தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் பலர். அரசாங்க அலுவலக குமாஸ்தா என்றால் பக்கத்து நாற்காலியில் உள்ளவர்களைப் பற்றி கேட்டாலும் கூட சொல்லமாட்டார். பல துறைகளிலும் இதுதான் செயல்பாடு. நமக்கென்ன வந்தது, கொடுத்த வேலையைச் செய்வோம், இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்தால் கஷ்டப்படுவோம் என்று நினைப்பவர்கள் பலர். ஒருவிதத்தில் அது பாதுகாப்பானதுதான். இருந்தாலும் சுயநலத்தைத் துறந்த நன்மைக்காக, தான் சார்ந்த நிறுவனத்திற்காக ஒருவன், தன் துறையின் எல்லைகளை மீறியும் செயல்படலாம். ஆனால் அது அசாதாரணமான சந்தர்ப்பங்களில் மட்டுமே.
அப்படியொரு சந்தர்ப்பம் வந்தபோது அவன் துடிப்புடன் வேலை செய்தான். அது என்ன? பத்திரிகையாளனாக அவனது பொறுப்பு சிறப்பிதழ்களுக்குக் கட்டுரைகள் திரட்டுவது, தானே எழுதுவது போன்ற 2 கடமைகள்தான்.
நாளிதழின் பிரதான செய்தித் துறைக்கும் அவனுக்கும் உள்ள சம்பந்தம் ஒரு வாசகன் என்ற முறையில் மட்டுமே. அந்தக் காலகட்டத்தில் நெய்வேலியில் நிலம் கொடுத்தவர்களின் போராட்டம், ஊழியர்களின் போராட்டம், அதற்குச் சில அரசியல் கட்சிகள், சினிமா பிரமுகர்கள் ஆதரவு என்றபடி தொழிலியல், சமூகவியல் சூழ்நிலை நெய்வேலியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. சென்னையில் இருந்து நடிகர்கள், அரசியல்வாதிகள் அங்கு தினமும் சென்று நிலைமையை சூடேற்றிக் கொண்டிருந்தார்கள்.
மின்உற்பத்தி பாதிக்கப்படும் என்ற கவலை எல்லோருக்கும் வந்தது. நெய்வேலி மின்நிலையங்கள் செயல்படாவிட்டால், தமிழ்நாட்டில் பாதி அளவு மின்உற்பத்திக் குறைந்துவிடும். மின்சாரமின்றி மக்கள் தவிப்பார்கள். ஏனோ தெரியவில்லை அந்த நாட்களில் அதன் தீவிரம் உணரப்படவில்லை, பத்திரிகைகளும் தலையங்கம் எழுதவில்லை.
கள நிலவரம் துல்லியமாக எடுத்துச் சொல்லப்படவில்லை. தினமும் பல நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்த அவனுக்கு எல்லாப் பத்திரிகைகளும் நெய்வேலியில் கூடிய அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, மின்சார உற்பத்திக்குக் கொடுக்கவில்லை. ஹிண்டுவிலும் அதிர்ச்சியை உணரத்தக்க செய்தி வெளிவரவில்லை.
இந்த போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த நாளன்று அவன் காலை 6 மணிக்கெல்லாம் தன் காரை எடுத்துக்கொண்டு நெய்வேலிக்குச் சென்றான்.
நெய்வேலியை நெருங்குவதற்கு சற்று முன்னதாக, அதாவது காலை சுமார் 9 மணியளவில் அப்போதைய எடிட்டர் என்.ரவிக்கு போன் செய்தான், ‘தான் ஒரு மணி நேரத்தில் நெய்வேலியில் இருக்கப் போவதாகவும், வேலை நிறுத்தத்தினால் மின்உற்பத்தி பாதிப்பு பற்றி எழுதப் போவதாகவும் தெரிவித்தான். எடிட்டர் ரவி ‘சரி செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
நெய்வேலி அவன் வசித்த இடம். நெய்வேலி இன்ஜினியர்கள் அவனுக்கு பழக்கமானவர்கள். சுரங்கம், மின்சார உற்பத்தி பற்றி நன்றாகவே அறிந்தவன். எனவே நெய்வேலி சென்றவுடன் மின்சாரத்துறையின் முக்கிய இன்ஜினியர்களைச் சந்தித்தான்.
சாதாரண நாட்களில் சராசரி மின்உற்பத்தி எவ்வளவு, வெளியாரின் தலையீட்டால் மின்உற்பத்தி எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்ற தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டான். பின்னர் என்.எல்.சி. மக்கள் தொடர்பு அலுவலகத்துச் சென்றான். அப்போது தெரியவந்த தகவல், தென்னாற்காடு மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தைக்காக, நெய்வேலி விருந்தினர் மாளிகைக்கு வந்துகொண்டிருக்கிறார் என்பது.
அடுத்த சில நிமிடங்களில் என்.எல்.சி.சேர்மன் மற்றும் டைரக்டர்கள் வந்தார்கள். கலெக்டர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வெளியார் வேலை நிறுத்தத்திற்கு இடையிலும், உள்ளுர் தர்மசங்கடத்திற்கு இடையிலும், மின்உற்பத்தியை தடையின்றி தொடர்வது பற்றி கேட்டறிந்தார். அவனும் அங்கே இருந்தான்.
தன்னை கலெக்டரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. இப்படி அரசு தரப்பு தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டபிறகு, என்.எல்.சி. நிர்வாக தலைமை அலுவலகத்திற்கு சென்றான். அங்கே சேர்மன், மற்றும் மின்துறை டைரக்டர் ஆகியோரைச் சந்தித்து கூடுதல் தகவல்களைப் பெற்றான். அந்த அலுவலகத்திலேயே அமர்ந்து, சுமார் 500 வார்த்தைகள் கொண்ட செய்தியை எழுதினான்.
பழையநிலை ரிப்போர்ட்டர் என்றால், அவனிடம் தந்தி அலுவலகத்தில் தந்தி கொடுக்க கட்டணமில்லாத அடையாள அட்டை இருக்கும். அது அவனிடம் அப்போது இல்லை. தொலைபேசியில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றால் செய்திப் பிரிவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
அதிலும் ஒரு சிறு பிரச்சனை இருந்தது. எனவே அவன் தன் செய்தியை எல்.எல்.சி. டெலிபிரிண்டர் மூலமாகவே அனுப்பி வைத்தான்.
சென்னை ஹிண்டு அலுவலகத்தில் டெலிபிரின்டர் பிரிவில் உள்ள ஒரு அலுவலர் செய்தி ஆசிரியரிடம் சொன்னார், ‘ஐயா என்.எல்.சி நிறுவன டெலிபிரின்டரில் இருந்து ஒரு நீண்ட செய்தி வந்திருக்கிறது. அதை நம் நிருபர்கள் யாரும் அனுப்பியதாகத் தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டு அதைக் கொடுத்திருக்கிறார்.
டெலிபிரிண்டர் செய்தியை வாங்கிக் கொண்ட செய்தி ஆசிரியர், முதன்மை ஆசிரியர் ரவியைச் சந்தித்து, ‘இது வெளிநபரிடம் இருந்து வந்திருக்கும் செய்திபோல் இருக்கிறதே’ என்று சொல்ல, எடிட்டர் சொல்லியிருக்கிறார், ‘நம் நபர்தான் அனுப்பியிருக்கிறார். அவருக்கு நெய்வேலியில் எல்லோரையும் தெரியும், செய்திகளை விரைவாகவும், துல்லியமாகவும் எழுதிவிடுவார். நம் கடலூர் செய்தியாளர்
தராத தகவல்களும் இதில் இருக்கின்றன. இதை வெளியிட்டு விடுங்கள். நம் நபரின் பெயரைக் குறிப்பிடுங்கள் என்று சொன்னார். மறுநாளும் நெய்வேலியில் உள்ள நிலைமையை பற்றி எழுத வேண்டுமென்று அங்கேயே தங்கிவிட்டான்.
மறுநாள் காலை ஹிண்டுவின் நடுப்பக்கத்தில், அந்த செய்தி தன் பெயரில் வெளிவந்திருப்பதைப் பார்த்தான். அன்றும் நெய்வேலியில் தங்கி கூடுதல் செய்திகளைத் திரட்டி, செய்திக்கட்டுரை எழுதிக் கொடுத்துவிட்டு, அன்று மாலை சென்னைக்குத் திரும்பினான்.
இரண்டாம் நாளும் அவனது கட்டுரை வெளிவந்தது. எல்லை தாண்டி எழுதியதிலும் எடிட்டர் ரவியின் முழு ஆதரவு அவனுக்கு இருந்தது. அந்த நெய்வேலி பயணத்திற்காக ஹிண்டு நிர்வாகத்திடம் இருந்து பயணச் செலவையோ, தங்கியதற்கான செலவையோ, பெட்ரோல் செலவையோ பெற்றுக் கொள்ளவில்லை. அவன் அதை ஒரு பணியாகவே செய்தான். அவன் நோக்கமெல்லாம் பிரச்சனையின் தீவிரத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதே. அதைச் செய்ததில் அவன் திருப்திப்பட்டான்.
இன்னொரு சம்பவத்திலும் எடிட்டர் என்.ரவி அவனது எழுத்துரிமையைக் காத்தார். ஒரு சிறப்பிதழில் அவன் எழுதியிருந்த, ‘‘The human keyboard in Management’’ என்ற கட்டுரையை எழுதியிருந்தான். அடுத்த சில நாட்களில் ஜெயராமன் என்ற அன்பர் தான் தொடங்க இருந்த ‘‘HRD Times’’ என்ற பத்திரிகையின் முதல் இதழில் அந்தக் கட்டுரையை வெளியிட விரும்பி எடிட்டர் ரவியிடம் அனுமதி கேட்டார். அந்தக் கட்டுரையின் காப்புரிமை, அதை எழுதிய எங்கள் உதவி ஆசிரியரைச் சேர்ந்தது. அவரிடம் அனுமதி பெற்று வெளியிடுங்கள் என்று பதில் எழுதினார்.
நினைத்திருந்தால் பத்திரிகை எடிட்டர் என்ற முறையில் அவர் நேரடியாக அனுமதி கொடுத்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல் தன் உதவி ஆசிரியர் எழுத்துரிமையை மதித்தார்; காத்தார்.
எல்லா எடிட்டர்களும் அப்படித் தங்கள் துணை ஆசிரியர்களை மதிப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவனைப் பொறுத்தவரை ஹிண்டுவில் அவன் பெற்ற எழுத்து சுதந்திரம் அது. நிறுவனத்தின் சில பிரச்சனை காரணமாக என்.ரவி பதவி விலகிய அடுத்த சில நாட்களில் அவனும் தன் பதவியை ராஜினாமா செய்தான். இன்றும் ரவியும், அவனும் நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தபடி.
Leave a comment
Upload