சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு காலையில் கபாலீஸ்வரர், கற்காம்பாளை தரிசிக்க வரும் உள்ளூர், வெளியூர் மக்கள் வெளியே வந்ததும், அங்குள்ள ஜன்னல் கடைக்கு அவர்களின் கால்கள் தாமாகவே சென்றுவிடும். அங்கு போனதும், கைகள் தாமாகவே சுடச்சுட இட்லி, நெய் ஊற்றிய வெண்பொங்கல் மற்றும் சூடான மெதுவடைகளை 4 வகை சட்னி, சாம்பாருடன் ‘லபக்’கிக் கொள்ளும்.
மாலையில், பண்டிகை காலங்களில் ஏராளமான ‘நொறுக்குத்தீனி’ நடைபாதை உணவகங்கள் உண்டு. கடந்த வியாழன் மாலை… ஒருபக்கம் வெல்லும், கார குழிப்பணியாரம், வாழைப்பூ, மெதுவடை உள்பட பலவகை வடைகள். ஆனால், வெல்ல குழிப்பணியாரம் மட்டுமே சுடச்சுட கிடைக்கிறது. விற்பவர்கள் வேலூர்காரர்களாம்… முகத்தில் புன்சிரிப்பே கிடையாது. எதிரே பாத்திரங்களில் வைத்து விதவிதமான சுண்டல் விற்கின்றனர். வழக்கம் போல் காளத்தி கடையில் ரோஸ் மில்க் குடித்து திரும்பினோம்.
பாண்டி பஜார்
பாண்டி பஜாரில் பரந்து விரிந்த சாலையோரத்தில் நீண்ட காலமாக நடமாடும் வேன் மூலம் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் உணவகம் நடத்தி வருகின்றனர். இங்கு காலையில் சுடச்சுட இட்லி, பொங்கல், பூரி, மெதுவடை, சப்பாத்தி உள்பட பல்வகை டிபன் வகைகள் கிடைக்கும். மாலையில் பஜ்ஜி, போண்டா, மெது பக்கோடா மற்றும் இரவு வழக்கமான டிபன்களுடன் பரோட்டாவும் கிடைக்கிறது. என்ன… கொஞ்சம் காஸ்ட்லி! இரவு 10 மணிக்கு மேல் காரில் வந்து சாப்பிடும் ஏராளமான திரைப் பிரபலங்களைக் காணலாம்.
பிராட்வே:
சென்னை பூக்கடை காவல் நிலையம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலான நடைபாதையில் மதிய நேரங்களில் ஏராளமான அன்னக்கூடையில் உணவு வழங்கும் பெண்களைக் காணலாம். ஆண்களில் ஓரிருவர் மட்டுமே. ஒரு தட்டு சாதம் ₹20. சுடச்சுட கறிக்குழம்பு அல்லது வெங்காய சாம்பார். அவ்வளவுதான்!
Extra கேட்டால்… தொண்டைக் குழி காணாமப் போயிடும். இன்னும் கொஞ்சம் சாதம்கூட காசுதான்! பசிக்கு ‘ருசி’ அறியாமல் சாப்பிடலாம். செம காரமா இருக்கும்.
Leave a comment
Upload