்களின் சிரமத்தைப் போக்க எண்ணிய சிவபெருமான், தனது திருமேனியைக் குறுக்கிக் கொண்டு, அவர்களுக்கு எளிதாகப் பூஜை செய்ய வசதியாகக் காட்சியளித்தார். (ஆவுடையாருக்கு மேலே லிங்கம் நான்கு அங்குல உயரம்) இதனால் இத்தலத்து இறைவன் "குறுங்காலீஸ்வரர்" என்று அழைக்கப்படலானார். மேலும், லவ-குசா வழிபட்டுத் தங்கள் பித்ரு தோஷத்தைப் போக்கிக் கொண்டதால், இறைவனுக்கு "குசலவபுரீஸ்வரர்" என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தலத்து இறைவனை வழிபடுவதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
கோயில் அமைப்பு:
ஏழு நிலைகளுடன் இராஜ கோபுரத்தைக் கடந்து, கோயிலுக்குள் நுழையும்போது, ஒரு பெரிய துவதஸ்தம்பம் உள்ளது, அதன் முன்னால் ஒரு நந்தி மண்டபம் உள்ளது. கோயிலின் பிரதான அர்த்தமண்டபம் பிரமாண்டமாக 40 தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது, இந்த கோயிலில் மூலவராக வீற்றிருக்கும் குசலவபுரிஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சந்நிதியும் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. அம்பாள் தனது இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருகிறார், இது தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காகக் காத்திருக்கிறார் என்பதைக் குறிப்பதாக ஐதீகம். இந்த அம்பாளை வணங்குவதன் மூலம் திருமணத் தடைகள் நீங்கி, சுபகாரியங்கள் கைகூடும் என்பதும் நம்பிக்கை. அம்பாள் சந்நிதிக்கு முன்புறம் நூதன பஞ்சவர்ண நவகிரக சந்நிதி ஒன்று சதுர மேடையில் தாமரை பீடத்தின் மீது நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஏழு குதிரை பூட்டிய தேரை, அவரது சாரதியான அருணன் ஓட்ட, மனைவியருடன் பவனி வரும் சூரியபகவான் நடுநாயகமாக வீற்றிருப்பது தனிச் சிறப்பு. சூரிய பகவான் இக்கோயிலில் குறுங்காலீஸ்வரரை வழிபட்டமையால், இங்குச் சூரிய தேவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சித்திரை மாதம் ரதசப்தமியின் போதும் இவருக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. நவக்கிரக சந்நிதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, ரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை எனப் பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம்.
இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமி சந்நிதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் வீற்றிருப்பது ஒரு அபூர்வ அமைப்பாகும்.
பிரகாரத்தில் ஜூரகேஸ்வரர் லிங்க வடிவத்தில் இருக்கிறார். விநாயகர், வள்ளி, தெய்வயானையுடன் கூடிய ஸ்ரீ சுப்பிரமணியர், சரஸ்வதி, மகாலட்சுமி, சாஸ்தா, சோமாஸ்கந்தர், காசி விஸ்வநாதர் ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன.
மகாவிஷ்ணு மற்றும் துர்க்கை கருவறையின் மேற்குப்புற கோஷ்டங்களில் உள்ளனர். திருச்சுற்றில் நடராஜர், சூரியன் மற்றும் 63 நாயன்மார்களின் சிலைகளையும் காணலாம்.
கோயிலுக்கு முன்னால் திருக்குளமும், அதையொட்டி ஒரு பதினாறுகால் மண்டபம் உள்ளது. ஒவ்வொரு தூணிலும் வேணுகோபால சுவாமி, ஏக பாதர், அண்ணாமலையார், உமா மகேஸ்வரர், வீர பத்திரர், வீரன், சண்டிகேஸ்வரர் போன்றவர்களின் அழகிய சிற்பங்கள் உள்ளன, மேலும் இராமாயணக் காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு தூணில் சரபேஸ்வரர் காட்சி தருகிறார். இங்கு சரபேஸ்வரரை ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் ஏராளமான மக்கள் வழிபாடு செய்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபட்டால், எதிரிகள் தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
ஸ்தல தீர்த்தம்: குசலவ தீர்த்தம்.
ஸ்தல விருட்சம்: பலா.
கோயில் சிறப்புகள்:
இத்தலத்தை ஆதிபிரதோஷத்தலம் என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயிலில் உள்ள நந்திக்கு மூக்கணாங்கயிறு உள்ளது. இத்தகைய அமைப்புடன் கூடிய நந்தியை வேறு எந்தத் தலத்திலும் காண்பது அரிது. ஒருமுறை சித்தம் கலங்கி சிவபெருமானின் அருளால் தெளிவடைந்த நந்திதேவர், இங்கு கட்டுண்ட கோலத்தில் மூக்கணாங்கயிற்றுடன் அமர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம்.
திருவிழாக்கள்:
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ரதசப்தமி
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
கோயிலுக்குச் செல்லும் வழி:
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு ஒருமுறை வந்து வழிபட்டு, பித்ரு தோஷ நிவர்த்தி பெற்று, வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி, நிம்மதியான வாழ்வைப் பெறலாம்..!!
வைகுண்டவாச பெருமாள் கோயில்:
இந்த கோயில் குறுங்காலீஸ்வரர் அருகிலேயே உள்ளது.
ஸ்ரீ ராமரின் மகன்களான லவ மற்றும் குசன் ஆகியோர் தனது தாயார் சீதா தேவியுடன் இங்குள்ள ஆசிரமத்தில் வால்மீகி ரிஷியின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வாழ்ந்தார்கள்.
இங்குள்ள வைகுண்டவாச பெருமாளை இவர்கள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. வால்மீகி ரிஷியின் வேண்டுகோளின் பேரில், இராமரும் இங்குத் தங்கி வைகுண்டவாச பெருமாளாகத் தரிசனம் செய்தார். எனவே இந்த இடம் முக்கியத்துவம் பெறுகிறது. இங்குள்ள மூலவர் ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள், ஸ்ரீதேவி , பூதேவி தாயாருடன் நின்ற கோலத்தில் காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பாகும். உற்சவமூர்த்தி சதுர்புஜங்களுடன் காட்சியளிக்கிறார். இதிலும் ஒரு விசேஷ அம்சம், வலக்கை அபய ஹஸ்தமாகவும் இடத் திருக்கரம் ஆஹ்வான ஹஸ்தமாகவும் (அழைத்து அருளும் பாவம்) அமைந்துள்ளது.
கோயில் அமைப்பு:
கோயிலின் கோபுரம் மொட்டை கோபுரமாக உள்ளது .12 ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும். கோயிலுக்குள் நுழையும் போது துவஜஸ்தம்பம், பலி பீடம் மற்றும் ஸ்ரீ வைகுண்டவாச பெருமாளை நோக்கி கருடனுக்கு ஒரு சிறிய தனி சந்நிதி உள்ளது. அதன் இடதுபுறத்தில் விநாயகருக்கும் சிறிய தனி சந்நிதி உள்ளது. அதற்கு அடுத்ததாகத் தெய்வீக இயல்புடைய ஒரு வேப்ப மரம் இரண்டு வில்வ மரங்களுடன் பிணைந்து காணப்படுகிறது. இம்மரங்கள், சிவன், விஷ்ணு மற்றும் தாயார் அம்சமாகக் கருதப்படுகின்றன. இம்மரத்திற்கு 'பார்வதி சுயம்வர விருட்சம்' என்று பெயர். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும், இவ்விருட்சங்களுக்குக் கல்யாண தோஷம் நிவர்த்தி வேண்டி, பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.
கருவறை முன் மண்டபத்தில் வால்மீகி மகரிஷி லவன், குசன் உடன் சேர்ந்தார் போல் உள்ளார் . வால்மீகி மகரிஷி அமர்ந்த நிலையில் அவருக்கு இருபுறம் லவன், குசன் இருவரும் அவரை வணங்கியபடி இருக்கிறார்கள். இங்கு அனைத்து ஆழ்வார் சிலைகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோயிலில் ஸ்ரீ ராமர் மற்றும் சீதா தேவி சந்நிதியில் லட்சுமணன் அனுமன் உடன் இல்லாமல் காட்சி தருவது ஒரு அபூர்வமான அமைப்பாகும். இருவரும் அரச கோலத்தில் இல்லாமல் மரவுரி தரித்து இருப்பதும் ஒரு அபூர்வ கோலமாகும்.
மேலும் இந்தக் கோவிலில், தனிச் சந்நிதியில்யில் சீதாதேவி கர்ப்பிணி கோலத்தில், மேடிட்ட வயிற்றுடன் எழுந்தருளி இருப்பது ஒரு அபூர்வ தோற்றமாகும். இத்தலத்தில் சீதா தேவிக்கு நடத்தப்படும் வளைகாப்பு உற்சவம் மிகவும் சிறப்பானது. குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சீதா தேவிக்கு வளையல் அணிவித்து வேண்டிக்கொண்டால், விரைவில் அந்த பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோயிலின் வெளிப்புற பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் ஒரு தனி சந்நிதியில் ஸ்ரீ கனகவல்லி தாயார் அருள்புரிகின்றார். ஆண்டாளுக்குத் தனி சந்நிதி கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. கனகவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் சந்நிதிகளுக்கு இடையில், நாக தெய்வங்கள் அழகாக வைக்கப்பட்டுள்ளன. கோயிலின் எதிர் பக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒரு தனி சந்நிதி உள்ளது, அவர் இங்கு ராம பக்த ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். பக்தர்கள் இந்த ஆஞ்சநேய சுவாமியை வணங்கி, தங்கள் விருப்பங்கள் நிறைவேற மஞ்சள் துணியில் தேங்காயைக் கட்டி வணங்குகிறார்கள்.
ஸ்தல தீர்த்தம்: குசலவ தீர்த்தம். இந்த குளம் லவ குசனால் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த குளம் இரண்டு கோயில்களுக்கும் பொதுவானது.
ஸ்தல விருட்சம்: வில்வ மற்றும் வேம்பு
கோயில் சிறப்புகள்:
இந்த கோயில் ஒரு நித்ய சொர்க்க வாசல் என்ற சிறப்பை பெற்றது.
இங்கு வால்மீகி மகரிஷி தங்கியிருந்ததன் அடையாளமாகப் பிரகாரத்தில் புற்று ஒன்று உள்ளே இருக்கிறது.
இக்கோயிலிலுள்ள விமானம் பெருமாளின் நிழல் போல, அவரது வடிவிலேயே இருப்பதாக ஐதீகம். எனவே, இவ்விமானத்திற்கு சாயா விமானம் (நிழல் விமானம்) என்று பெயர்.
திருவிழாக்கள்:
ஆனியில் பிரம்மோற்சவம், ஆடியில் விகனஸர் உற்சவம் 10 நாட்கள், பங்குனி உத்திரத்தில் சுவாமி திருக்கல்யாணம். திருவோண நட்சத்திரத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
கோயிலுக்குச் செல்லும் வழி:
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள குறுங்காலீஸ்வரர் கோயிலின் அருகிலேயே இக்கோயிலையும் நாம் காணலாம் .
நாராயணனும் நமசிவாயனும் அருகருகே கோயில் கொண்டு அருளும் இந்த கோயில்களைத் தரிசித்து, குறுங்காலீஸ்வரர், வைகுண்ட வாசப் பெருமானின் திருவருளைப் பெறுவோம்!!
Leave a comment
Upload