தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை 33 -மரியா சிவானந்தம்

20250720194453576.jpg

காதலன் பால் கொண்ட காதல் கரையற்ற கடல் போல் பெருகி வழிந்தது.

இரவு நெடுநேரம் விழித்திருக்கிறாள் அக்காதலி.

நள்ளிரவு கடந்த பின்பும், ஊர் உறங்கிய போதும் அவளுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.

“நான் தான் அவனை நினைத்துக் கொண்டு இருக்கிறேன். அவனுக்கு என் நினைவு வந்திருக்காது.

இல்லை, நான் தூங்காமல் வருந்திக் கொண்டு இருப்பேன் என்று அவனும் உறக்கம் வராமல் தவிப்பானோ?” என்று தோழியிடம் முறையிட்டாள் அத்தலைவி.

தோழி தலைவியின் நிலையை அறிந்தவள் அல்லவா?

தலைவி தோழியிடம், “ தோழி, நீ வாழி. ஊரில் வழக்கமாக எழும் ஒலிகள் அனைத்தும் அடங்கி விட்டன. கள் குடிக்கும் குடியர்கள் மயக்கம் கொண்டதால், இந்த நெய்தல் நிலத்துப் ‘பாக்கம்’ உறங்கி விட்டது. இந்த நேரத்தில் நாம் தலைவனை நினைத்து உறங்காமல் இருக்கிறோம்.

என் துயரினை அவன் உணர்வானா?

மீன் பிடிக்க பரதவர், செந்நிற கயிறை உடைய வலையைக் கடலில் வீசிட , அக்கடலில் இருக்கும் சுறா மீன்கள், அந்த வலையைக் கிழித்திடும். அத்தனைச் சிறப்பு மிக்க நெய்தல் நிலத்தலைவன் அல்லவா?

ஊரின் பொது மன்றத்தில் உயர்ந்து வளர்ந்த பனை மரத்தின் கிளையில் கூடு கட்டி வாழும் சோடி பறவைகளான அன்றில் பறவைகள் இரண்டு காதல் வயப்பட்டு கூடுகையில் எழுப்புமொலி என் துன்பத்தை அதிகமாக்கி விடுகிறது.

அந்த ஒலியைக் கேட்ட பின்பாவது அவனுக்கு என் நினைவு வர வேண்டுமே

அழகிய நெற்றியைக் கொண்ட நம் தலைவி காம நோய் வருத்த, உடல் மெலிந்து, அவன் நினைவில் இன்னும் உறங்காமல் விழித்துக் கொண்டே இருப்பாளோ?” என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றாமல் இருக்குமா. சொல்” என்று தோழியிடம் தன் குமுறலைக் கொட்டித் தீர்த்தாள்.

“மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்” என்னும் புலவர் எழுதிய இந்த நெய்தல் நிலப்பாட்டு காதலனின் நினைவில் உறக்கமின்றித் தவிக்கும் காதலியை நம் கண் முன் நிறுத்துகிறது,

இப்பாடலைப் படிக்கும் போது கண்னதாசனின் திரைப்பட பாடல் வரிகள் நம் நினைவில் மின்னலிடுகின்றன.

ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை

திரு நாள் தேடி தோழியர் கூடி

சென்றார் திரும்பவில்லை
தினையும் பனையாய் வளர்ந்தே
இரு விழிகள் அரும்பவில்லை

முழு பாடலும் ஒருமுறை மனதில் ஓடி ஒய்ந்தது.

அதே போல் காதலியின் துயரத்தை அடக்கிய நற்றிணைப் பாடல் இது .

ஒலி அவிந்து அடங்கி, யாமம்

நள்ளென,

கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;

தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை

மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்

துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்,

''துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,

நம்வயின் வருந்தும், நன்னுதல்'' என்பது

உண்டுகொல்? வாழி, தோழி! தெண் கடல்

வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்

கொடு முடி அவ் வலை பரியப் போக்கி,

கடு முரண் எறி சுறா வழங்கும்

நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே.(நற்றிணை 303)

தொடரும்