பிள்ளையார் சுழி என்று போட்டு ஆரம்பிப்பது ஏன்? இது எப்படி வந்தது?
பழங்காலத்து கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் கூட பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இது எப்படி ஏற்பட்டது என்ற கருத்து இன்று பலருடைய கருத்துக்களையும் கவர்ந்திருக்கிறது.
நம்முடைய எழுத்து வட்ட வடிவமானது வட்டம் என்பது இயற்கையான வடிவம். குழந்தைகள் வட்டம் வட்டமாக எழுதுவதை பார்க்கிறோம். அதுபோல எழுதத் தொடங்குபவனும் வட்டம் இட்டான். விரைந்து எழுதும்போது வட்டத்தின் முடிவு நீளக்கோட்டில் முடியும். இதற்கு 'பிள்ளையார் சுழி' என்ற பெயர் சூட்டினார்கள் சமயத்துறையைச் சார்ந்தவர்கள் என்று சிலர் கூறுவார்கள்.
சிலர் ஏட்டிலும் தாளிலும் எழுதும்போது எழுதுகோலின் நேர்மையை ஆராய சுழி இழுத்தார்கள். வட்டமும் கோடுமான இரு வடிவங்களையும் எழுத இந்த எழுதுகோல் பயன்படுமா என்று சோதித்துப் பார்த்தார்கள் அதற்காக சுழித்து இழுத்தார்கள். தொடங்கிய எதனையும் பிள்ளையார் உடன் சேர்த்துவிடும் பெருந்தகையாளர்கள், இதனை பிள்ளையார் சுழி என்றனர் என்பார்கள் வேறு சிலர்.
'ஓம்' என்பது முதல் எழுத்து இதனை விரைந்து எழுதும்போது 'உ' என்று வரும், இப்படி எழுதினார்கள் நன்றி மறவாத தமிழ் மக்கள். எழுத்துக்களுக்கு எல்லாம் தாயாகிய பிரணவ வடிவத்தை முன்னெழுதியே ஏனையவற்றை பின் எழுதினர். இந்த பிரணவம் பிள்ளையார் வடிவம். பிரணவத்தின் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி என்று கூறுவார்கள்.
பிரணவம் ஐந்து எழுத்துக்களின் கூட்டம். முதல் உரு நட்சத்திர வடிவு அதாவது வட்ட புள்ளி, இரண்டாம் வடிவு தண்டம் போல படுக்கையில் கிடக்கும் நேர்கோடு. மூன்றாம் உரு வட்டம். நான்காம் உரு பிறைமதி, ஐந்தாம் உரு பிந்து. இவற்றில் வட்ட புள்ளியும் நேர்கோடும் இணைந்து பிள்ளையார் சுழி ஆகிறது. இந்த சுழியை இட்டாலே போதும் பிள்ளையார் வணக்கம் ஆகிவிடுகிறது.
பிரணவத்தின் ஐந்து கூறுகளுக்கும் உரிய அதிதேவதைகள் இருக்கிறார்கள் அவர்களை இன்னார் என கூற வந்த சிவஞானபோதம் அகரத்திற்கு பிரம்மனையும் உகரத்திற்கு திருமாலையும், மகரத்திற்கு உருத்திரனையும், பிந்துவிற்கு மகேசனையும் நாதத்திற்கு சதாசிவனையும் கூறிற்று. எழுதத் தொடங்குவது என்பது இலக்கிய சிருஷ்டி. அதனால் இலக்கியம் தோன்றவும், நின்று நிலவவும் வளர்ச்சி பெறவும் ஐந்து தெய்வங்களையும் வணங்கும் முகத்தான் பிள்ளையார் சுழியை இடுகிறோம்.
நன்றி - திருவாவடுதுறை ஆதீன வித்வான் ச. தண்டபாணி தேசிகர்
("கணபதி" என்ற திருவாவடுதுறை ஆதீன இதழிலிருந்து)
மலைகள் மீதும் கடற்கரையிலும் விசேஷமாக ஆலயங்கள் அமைக்கப்பட்டிருப்பது ஏன் ?இதற்கு விஞ்ஞானபூர்வமான பின்னணி ஏதாவது உண்டா?
நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருள்களை நாம் பூஜையில் பயன்படுத்துகிறோம். வேப்பிலை, மாவிலை, துளசி, எலுமிச்சம் பழம் போன்றவற்றுக்கு இந்தப் பண்பு மிகவும் அதிகம். மந்திரங்களை சொல்லி வந்திருக்கும்போது வேப்பிலையையும் எலுமிச்சம் பழத்தையும் உபயோகிப்பதற்கு காரணமும் இதுதான். பண்டிகை நாட்களில் மாவிலையையும் துளசியையும் நாம் உபயோகிப்பதற்கும் இதுதான் காரணம். அபிஷேகம் அர்ச்சனை ஆகியவற்றிலும் இதனால்தான் இவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்த முறையில் நமக்கு எதிர்மறையான ஐயான்கள் (Negative ions) கிடைக்கின்றன. பிராணவாயு நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் பண்பாக கலப்பதற்கு இது உதவுகிறது. கோயில்களில் நகரங்களிலும் வெளியிலும் இருப்பதைவிட பூஜை நடைபெறும் கர்ப்ப கிரகத்தில் இந்த சக்தி அதிகமாக கிடைக்கிறது.
கடற்கரையிலும், மலை மீதும் உள்ள ஆலயங்களில் இந்த சக்தி இயற்கையாகவே பெருமளவில் கிடைக்கிறது. மலை அருவிகள் பொழியும் இடத்திலும் இது நிறைந்திருக்கிறது. இதனால் தான் மலை மீதும் கடற்கரையிலும் அருவிகள் நீர்வீழ்ச்சியாக பொழியும் இடங்களிலும் ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள். திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் கடற்கரை ஆலயங்கள் உள்ளன. பழனி, திருப்பதி போன்ற இடங்களில் மலை மீது ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. குற்றாலத்தில் அறிவு பொழியும் இடத்தில் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இன்று நகரங்களில் உள்ள அசுத்தமான சூழ்நிலையில் இந்த சக்தி வாய்ந்த பண்பு நமக்கு கிடைப்பதில்லை. அதனால் பலரும் இந்த புகழ் பெற்ற ஆலயங்களுக்கு பக்திபூர்வமாகவும் உடல் நலம் பெறவும் தேடிச் செல்கிறார்கள்.
நன்றி..'Hinduism a scientific approach '
(என்ற குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி வெளியீட்டிலிருந்து).
தெரிந்துகொள்வோம்...
Leave a comment
Upload