பல்லுயிர் நோக்க பாதுகாப்பின் ஒரு பகுதியான வரையாடு பாதுகாப்பில் தமிழகம் சீரிய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது முறையாக வரையாடு கணக்கெடுப்பு தமிழகம் மற்றும் கேரளா வன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டின் கணக்கெடுப்புபடி தமிழகத்தில் 1,303 வரையாடுகளும், கேரளத்தில் 1,352 வரையாடுகளும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு முதல் ஒத்திசைக்கப்பட்ட (synchronized) கணக்கெடுப்பு துவங்கப்பட்டது. கடந்த வருட கணக்கெடுப்பின் முடிவில் தமிழகத்தில் 1,030 வரையாடுகள் இருந்துள்ளது தெரியவந்தது. தற்போதய வரையாடுகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 21 % அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வரையாடுகள் மலை முகடுகளில் உள்ள புல்களை மேயும் ஒரு ஆட்டினமாகும். இந்த அழிவின் விளிம்பிலுள்ள வன உயிரினத்தின் வாழ்விடங்களுக்கு சென்று கணக்கெடுப்பு செய்வதென்பது மிக கடினமான வேலையாகும்.
ஒரு காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பல பகுதிகளில் இந்த வரையாடுகள் காணப்பட்டதாக வனஉயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த விலங்கினங்கள் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் சிறு சிறு பகுதிகளில் வாழ்கின்றன.
வாழ்விடம் துண்டாடப்படுத்தல், வேட்டையாடுதல், பருவநிலை மாற்றம், மற்றும், ஆக்கிரமிப்பு செடிகளின் அபார வளர்ச்சி ஆகியவை இந்த வரையாடுகளின் வாழ்விடங்களை சுருக்கி விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த காரணங்களால் வரையாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதென அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வருட கணக்கெடுப்பின்போது தமிழகத்தில் உள்ள ஆனைமலை புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியான க்ராஸ் ஹில் (Grass Hills) தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையில் வரையாடுகளை பார்த்ததாக கணக்கெடுப்பில் பங்கெடுத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் மட்டுமே 334 வரையாடுகளை அவர்கள் பதிவுசெய்துள்ளனர்.
கடந்த ஆண்டு 140 தொகுதிகளில் (blocks ) கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக 37 தொகுதிகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 177 தொகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக மாநில வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
கூடலூர் வனக்கோட்டம், நீலகிரி வனக்கோட்டம், முக்குர்தி தேசிய பூங்கா, கோயம்புத்தூர் வன கோட்ட பகுதிகள், பொள்ளாச்சி வனக்கோட்டம், திருப்பூர் வனக்கோட்டம், கொடைக்கானல் வனவிலங்குகள் சரணாலயம், தேனி வனக்கோட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்டம், மேகமலை வனப்பகுதிகள், நெல்லை வனக்கோட்டம், களக்காடு வன பகுதிகள், அம்பை வனப்பகுதிகள், மற்றும் கன்னியாகுமரி வன விலங்குகள் சரணாலயம் என 14 வன பகுதிகளில் வரையாடு கணக்கெடுப்பு இந்த வருடம் நடத்தப்பட்டது.
இந்த கணக்கெடுப்பிற்கு இரட்டை குழு நோக்கீட்டு முறை (double observer method) பயன்படுத்தப்பட்ட்டது. இந்த முறையில் இரண்டு குழுக்களில் இரு கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள். இது ஒரு அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு முறை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த முறை பயன்படுத்துவதால் வரையாடுகளின் எண்ணிக்கையை துல்லியமாக கண்டறியலாம் எனக்கூறுகின்றனர்
Leave a comment
Upload