எவரையும் வசீகரிக்கும் அழகு கொண்ட மாநகரம் சென்னை .
அதன் மாய அழகில் சொக்கிப் போனவர்களுக்கு உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சென்னையின் எழிலையும், பரபரப்பையும், மணத்தையும், மறக்க முடியாது.
ஒருமுறை அங்கு வாழ்ந்தவர்களுக்குப் புரியும், அந்த சிறிய உலகம் நம்மில் நிகழ்த்தும் மாற்றங்களை.
மகள் மருத்துவ மேற்படிப்புக்காக சென்னையில் சேர்ந்த போது நானும், கணவரும் சிலகாலம் அவளுடன் தங்கி இருந்தோம். அக்காலம் என் வாழ்வின் பொற்காலம் என்றே மனம் பொறித்து வைத்துள்ளது.
சென்னையைச் சுற்றும் போதெல்லாம் அங்கு இன்னும் இருக்கும் பழமை வாய்ந்த கட்டிடங்கள், கடைகள் நம் மனத்தைக் கொள்ளை கொள்ளும் . அவற்றுள் சில இங்கே
ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக்கடை
ஏபெல் ஜோஷ்வா ஹிக்கின்பாதம் என்னும் பிரிட்டிஷ் நூலகரால் 1844 ஆம் ஆண்டு 'மவுண்ட் ரோடில்' தொடங்கப்பட்ட புத்தகக்கடை. இந்தியாவின் முதன்மையான பெரிய புத்தகக்கடையாக விளங்கியது . கரையான் , தூசு, பூச்சுகளால் அறிக்கை முடியாத வண்ணம் அக்காலத்திலே அதை வடிவமைத்தார்கள். பல நகரங்களில் கிளை பரப்பினாலும் , சென்னையின் பழமை மிக்க கடையின் அழகை நெருங்க முடியாது .
ஜூனஸ் சைட் அண்ட் சன்ஸ் (Joonus Sait Sons)
ரத்தன் பஜாரில் இருக்கும் இப்பழமை வாய்ந்த கடை 1905 ஆம் ஆண்டு சிறிய ஸ்வெட்டர் கடையாக யூனுஸ் சையதுவால் தொடங்கப்பட்டது. ஆங்கிலேயரின் உச்சரிப்புக்கு உகந்த மாதிரி Yக்குப் பதிலாக J மாற்றி பெயர் வைக்கப்பட்டதாம். மழைக்கோட்டு முதல் கம்பளி ஆடைகள் வரை சென்னை மக்களுக்குத் தேவையான ஆடைகளை நூறாண்டுகளுக்கு மேலாக ஐந்து தலைமுறைகளாக விற்பனை செய்து வருகிறார்கள்.
ஜாபர் ஐஸ் கிரீம் பார்லர்
வால்லர்ஸ் ரோடில் இருக்கும் மிகப்பழமையான ஐஸ்கிரிம் கடை . முதல் உலகப் போருக்கும் முன்பே சென்னையில் பர்னே துரையால் துவக்கப் பட்டது .முதலில் எல்பின்ஸ்டன் தியேட்டருக்கு அருகில் தொடங்கப்பட்டது. பர்னே துரையிடம் வேலை செய்து வந்த ஜாபர் ஐஸ் க்ரீம் சோடா தயாரிக்கும் வித்தையை துரையுடன் இங்கிலாந்து சென்று கற்றுக் கொண்டாராம். வெனிலா ஐஸ் கிரீம் , பீச் மெல்பா என்று சென்னை வாசிகளுக்கு புது சுவைகளை அறிமுகப்படுத்திததியது இக்கடை.
மெக்ரென்னட்
1903 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இன்றும் தரமான கேக் வகைகளை வழங்கும் நிறுவனம் பட்டர் கேக், பப்ஸ் , ஆப்பிள் கேக், கப் கேக்ஸ் எல்லாமே தரமாக இருக்கும் .இன்று 52 கிளைகளுடன் தழைத்து வளர்ந்திருக்கிறது . கேக் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.
பி ஆர் அண்ட் சன்ஸ்
சென்னையின் மிகப்பழமையான கடிகாரக்கடை
1849 ஆம் ஆண்டு பீட்டர் ஓர் என்னும் ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்டது முதலில் ராணுவத்தினருக்கான தோல் ஆடைகள், பெல்ட் , வாள்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்தார். 1873 முதல் தங்க , வைர நகைகள் , வேலைப்பாடு மிக்க பொருட்களை உற்பத்தி செய்து விற்றனர். கருமுத்து தியாகராஜன் இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பின் கைக்கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள் தயாரித்து விற்றனர். இன்றும் இந்த நிறுவனம் கம்பீரமாக நிற்கிறது, பழமை மாறாமல்.
ஸ்பென்சர்ஸ்
பழைய மவுண்ட் ரோட்டின் அழகு வாய்ந்த கட்டிடம் .இன்று அங்கு ஸ்பென்சர் பிளாசா என்படும் 'மால் ;நிற்கிறது . 1985 வரை அங்கிருந்த சிவப்பு நிறக்கட்டிடம் சென்னையின் பெரிய அடையாளமாக திகழ்ந்தது. 1863ல் ஒரு பெட்டிக்கடையாக ஆரம்பித்து பின்னர் டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆக மாறியது .சார்லஸ் டூரன்ட், ஸ்பென்சர் இருவருக்கும் சொந்தமான இந்த நிறுவனம் இந்தோ சார்சனிக் அமைப்பில் கட்டப்பட்டு , மக்கள் விரும்பிச் செல்லும் இடமாக இருந்தது . தீ விபத்துக்குப் பின் அங்கு இருக்கும் ஸ்பென்சர் மால் ,நவீனத்தின் அடையாளம்.
நூறாண்டுகள் கடந்த கடைகள் மேலும் சில உண்டு,
டப்பா செட்டி கடை என்னும் நாட்டு மருந்துக் கடை, பர்னிச்சர்கள் விற்கும் கர்சன் &கோ, முர்ரே & கோ, ஊறுகாய்கள் மசாலா பொடிகளை வழங்கும் பி.வெங்கடாசலம் கடை , 125 ஆண்டு பழமை வாய்ந்த ராதா சில்க் எம்போரியம் (ராசி சில்க்ஸ்), மைலாப்பூர் ராயர் கபே என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
சுகுணா விலாச சபா , ஆந்திராமஹா சபா ,பார்த்தசாரதி சுவாமி சபா மெட்றாஸ் கிளப் ,தியசாபிக்கல் சொசைட்டி என்னும் சென்னையின் சபாக்கள் நூறாண்டுகளுக்கு மேல் இயங்குபவை .
இன்று கான்க்ரீட் காடாக மாறி வரும் சென்னையின் பழைய முகம் மிகவும் அழகானது. இந்த நிலத்தடங்கள் காலம் கடந்து நிலைத்து நின்று , சென்னையின் பெருமையைப் பறை சாற்றும்.
(தகவல் உதவி : Icons of Madras written by Kamala Ramakrishnan)
Leave a comment
Upload