தொடர்கள்
அனுபவம்
சென்னையின் பழமையான பசுமை நுரையீரல்கள்-  ப ஒப்பிலி

2025072219191179.jpg

சென்னை கிண்டி தேசிய பூங்கா (Guindy National Park), பிரம்ம ஞான சபை (Theosophical Society), மற்றும் நன்மங்கலம் காப்புக்காடுகள் (Nanmangalam Reserved Forests) இவை மூன்றுமே சென்னையின் மிக பழமையான பசுமை நுரையீரல்கள். இவைகளால் பெறப்படும் சூழலியல் நன்மைகள் அளப்பரியவை.

இந்த மூன்று வன பகுதிகளின் முக்கிய பங்கு வளிமண்டலத்தில் காசு மாற்றினை குறைப்பதாகும். இது தவிர இந்த காடுகள் பல உயிரினங்களுக்கு உறைவிடமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பறவை இனங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் கிண்டி தேசிய பூங்காவில் 203 பறவையினங்களும், பிரம்ம ஞான சபை வளாகத்தில் 180 வகைகளும், நன்மங்கலத்தில் 158 பறவையினங்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை தவிர கிண்டி தேசிய பூங்கா வெளி மானின் ஒரு முக்கிய உறைவிடமாகும். இந்த வகை மான்கள் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில் மட்டுமே காணப்படுகின்றன. இந்திய நரிகள், உடும்புகள், கீரிப்பிள்ளைகள், நட்சத்திர ஆமைகள், மற்றும் எறும்பு தின்னிகள் என பல விதமான சிறு விலங்குகளின் உறைவிடமாகவும் உள்ளது இந்த தேசியப்பூங்கா.

பிரம்ம ஞான சபையை பொறுத்தவரை இங்கு பறவையினங்கள் அதிக அளவில் காணப்படுகின்றது. இந்த இடத்திலுள்ள பலவகையான மரங்களே பறவையினங்களை ஈர்ப்பதற்கு முக்கிய காரணம், என்கின்றனர் பறவையின் ஆர்வலர்கள். அரிதாக இந்த பகுதியில் இந்திய நரிகளின் நடமாட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சபையின் சிறப்பம்சமே பல் வேறு நாடுகளின் காணப்படும் மர வகைகள் இங்கு உள்ளன. இந்த சபையில் பல வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் நடக்கும் பிரம்ம ஞான சபையின் உலகளாவிய மாநாட்டிற்கு வரும் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் ஊரிலுள்ள ஒரு மர கன்றினை இங்கு எடுத்துவந்து நட வேண்டும் என்பது ஒரு வழக்கம். அதனாலேயே இங்கு மரங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்கின்றனர் சபையில் பணி புரிபவர்கள்.

நன்மங்கலம் காப்பு காடுகள் சென்னை மாநகரின் புறநகர் பகுதியில் தாம்பரம் வேளச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சற்று தள்ளி இருந்தாலும், இந்த வன பகுதியும் ஒரு முக்கியமான சூழலியல் பூங்காவாகும்.

பலவிதமான ஊர்வனங்கள், அறிய பாம்பு வகைகள், பல விதமான பறவையினங்கள், மற்றும் நரி, உடும்பு, எறும்பு தின்னிகள், கீரிப்பிள்ளைகள், முள்ளம்பன்றிகள் என பல வித விலங்குகளுக்கும் உறைவிடமாகவும் விளங்குகின்றது இந்த காப்புக்காடுகள், என்கிறார் சென்னை மாவட்ட வன அதிகாரி சரவணன்.

இதையெல்லாம் விட முக்கிய அம்சம் இந்த வன பகுதி இந்திய கொம்பு ஆந்தைகளின் உறைவிடமாகும். சென்னைக்கு அருகில் வேறெங்குமே இந்த கொம்பு ஆந்தைகளை காண்பது அரிது என்கிறார் சரவணன்.

முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த வன பகுதி மதிய சேமக் காவல் படைகளின் (Central Reserve Police Force) வனபகுதிகளில் போர் முறைகைகள் செய்யும் பயிற்சி களமாக இருந்தது. இந்த வன பகுதிகளில் இரண்டு கல் குவாரிகள் செயல் பட்டு வந்தன. அவை தொண்ணூறுகளில் பயன்பாட்டில் இல்லாமல் சென்றன. அதனால் இந்த குவாரிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை லாரி போன்ற பெரிய வாகனங்களை கழுவும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

பின்பு வனத்துறை இந்த வன பகுதியை பாதுக்காக்கும் வகையில் சுற்று சுவர் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தியது. கடந்த பத்தாண்டுகளில் இந்த வனத்தை சுற்றி புதிய குடியிருப்பு பகுதிகள் முளைக்கத்தொடங்கின. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை இந்த வன பகுதியின் சுற்றுசுவரின் அருகில் எரிந்து விட்டு செல்வது வழக்கமாயிற்று. பின் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டதால் குப்பை கொட்டும் வழக்கம் குறைந்தது.