தொடர்கள்
அழகு
மீண்டும் கல்லூரி வாசல் - பால்கி

20250722174711262.jpg

விவேகானந்தா கல்லூரி 1979 பி காம் பேட்ச் மாணவர்களாகிய நாங்கள் பி.யூ.சிக்காக கல்லூரி வாசலை மிதித்து 50 வருடங்கள் ஆனதைக் கொண்டாட அந்த கல்லூரியிலேயே அதே கிளாஸ்ரூமில் சந்திக்கப் போகிறோம் என்பது கூடுதல் உத்வேகத்தைக் கொடுத்தன.

ஆகஸ்ட்17, 2025 என்று நாள்குறிக்கப்பட்டது. 100 பேர் கொண்ட எங்கள் பேட்சில் 66 மச்சீகள், ஆமாம், வாடா மச்சீ, போடா மச்சீ என்று தான் இன்றும் எங்களுக்குள்ளேயான விளித்தல்கள்.

இரண்டு வாரம் முன்பே மைலாப்பூர் டைம்ஸ் அடையார் டைம்ஸ்ஸில் ஆரவாரமாக ஆர்வமுடன் விளம்பரம் வேறு வந்தன. இன்னும் காணப்படாமல் இருக்கும்ப் அண்ணன் தம்பிகள் கண்ணில் படட்டுமே என்ற நப்பாசை தான்.

முதலில் மைலாப்பூர் சங்கீதாவில் கூடினோம் கூட்டு லன்ச்சுக்கு.

போஸ்டனிலிருந்து விஜய் வந்தாஹ,

சிங்கப்பூரிலிருந்து வைத்தியும் வந்தாஹ,

பெங்களூரிலிருந்து ரங்கனாதனும்,

மும்பையிலிருந்து கிருஷ்ணமூர்த்தி,

சேலத்திலிருந்து சுந்தர கணேசனும் வந்தாஹ,

கொரட்டூரிலிருந்து முரளி, அம்பத்தூரிலிருந்து குமாரு வந்தாஹ.

அது என்ன கொரட்டூர் அம்பத்தூர் தூரமா? ஆமாம். நேற்றே கிளம்பிவிட்டார்களாம்.

66 வயதுகளில் நடமாடும் நண்பர்களின் உடல் சொன்னது 66. உள்ளம் சொன்னது 17. ஆம், அன்று 66க்குள் ஒளிந்திருந்த 17 வயது திமிறிக்கொண்டு வெளிப்பட்டது. வென்றது. இளமை துள்ளி விளையாடியது. கண்களில் பரவசம்.

“ங்க’ மறைந்து டா மச்சீ பெருக்கெடுத்தது. வயிறார உண்டோம். வாயாற குசலம் கூறிக்கொண்டோம்.

அடுத்த பிச் காலேஜ் தான். மூணு மணிக்கு குறிக்கப்பட்ட நேரம். எங்களின் அந்த கல்லூரி வாசத்தின் முதல் நாளில் அடைக்கலம் தந்த அதே அறை எண் 1ல் மறுபடியும், ஒரு அரை நூற்றாண்டு கழித்துக் கூடினோம்.

2025072218055534.jpg

அந்த அறையை நெருங்க நெருங்க நெஞ்சு இளமையாக பட படத்தது. துடி துடித்தது. 15 அடி கூரை, ராட்சத ஜன்னல்கள் ஊடே உள்ளே வந்த காற்றும் எங்களை ஸ்பரிசித்தது, பாத்து எவ்வளவு நாளாச்சி என்று நலம் விசாரித்தது.

​​அன்று நாங்கள் அனைவருமே டீன் ஏஜ் பருவத்தின் துடிப்பில் இருந்தோம், எங்கள் பி.யூ.சி/பி.காம் நாட்களில் வாழ்ந்தோம்.

20250722180334419.jpg

பி.காம் வகுப்பறைகளுக்குச் சென்று அன்றைய கல்லூரி நாட்களில் அவர்வர்கள் அமர்ந்திருந்த பெஞ்சுகளில் அமர்ந்து மகிழ்ந்தனர். எங்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் உண்மையான ஏக்க உணர்வையும் உற்சாகமான ஆரவாரத்தையும் காண முடிந்தது.

2013ல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சென்னையிலேயே அன்று இருந்த எங்கள் பேட்ச் மேட்ஸ் மெரினா பீச்சில் உழைப்பாளர் சிலைக்குப் பின்னால் சுண்டல் கொரித்துக்கொண்டே கூடினோம் என்று பிளாஷ் பேக் அடித்தார்கள் ரமேஷ்குமாரும் ஸ்ரீதரும்.

வந்திருந்த பலருக்கு மற்றவரைப் பார்க்க, “ ஏ …ய்…நீங்…….நீ…..தானே எப்ப பாத்தது” போன்ற ஒரே மாதிரி வசனங்கள் ரிப்பீட் ஆகின.

இத்தனை காலமாயினும் அன்று பார்த்த அதே வேஷ்டி உடைத் தோற்றத்தில் வந்தவர் நமது விகடகவியில் சநாதன தர்மம் பற்றிய தொடர் எழுதிய எனது கிளாஸ்மேட் ஆர். சங்கரன் தான். சமஸ்கிருதத்திலும் தமிழிலும் பாண்டித்யம் பெற்றவர்.

20250722175702318.jpg

[சங்கரனுடன் நான்]

இப்படித்தான் உன்னை 2008ல மும்பை வீ டீ ஸ்டேஷனில் 13 ஆம் நம்பர் பிளாட்ஃபார்மில், “நீ……. நீ……. என்று ஒருவருக்கொருவர் ஃப்ளாஷ்பேக்கில் சென்று கண்டு கொண்டோம் பீகே. நினைவிருக்கா? என்று ஸ்ரீதர் இடைமறித்தான். சிலிர்த்துப்போனேன்.

இப்படித்தான் ஷார்ஜாவில் சிக்னலில் க்ராஸ் பண்ணும்போது நம்ம 2940 வீ.ரமேஷைப் புடிச்சேண்டா என்றான் ஸ்ரீதர் தொடர்ந்து.

இரட்டையரின் முயற்சி

கல்லூரி காலம் முடிந்து பிரிகையில் பகிர்ந்துகொண்ட முகவரி புத்தகம் கூட கடைசி நாளில் எடுத்த குரூப் போட்டோ

2025072217543170.jpg

என்ற இவற்றை வைத்துக் கொண்டு போஸ்ட் கார்டில் ஒவ்வொருவருக்காக எழுதி இன்று வரை 69 பேரைச் சேர்த்த இந்த இரட்டையர்களுக்கு ஒரு ஓ தான் போடணும். காலம் செலவு கருதாது நம்ம குரூப்பை கூட்டி கட்டிக்காத்தது மட்டுமில்லாது கல்லூரி அளவிலேயே இந்த முன்னாள் மாணவர் சங்கங்களை அமைக்க தீவிரப்படுத்துகிறார்கள். அவற்றைக் கையோடு கல்லூரியுடன் இணைத்திடவும் ஒரு முனைந்த சேவையாகவே செய்து வருகிறது மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறது. இத்தனைக்கும் இவர்களிதை தங்களின் தொழில் துறை கடமைகளுக்கிடையே செய்வது பொறாமை கொள்ளச் செய்கிறது.

நாம அறை எண்.1க்கு திரும்புவோம் அங்கே என்ன நடக்குத்துன்னு பார்க்க.

நான் வகுப்பு ஆரம்பத்தில் எடுக்கப்படும் அட்டண்டன்ஸை எடுக்க ஆரம்பித்தேன்.

20250722174916177.jpg

[அந்த இரட்டையருடன் வலது ஓரத்தில் இவன்]

நான் பீகாமில் கொடுத்த டிபார்ட்மென்ட் எண்களைப் படிப்பேனாம். பென்ச்சில் உட்கார்ந்திருந்த நண்பர்கள் அவரவர் தத்தமக்குரிய எண்ணுக்கு கையை உயர்த்த வேண்டும் என்ற விளையாட்டு ஆடுவோமாம். எல்லோரும் தலையாட்டினர்.

பலருக்கு அந்தக் கால நம்பர்கள் இன்றும் நினைவில் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. சிலர் கையைத் தூக்கினர். சிலர் எழுந்து நின்று ஆஜர் சொன்னது நிகழ்வை கல கலப்பாக்கியது. பேரைச் சொல்ல மற்றவர்களுக்கும் அவன் யார்? எனத் தெரிந்தது. தெரியாத சிலருக்கு அவர்களின் நம்பர்களைக் கூற அவர்களும் மறந்து போனதைத் தெரிந்துகொண்டார்கள்.

சிலர் பாடல்களைப் பாடி ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தியதும், நட்டூ, என்கின்ற நடராஜன் தமிழ் சினிமா பாடல்கள் வசனங்களை ஒப்பனையில்லா கற்பனையாய் எங்களை ஆரவாரப்படுத்தினான்.

கற்றவைக்கும், பெற்றவைக்கும் நன்றி கூற வேண்டாமா?

திருப்பிக் கொடுப்பதில் மகிழ்ச்சி பெற்ற தருணமும் வந்தது.

கல்லூரின் செயலாளர் சுவாமிஜி தியானகம்யானந்தா, எங்கள் அழைப்பை ஏற்று, எங்கள் சந்திப்பு இடத்திலேயே எங்களுடன் கலந்து கொண்டார். மகிழ்ச்சியான நேரமது. எங்களது சார்பாக சுவாமியிடம் ரூ.2,23,000/- வழங்கினோம். அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையில்லை.

20250722175310664.jpg

பின்னர் சுவாமிஜி எங்களிடம், எங்கள் குழுவைப் போன்ற மூத்த முன்னாள் மாணவர்களின் மதிப்பு, கல்லூரிக்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பு மற்றும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி முயற்சிகளுக்கு அவர்களின் பங்களிப்பின் சக்தி ஆகியவற்றை கோடிட்டுக் காட்டினார்.

நித்தமும் வேத கோஷ மந்திரம் வாசிப்பது எங்கள் கல்லூரியில் வழக்கம். அதை மகேஷ் வாசிக்க நிஜமாகவே அன்றைய தினம் கல்லூரி நாளாகவே மாறிவிட்டது எங்களுக்கு.

20250722180419495.jpg

விடலைப் பருவத்தில் வீணாகிப் போவது சகஜம். அந்த 17ல் இணைந்து 21 வரை பெற்ற அந்த இணைப்பு நாட்டின் பொறுப்புள்ள மனிதனாக்கிவிட்டது. அதற்கும் நன்றி.

எங்களது மற்றும் சக சமூகத்திலும் அந்த நல்லுணர்வுகளை தயங்காமல் நயம்பட பதிக்கின்றோம். நன்றி.

20250722175518863.jpg

என்று நன்றி நவின்றேன்.

கல்லூரியில் எதிர் கால மாணவர்களுக்கான நல் திட்டங்களை பகிந்துகொண்டார். திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தற்போதைய நிர்வாகத்தின் வெற்றி குறித்து எங்கள் சில மாணவர்களால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை அவர் பொறுமையாகக் கேட்டறிந்தார்.

20250722180451258.jpg

விவேகானந்தா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம், அவர்களின் தொடக்க கலாச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாது பாலாஜி (கல்லூரியின் 1976 பி.காம். தொகுதியின் முன்னாள் மாணவர்) தலைமையில்.

கிரேஸி கிரியேஷன்ஸ் நடத்திய "மாது பிளஸ் 2" நாடகத்தை கல்லூரி வளாகத்தில் இருந்த ஓபுல் ரெட்டி ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்திருந்தது அன்றைய நிகழ்வின் முத்தாய்ப்பாக இருந்தது

சொல்லப்போனால், பள்ளிப்படிப்பிற்குப் பிறகு அடுத்த மூன்று வருட ஆரம்ப கல்லூரி படிப்பை இம்மாதிரியான கல்வி நிறுவனங்கள் தானே தருகின்றன.

சிந்திக்க வேண்டிய விஷயம் இது.