நிலா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். தன் அக்காவிடம், மகளிடம், சிநேகிதிகளிடம் என எல்லோரிடமும் சொல்லி மகிழ்ந்தாள்.
ஆம். அவள் மெம்பராக இருந்து மாதந்தோறும் கலந்து கொள்ளும் அவளுடைய பகுதி நகைச்சுவை மன்ற நிகழ்ச்சியில் இந்தமாதம் இவளுக்கும் அடித்தது யோகம்.
"ஏய், சிவமே (சிவப்பிரியா) ஒனக்குத் தெரியுமா? நா மேடையில நகைச்சுவைக் கதை சொல்றேம்பா" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.இப்படிச் சொல்லிச் சொல்லி ஒரு படையே திரட்டியாச்சு.
அந்த நாளும் வந்தது. காலை முதல் ஒரே குதூகலம் நிலாவிற்கு. "நீ வந்துருவ இல்ல? நீ கண்டிப்பா வரணும் சொல்லிட்டேன்" என்று மீண்டும் எல்லோருக்கும் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள்.
ஒரு ஐந்து நிமிடம் அந்தக் கதை வாசிப்பதற்கு அத்தனை அமர்க்களம்.படித்துப் பார்த்து பார்த்து அந்த இரண்டு பக்க நகைச்சுவைக் கதை மனப்பாடம் ஆகியிருந்தது நிலாவிற்கு.புடவை, மேட்சிங் மேட்சிங் கழுத்துக்கு, காதுக்கு, கைக்கு மேட் பினிஷ் நகைகள் எடுத்து வைத்தாயிற்று.
மணி மதியம் இரண்டு. மகள் வட பழனியிலிருந்து ஓலாக்காரருக்கு ஓதிவிட்டுவிட்டு வந்திறங்கினாள். ஐந்து நிமிட (கூத்திற்கு) வீடியோ எடுக்க வந்திருக்கிறாள்!
மணி மதியம் இரண்டரை. மகளுடனும், அப்போதுதான் வந்திறங்கிய தோழி மீனாவுடனும் ஃபில்டர் காபியை ஆத்தி ரசித்து குடித்துக் கொண்டிருந்தாள்.
"பொட்டு வைத்த முகமோ?’ ஒன்றுமில்லை…. நிலாவின் மொபைல் ரிங் டோன்தான் அது! ஒலியைக் கேட்டதும் எடுத்துப் பார்த்தாள். சார்ஜ் போட்டபடியே பேசப் போனாள். "அம்மா ஒயரை எடுத்துட்டுப் பேசுமா, ஒரு தடவை போல இருக்காது" என்ற மகளிடம், ’இரு, இரு, உஷ்’ என்று ஜாடைக் காட்டினாள்.
"வணக்கம் சார், சொல்லுங்க. இதோ தயாராகிக் கிட்டே இருக்கேன். ’டாண்’ன்னு 4.30 மணிக்குள்ள அங்க வந்திடுவேன்."
"அமர்க்களப்படுத்திடலாம் சார், அப்புறம் ஏதோ ஒரு அணியில பேச வர்ரவங்க வரமுடியாதுன்னாங்களே? வேற ஏற்பாடுப் பண்ணீட்டீங்களா?" என்றாள் நிலா.படபடவென பொரித்து கொட்டினாள்.
"கொஞ்சம் என்னையும் பேச விடுங்கம்மா, சொல்ல வந்தத கேளுங்க மொதல்ல" என்று நிறுத்தினார்.நிலாவின் முகம் சற்று வெளிறியது.
"இன்னிக்கு நீங்க ஜோக் சொல்லல"
அடுத்து சொல்வதற்குள் நிலாவுக்கு நடுக்கம் ஏற்பட்டது. ஊரைக்கூட்டி தேரை இழுக்கத் தயாராகும் அவளுக்கு எப்படி இருக்கும் இந்த செய்தி?!
"அப்புறம் இன்னொரு அணித்தலைவியும் வரல’ன்னு சொல்றாங்க. ’நீங்க அந்த அணித்தலைவியா பொறுப்பெடுத்து பட்டிமன்றத்த நடத்திக் கொடுக்கணும்’ என்றார்.
நிலாவிற்கு, நடுக்கம், சுனாமி எல்லாமே வந்தது.
"சார் …சார்…. நான் நான் வந்து வந்து "
"பேசிக்கிட்டே இருக்காதீங்க கிளம்பி வாங்க" என்று ஃபோனை வைத்து விட்டார்.
அப்புறமென்ன நிலா நடுக்கத்துடன் மேடையில் அமர்ந்திருக்க நிகழ்ச்சி ஆரம்பமானது. எதிரணியில் ஒரு நாற்காலி காலி.
இரண்டொரு நிமிடங்களில் விழாத் தலைவர் பெண்வேடமிட்டு வந்து அமர்கிறார்.
அது பெண்கள் மட்டும் பங்கேற்கும் பட்டி மன்றமாயிற்றே!
கேட்க வேண்டுமா நிலாவின் நடுக்கத்திற்கு?
தன் முறை வரும்போது எங்கிருந்து வந்ததோ தைரியம்? தெரியாது! எழுந்து மைக்கில் நின்று பேசிவிட்டு, எதிரணித் தலைவர் தன் கருத்துக்களை ஆணித்தரமாக சொல்வதாக சொல்ல, நிலாவோ தன் கருத்துக்களை 'கடப்பாரைத்தனமாக'ச் சொல்வதாக சொல்லி முடித்தாள்.
பலத்த கரகோஷம். கைகொடுத்தல்கள். பாராட்டுக்கள். அப்பொழுதும் நிலாவிற்கு கொஞ்சம் நடுக்கம். தீர்ப்பில் இவர்கள் அணி வெற்றி பெற்றதை நடுவர் அறிவிக்க, விழாத்தலைவர் வேறு ’அசத்தீட்டிங்க நிலா’ என்றதும் தலைகால் புரியவில்லை.
அப்போதே அடுத்த வாரம் அந்த நகைச்சுவைக் கதையைக் கண்டிப்பாக வாசிக்கவும் அனுமதி வாங்கி விட்டாள்.இந்த வெற்றியை இனி முகநூல், அகநூல் எல்லாவற்றிலும் வேறு தெரிவிக்க வேண்டும்!
இதோ நிலா அடுத்த பட்டி மன்றத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.
Leave a comment
Upload