வியாசரின் அருளால் பிறந்த விதுரன் அவர் சொல்லியவாறு ஞானியாக விளங்கினான்.
போர்ப்பயிற்சியையும் சாஸ்திர கல்வியையும் இளவரசனாக பெற்றாலும் பாண்டுவுக்குப் பின் அரியணை ஏறவில்லை. ஆனாலும் அரசரின் கட்டளையை குறைவின்றி நிறைவேற்றினார். தருமனை வென்ற பின் ஆணவத்தில் துரியோதனன் "பாஞ்சாலியை அழைத்து வா" என்று விதுரரிடமே கட்டளையிட்டான். ஆயினும் தகாத காரியங்கள் எதையும் விதுரர் செய்யவில்லை. அண்ணன் கடிந்து கொண்ட போது (பாண்டவர்கள் இருக்கும்) கானகத்துக்கும் செல்ல தயங்கவில்லை. எந்நிலையிலும் மாறுபாடு தோன்றாமல் இருந்தார். அதே சமயம் கௌரவர் செய்யப்போகும் தீமைகளை முன்னரே எதிர்பார்த்து ஆவண செய்து வாரணாவதத்தில் அரக்கு மாளிகை தீ விபத்திலிருந்து பாண்டவர்களை காப்பாற்றினார்.
துரியோதனன் பரிந்துரைத்த சூதை வேண்டாம் என்று கூறி தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும் தருமருடனான சூதாட்டத்தில் துரியோதனன் பாண்டவர் உடைமையை (நாடு, செல்வம், பாண்டவர் மற்றும் திரௌபதி) வென்றாலும் பின்னால் மகாபாரத யுத்தத்தில் நூறு கௌரவர்களையும் இழக்க வேண்டியதாயிற்று.
தன்னிடம் கோபம் கொண்ட திருதிராஷ்டிரன், துரியோதனன் ஆகியோரை விதுரர் பூமி போல பொறுத்துக் கொண்டார். குருஷேத்திரப்போருக்கு முன் வில்லை உடைத்துவிட்டு யுத்தத்தில் பங்கேற்காமல் பலராமனுடன் தீர்த்த யாத்திரை சென்றார். தவறான வழியில் செல்லாததால் மகாபாரத யுத்தத்துக்கு பின்னும் அண்ணனுடன் கானகம் சென்று கானகத்தில் ஏற்பட்ட தீயில் அண்ணனுடன் காந்தாரியும் தீக்கு இரையான பின்னர் சஞ்சயனுடன் இமயமலை சென்று தியானம் மேற்கொண்டார்.
புகழ் இல்லாவிடினும் யாதொரு பழியும் இன்றி வாழ்ந்த விதுரன் உண்மையில் தரும தேவதையே!
குறளும் பொருளும்
எல்லா உயிர்களும் பிறப்பில் ஒன்றே; பிற்பாடு செய்யும் தொழில்கள்தான் அவர்களை வேறுபடுத்துகின்றன.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் 972
தெளிவுள்ளவர்கள், அரசனுக்கு நாம் வேண்டியவர் என்ற காரணத்தை காட்டி தகாத காரியத்தை செய்ய மாட்டார்கள்.
கொளப்பட்டேன் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர் 699
தன் உள்ளத்திலே மாறுபாடு தோன்றும் போது, அதனை எழாமல் தடுத்து கொள்ளுதலே ஆக்கம் தருவதாகும்; அதனை மிகுத்துக்கொண்டால் அவனுக்கு கேடு வரும்.
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு 858
அறிவுள்ளவர்களால் நடக்கப் போவதை எதிர்பார்க்க முடியும்; அறிவில்லாதவர்களால் அது முடியாது.
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லாதவர் 427
வரப் போவதை அறிந்து, காத்துக் கொள்ளும் அறிவுடையவர்களுக்கு நடுங்கும் துன்பம் இல்லை.
எதிரதாக்காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய் 429
சூதினை வேண்டற்க; ஒன்று கிடைத்து 100 இழக்கும் சூதாடிகளுக்கு நல்ல வாழ்க்கை அமையாது.
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு 932
தரையில் ஓங்கி அறைவது போல, கோபத்தால் தவறாமல் துன்பம் ஏற்படும்.
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந் தான் கைப்பிழையாதற்று 307
தன்னை தோண்டுபவர்களையும் நிலம் தாங்குவது போல், நம்மை அவமானப்படுத்துபவரைத் தாங்கிக் கொள்வது சிறப்பு.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை 151
தப்பான வழியில் விலகி, தீமை செய்யாமல் இருந்தால் கேடு வரவே வராது.
அருங்கேடன் என்பது அறிந்த மருங்கோடி
தீவினை செய்யான் எனின் 210
புகழ் இல்லாமல் வாழ்க்கை அல்ல; பழியில்லாமல் வாழ்வதே வாழ்க்கை
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் 240
Leave a comment
Upload