தொடர்கள்
கதை
கன்னித்தீவு அழகி- கி. ரமணி

20250722211742843.jpeg

இன்னும் கொஞ்ச நேரத்தில் 17ஆம் நூற்றாண்டின் ராபின்சன் குரூஸோ போலவோ, 2000ம் வருஷம் வந்த கேஸ்ட் அவே பட ஹீரோ டாம் ஹான்க்ஸ் போலவோ கூகுளற்ற ஒரு குட்டி பசுபிக் தீவில் மாட்டப் போகிறோம் என்பது கொஞ்சம் கூடத் தெரியாமல் விக்ரம் அந்த சிறிய சொகுசுக் கப்பலில், பசிபிக் கடலில் ஒரு பிரபல தனியார் ஹாலிடே தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

கலிபோர்னியாவின் ஒரு நடுத்தர வயதுள்ள மணமாகாத தொழிலதிபர் அவன். ரொம்ப நாள் கழிச்சு ஒரு வாரம் விடுமுறையில் பயணம்.

அந்தச் சிறிய கப்பலில் அப்படி பயணம் செய்து கொண்டு இருந்த போது தான் பெரிய பாறை ஒன்றின் மீது கப்பல் மோதிக் கவிழ்ந்தது.

விக்ரமைத் தவிர எல்லோரும் இறந்து போய் விட்டார்கள். விக்ரம் தனி ஆளானான்.

விக்ரமுக்கு நீச்சல் நன்கு வரும் ஆனால் அவன் போக வேண்டிய தீவு பல நூறு மைல் தூரத்தில் இருந்தது. நீந்திப் போக முடியாது. ஆனாலும் ஒரு மரக்கட்டை உதவியுடன் நீந்தினான்... உயிர் பிழைக்க.

அவன் அதிர்ஷ்டம் பக்கத்துல ஒரு சின்ன தீவு பச்சை பசேல் என்று தெரிந்தது.

நீந்தி கரை சேர்ந்தால், இவன் வந்த கப்பலின் சிறிய உடைந்த ஒரு பாகம் தீவுக்குப் பக்கத்தில் தரை தட்டி இருந்தது. அதிலிருந்து துப்பாக்கி,குண்டுகள், உடைகள்,பாத்திரங்கள், கத்தி, சுத்தியல் இத்யாதி, அவன் அதிர்ஷ்டத்தால் கிடைக்க அள்ளி எடுத்துக்கொண்டு தீவுக்குள் சென்றான்.

தீவில் வேறு யாரும் இல்லை. தென்னை மற்றும் பிற மரங்கள்,சிறிய மிருகங்கள், பறவைகள்,சிறிய நீர்நிலை, அவ்வளவுதான். ஊருக்கு திரும்ப சான்ஸ் இல்லை. ஏதாவது கப்பல் அல்லது விமானம் கண்ணில் தென்பட்டால் தான் வாய்ப்பு.

சர்ச் டீம் னு இங்க யாரும் தேடி வர வாய்ப்பு கம்மி என்று அவனுக்கு தெரியும். இந்த பயணமே யாருக்கும் தெரிய வேண்டாம் என்று இவன் ரகசியமாக ஏற்பாடு செய்தது.

முதலில் அந்தத் தீவுக்கு " கன்னித்தீவு" என்று சிந்துபாத் ஞாபகமாக பேர் வெச்சான் விக்ரம்.

பின் மரம் வெட்டி எடுத்து வந்து,தென்னை ஓலைக் கூரை கொண்டு வீடு கட்டினான். மரப்பலகை ஒன்றில் தினமும் கத்தியால் ஒரு கோடு போடும் காலண்டர் செய்து கொண்டான்.

முத்தின தேங்காயில், கண், மூக்கு, வாய் செதுக்கி முகமாக்கி காஸ்ட் அவே படத்தில் டாம் ஹாங்க்ஸ், கைப் பந்தில் செய்த முகம் போல் ஒரு நண்பனை ஆக்கிக் கொண்டான்.

தேங்காய் நண்பனுடன் பேசிப் பார்த்தான். கண்றாவியாக இருந்தது. செட் ஆகலை. வேறு யாராவது உயிரோடு கிடை க்கிறார்களா பார்க்கலாம்.. என்று காத்திருந்தான். வேட்டையாடினான்.மீன்பிடித்தான்

சிக்கி முக்கிக் கல் கண்டுபிடித்து, நெருப்பு மூட்டி, மீன், நண்டு, முயல், காட்டுப்பன்றி, முள்ளம் பன்றி,எல்லாம் சுட்டுத் தின்றான்.

ஹெல்த் ட்ரிங்க் ஆக இளநீர் அங்கு ஏராளம்.

இப்படி நல்லாத்தான் போயிட்டு இருந்தது வாழ்க்கை. ஆனா ஒரு துணை இல்லை.

ஒரு நாள் கட்டு மரத்தில், ஒரு இளம் பெண்ணை கை, கால் கட்டிய நிலையில் அலற அலற ஒரு பத்து காட்டுமிராண்டிகள் கன்னித்தீவுக்கு இழுத்து வந்தார்கள்.

அவள் இளமையாக, கருப்பாக, கொள்ளை அழகாக இருந்தாள். அங்கு வேறு ஒரு லோக்கல் காட்டுமிராண்டி குழுவை சேர்ந்த பெண் போல தெரிந்தாள் அந்த அழகி...... காட்டுமிராண்டி அழகி.

விக்ரமின் தீவுக்குள் அவளைக் கொண்டு வந்து, அவளைச் சுற்றி, ஆடி கும்மி அடித்தார்கள் காட்டுமிராண்டிகள்.

அவர்களின் உண்மையான நோக்கம் சரியாகப் புரியாவிட்டாலும், அந்தக் காட்டுமிராண்டிகளுக்கு அப்பெண்ணின் மீது துளிக் கூட சகோதரத்துவப் பார்வை இல்லை என்பதை உணர்ந்த விக்ரம், துப்பாக்கியை நீட்டி மூன்று மிராண்டி ஆட்களை காலில் சுட்டான்.

திடீர்னு தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக கேட்ட குண்டு சப்தத்தால் அரண்டு போன மற்ற காட்டுமிராண்டிகள், அடிபட்டு குய்யோ முறையோ என்று கத்தும் தங்கள் சக ஆட்களையும் இழுத்துக் கொண்டு, கட்டு மரத்தில் பாய்ந்து ஏறி, கடலில் பறந்தனர். அழகியை அம்போ என்று விட்டுவிட்டார்கள்.

அழகியின் கை கால்களில் கட்டப்பட்டிருந்த மரவேர்களை அறுத்தபின், அவளை நோக்கினான் விக்ரம். அவளும் நோக்கினாள்.

அவள் அவனை நோக்கியதில் வினோதம் இருந்தது. ஆவல் இருந்தது. வேறு ஏதோ ஒன்றும் இருந்தது போல தோன்றியது. 'இந்த கனவுக் கலவை தான் காதலின் ஆரம்பம்' என்று எண்ணிக் கொண்டான் விக்ரம்.

கன்னித்தீவில்,ஒரு ஞாயிற்றுக்கிழமை கிடைத்த இவளுக்கு, 'சண்டே' என்ற பெயர் தான் வைக்கணும் என்று எண்ணிக் கடைசியில் 'ஹாலிடே ' என்று தனக்கு பிடித்த பெயரை வைத்தான்.

'ஹாலிடே' என்று கூப்பிட்டுப் பார்த்தால் 'பே பே ' என்றாள்.

அவன் கூப்பிடும் ஒவ்வொரு முறையும் அவனை உற்றுப் பார்த்தாள் அவள்.... அவனுடைய முகத்தை, கைகளை, உறுதியான கால்களை, மார்பை எல்லாத்தையும் தான்.

அவள் கண்களில் ஆவல் ஆர்வம் தெரிந்தது.

இந்த தீவின் ஒரே ஆளான அழகான தன்னை அவள் காதலிப்பது இயற்கை தானே என்று உணர்ந்தான் . ஆனால் அவன் அவசரப்படவில்லை.

காதல் தானாக கனிய வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும்.

ஹாலிடேக்கு தனிக் குடிசை ஒன்று கட்டிக் கொடுத்தான். உடைந்த கப்பலில் எடுத்த பெண் உடைகளைக் கொடுத்தான். வேளா வேளைக்கு உணவு கொடுத்து அவளை மகாராணி கணக்கா நடத்தினான்.

ஹாலிடே தன் காதலை விக்ரமிடம் சொல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடு தான் இது எல்லாம்!

சரி. அதற்கு அவளால் பேச முடிய வேண்டாமா? எந்த மொழியில்?

முயற்சி எடுத்துக் கொண்டான். அந்தக் காலத்து 'பார்த்தால் பசி தீரும் ' படத்தில் ஜெமினி கணேசன்,ஆதிவாசியான சாவித்திரிக்கு ஆனா, ஆவன்னா, சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வந்தது.

தமிழை இவனும் மணலில் எழுதி கற்றுக் கொடுத்தான். ஆச்சரியம்! வேகமாக தமிழ் பேச கற்றுக் கொண்டாள் ஹாலிடே!

அணில், ஆடு, இலை, ஈ, உரல், ஊதல், என்று மள மள என்று சொல்ல ஆரம்பித்து விட்டாள். கூடிய சீக்கிரமே 'அகர முதல எழுத்தெல்லாம்' சொல்லும் லெவலுக்கு வந்து விடுவாள் என்று பெருமைப்பட்டான் விக்ரம்.

ஹாலிடே ஒவ்வொரு வார்த்தையாக சொல்ல ஆரம்பித்தாள்.

நீ, நான், விக்ரம்,ஹாலிடே, நல்லா, இருக்கு,பிடிச்சிருக்கு,என்னை,உன்னை, உணவு, தூக்கம்,பசி, நெருப்பு, கை,கால், உடல், போடு, எல்லாம், தூக்கி,.இப்படி நிறைய வார்த்தைகள் வந்து விட்டன.

சுமாரா உடைந்த வாக்கியங்கள் அமைச்சு பேச முயன்றாள்.

இப்போ, ஒவ்வொரு முறையும்,விக்ரமை நோக்கும் போது அவள் கண்ணில் ஆசை ரொம்ப அதிகமாக தெரிந்தது போல் அவனுக்குத் தோன்றியது.

விக்ரம் அவசரப்படவில்லை.

ஊருக்குத் திரும்பி போகும் வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கையும் குறைகிறது. அதனால ஒழுங்கா இவளை கல்யாணம் பண்ணி குடியும் குடித்தனமாக இங்கு இருக்கலாம் என்று நினைத்தான்.

இன்னும் அவளுக்கு தமிழ் நன்றாக வரட்டும் என்று காத்திருந்தான். இப்படியே ஆறு மாசம் போய் விட்டது.

அடுத்த வாரம் இவனுடைய பிறந்தநாள் வேற. அன்று எப்படியாவது இவளிடம் தன் காதலைக் கூறி அவள் சம்மதம் கேட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தான்.

அந்தப் பிறந்த நாளும் வந்தது.

இரவில் முழு நிலவு.

சிறிய களிமண் பிள்ளையார் ஒன்று செய்து,எருக்கம் பூ போல் ஒரு பூவைக் கண்டுபிடித்து மாலை ஒன்றை செய்து போட்டான்.

மஞ்சளை ஒத்த கிழங்கு ஒன்றை நாரில் கட்டி தாலியாக,ரெடியாக பிள்ளையார் எதிரில் வைத்திருந்தான்.

ஹாலிடேய்க்கு ரொம்ப பிடித்த விஷயமான முள்ளம்பன்றி ஒன்றை வேட்டையாடி, உணவாக்குவதற்கு நெருப்பு வளர்த்தான்.

ஹாலிடே அங்கு வந்து நெருப்பைப் பார்த்தாள்.பின் அவனை ஆசையோடு பார்த்தாள்.

"உனக்கும் எனக்கும் ரொம்ப முக்கியமான நாள் இது. உன் சம்மதம் மட்டும் கிடைக்குமானால்...." என்றான்.

வாய் திறவாமல் அவனை நோக்கினாள் ஹாலிடே.

" உன்னிடம் எப்படி கேட்பது என்று எனக்கு தெரியவில்லை. இந்த நிலவில் இந்த இரவில் உன்னுடன் இருக்கும் இந்த வேளையில் மிக மிக சந்தோஷமாக உணர்கிறேன். நான் உன்னை மனமாரக் காதலிக்கிறேன்.

இப்படியே, இந்த மகிழ்ச்சியில், நான் இங்கேயே இறந்து போனால் கூட எனக்கு கவலை இல்லை."

ஹாலிடே முகத்தில் மாறுதல்.

" ஆமாம்! அப்படியே நான் நிஜமாகவே இறந்து போனால் நீ என்ன செய்வாய் ஹாலிடே.? " என்று குறும்புடன் கேட்டான் விக்ரம்.

கொஞ்ச நேரம் பேசாத ஹாலிடே மெதுவாக,

"உன்...உடலை... தூக்கி.... நெருப்பிலே போட்டு... விடுவேன்.. "என்றாள்.

" நான் இறந்த பின்பு,என்னை எரிப்பதா புதைப்பதா என்பது பற்றி நான் உன்னைக் கேட்கவில்லை கண்ணே. என் இறப்பினால் நீ அழ மாட்டாயா? என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்லையா?" என்று உணர்ச்சியும் அன்பும் பொங்கக் கேட்டான் விக்ரம்.

ஹாலிடே சொன்னாள்.

"முதல்ல.. பார்த்த...போதே....எனக்கு... உன்னை.....ரொம்ப.... பிடிச்சிடுச்சு."

கொஞ்சம் நிறுத்தினாள். பின்னர்,

" அதனால் தான் நீ இறந்த பின் உன்னை தீயில் போட்டு சமைத்து.. அப்புறம் முழுசா தின்னுடுவேன். நீ வலிமையான திடமான,ஆளு இல்லையா? சாப்பிட ரொம்ப ருசியா இருப்பாய்.!!"என்றாள்

அந்தக் காட்டுமிராண்டி ஹாலிடே.!!