தொடர்கள்
மருத்துவம்
புற்றுநோய் தடுப்பூசி-வெற்றிகரமாகிறது ரஷ்யாவின் முயற்சி-தில்லைக்கரசிசம்பத்

20250722091528165.jpeg

ஒரு காலத்தில், உலகம் கொரோனாவால் நடுங்கிக் கொண்டிருந்த போது, ரஷ்யாவின் கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல்ஆராய்ச்சி நிறுவனம் (Gamaleya Research Institute of Epidemiology and Microbiology) ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசியை கண்டறிந்தது

ரஷ்யாவின் அதே கமலேயா இன்று, உலகிற்கே பெரும் வரப்பிரசாதமாக ‘புற்றுநோய் தடுப்பூசி’யை கண்டுபிடித்துள்ளது.

தடுப்பூசி என்றால் புற்றுநோய் வருவதற்கு முன்பே போடப்படும் ஊசி அல்ல. புற்றுநோய் வந்த நோயாளிக்கு இந்த தடுப்பூசியை போட்டு குணப்படுத்துவது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் வாழ்நாள் முழுவதும் உடலில் நோயெதிர்ப்புசக்தி என்ற ஒன்று இருக்கும்.

பல நோய்கள் மனிதனை தாக்கும்போது நமது உடலின் எதிர்ப்புசக்தி(Tcells) அந்த நோய்கிருமிகளுடன் போராடி அவற்றை அழித்து நம்மை காக்கின்றன.

இதை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு புற்றுநோய் நோயாளியுடைய புற்றுக்கட்டியின் செல்களை (tumor) வெளியில் எடுத்து அதற்கு எதிர்ப்புசக்தியை ஏற்றி, பின் அதே செல்களை நோயாளியின் உடம்பில் செலுத்துகிறார்கள்.

ஒவ்வொரு செல்லிலும் நியூக்ளியஸ், சைட்டோப்பளாசம் உள்ளது. நியூக்ளிஸில் நமது மரபணுக்களை சரிப்பார்க்கும் டிஎன்ஏ உள்ளது.

அந்த டிஎன்ஏயில் சில வகை புரதங்களை உருவாக்கும் எம் ஆர்என்ஏவும் உள்ளது . இந்த புரதங்கள் தான் சில நேரங்களில் புற்றுநோயை மனிதர்களுக்கு வர செய்கிறது.

இந்த புற்றுநோயாக மாறும் புரதங்களை உருவாக்கும் எம் ஆர்என்ஏக்களை (mRNA) தான் வெளியே எடுத்து நோய்தடுப்பாற்றலை ஏற்றி அந்த தூதுவர்(messenger RNA) ஆர்என்ஏவை மீண்டும் மனித உடலில் ஏற்றுகிறார்கள்.

இந்த நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோய் செல்களை குறிவைத்து அவற்றுக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கும்.

இந்த புற்றுநோய் தடுப்பூசியை செப்டம்பர், அக்டோபர் 2025-ல் முதல் மனிதர்களிடம் சோதனை செய்ய உள்ளார்கள் .

மெலனோமா (சரும புற்றுநோய்) மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல வகை புற்றுநோய்களை இது குணப்படுத்தும்.

இதுவரை எலிகளின் மேல் நடந்த சோதனையில் அவற்றிற்கு புற்றுநோய்க்கட்டி வளர்ச்சி நின்றது, நோய் பரவும் ஆற்றலும் குறைந்திருக்கிறது.

20250722091908803.jpeg

செயற்கை நுண்ணறிவு (AI) இந்த புற்றுநோய்க்கான தடுப்பூசியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நோயாளியின் கட்டி (tumor) தொடர்பான மரபணு தகவலை (genetic data) AI மிக வேகமாக பகுப்பாய்வு செய்து ஒருமணி நேரத்தில் முடிவுகளை தருகிறது.

அந்த தகவலின் அடிப்படையில், புற்றுக்கட்டிக்கு உரிய தனிப்பட்ட (personalized mRNA) தடுப்பூசி ஒரு வாரத்தில் வடிவமைக்கப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் புற்றுநோய்க்கு ஏற்ற தனிப்பட்ட மருந்து தயாரிக்க முடியும்.

செலவை பொறுத்தவரை ஒரு தடுப்பூசிக்கு ₹2.3 லட்சம் செலவாகும். ஆனாலும் ரஷ்ய அரசு “புற்றுநோய் சிகிச்சை பணக்காரருக்கு மட்டும் அல்ல, எல்லோருக்கும் பொதுவாக்குவோம்” என்று சொல்லி இலவசமாக தர தீர்மானம் எடுத்துள்ளது.

வருடந்தோறும் புற்றுநோயால் 1 கோடி மக்கள் இறக்கிறார்கள் என உலகசுகாதார அமைப்பு புள்ளிவிவரம் அளிக்கிறது.

உண்மையில் மனித சோதனையில் (clinical trial) வெற்றி என்றால் இது உலக மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனை.

உலகிலேயே முதல்முறையாக சோவியத் ஒன்றியம், அக்டோபர்4,1957 அன்று செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1 ஐ விண்வெளியில் ஏவிவியக்க வைத்தது.

1961ல் “வோஸ்டாக் 1” விண்வெளிக்களத்தில் ரஷ்யலெப்டினன்ட் யூரி ககாரின் பூமியைச் சுற்றி வந்த முதல் மனிதர் என்ற பெருமையைக்கொண்டார்.

நடப்புக்காலத்தில் ரஷ்யா உலகளவில் செல்வாக்கு இழந்த நிலைமையில் இருந்தாலும் இப்போது உடலுக்குள் நடக்கும் போரில் புது ஆயுதத்தை உருவாக்கிக் கொண்டிருப்பது பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது .