ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்குப் பறக்கும் வண்ணத்துபூச்சி எப்போதும் என்னுடையதாகவே இருக்கும், என்னால் வலையில் சிக்க வைக்கப்பட்ட ஒன்றை மட்டுமே நான் இழந்து விடுகிறேன்....A butterfly flitting from flower to flower ever remains mine, I lose the one that is netted by me--- தாகூர்
ஒரு பக்கம் மரங்கள் அடர்ந்தும் இன்னொரு பக்கம் பசுமையான பள்ளத்தாக்குகளுமாக அந்த மலைப்பாதையின் அழகில் லயித்தபடி பயணித்து சின்னாறு வனத்துறை அலுவலகத்திற்கு போய் சேர்ந்தோம். இறங்கிய போது வெயில் உச்சிக்கு ஏறத் தொடங்கி இருந்தது. அலுவலகத்திற்கு உள்ளே நீளமான இரண்டு அறைகள் படுக்கை வசதியுடன் இருந்தது, அங்கு சென்று எங்கள் உடமைகளை வைத்து விட்டு, எங்கள் பெயர்களை பதிவு செய்துவிட்டு கிளம்பினோம். சாலையை கடந்த உடனேயே நதியின் சலசலப்பு கேட்க தொடங்கியது. சின்னாறு தெளிவான பிரவாகமாக அங்கே ஓடிக் கொண்டிருந்தது. நதியின் அருகிலேயே நாங்கள் நடக்கத் தொடங்கினோம். எங்களுடன் இரண்டு வேட்டை தடுப்புக் காவலர்கள் துணை வந்தனர்.
தேக்கன் எங்களை வழிநடத்த நாங்கள் சற்றே சிரமத்துடன் அவரை பின் தொடர்ந்தோம், ஏனெனில் அது தார்ச் சாலையல்ல, காட்டுப் பாதை. அது நதியின் கரையென்பதால் அங்கே வழுக்குப் பாறைகளும், முட்களும் நிறைந்திருந்தது. தேக்கன் அங்கே பல நூறு முறை வந்திருப்பதால் அவரால் இயல்பாக நடக்க முடிந்தது, எங்களால் அவரளவுக்கு வேகமாக நடக்க இயலவில்லை என்றாலும் அவரை பின்பற்றி நடந்தோம். கொளுத்தும் வெயிலாக இருந்தாலும் சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருந்ததாலும் எங்களுடன் நதியும் கூடவே ஓடி வந்ததாலும் குளுமையாகவே உணர்தோம்.
ஓர் இடத்தில் நின்று தேக்கன் எங்களுக்கு யானையின் பெரிய பெரிய காலடி தடங்களை காட்டினார். தெளிவாக பதிந்திருந்தது அந்த தடங்கள், யானைக்கூட்டம் நேற்று அங்கே வந்து நீரருந்திவிட்டு சென்றிருக்க வேண்டும் என்று கூறினார் தேக்கன். இந்த காடறிதல் பயணத்தை திட்டமிடும் போது நமக்கு வாய்ப்பிருந்தால் நாம் யானை கூட்டத்தை காணலாம் என்று சொல்லி இருந்தார்கள், ஆனால் எங்களுக்கு இந்த முறை அந்த வாய்ப்பு கைகூடப் போவதில்லை என்பது புரிந்தது, ஏனெனில் அங்கு யானைகள் வனத்திருந்தால் வேட்டை தடுப்பு காவலர்கள் சொல்லி இருப்பார்கள். சற்று தூரம் தள்ளி போன போது யானையின் காய்ந்த சாணம் இருந்தது, அதன் மேல் சீமை கருவேல செடி ஒன்று முளைத்திருந்தது, சில காளான்களும் குடை பிடித்திருந்தன, சில பட்டாம்பூச்சிகள் வந்து அமர்ந்துவிட்டு சென்றன. பட்டாம்பூச்சிகள் அந்த சாணத்தில் உள்ள தாது உப்புகளை உண்கின்றன என்பதை ஏற்கனவே நான் டிஸ்கவரியில் பார்த்து தெரிந்து கொண்டிருந்தேன். அவற்றை படம் பிடித்திட்டுவிட்டு தேக்கனிடம் கேள்வி கேட்டபடியே நகர்ந்தோம்.
இந்த பூஞ்சைகளால் என்ன பயன் ஐயா என்ற கேள்வியை எம் குழுமத்தில் இருந்த ஒரு பெண்மணி எழுப்பினார்.
மனித கண்களுக்கு புலப்பபடாத பூஞ்சையில் தொடங்கி 600 கிலோ எடை வரை வளரும் பூஞ்சைகளில் மட்டும் 50 லட்சம் வகைகள் உள்ளன. பூமியில் எந்த நிலத்திலும் எந்த சூழலிலும் வாழும் ஆற்றல் கொண்டவை பூஞ்சைகள் எனினும் அவற்றால் தாவரங்களை போல் தனக்கான உணவை தானே உற்பத்தி செய்ய பச்சையம் அவற்றிடம் இல்லை. இலை, பூ, காய் என்று எதுவும் இல்லாவிட்டாலும் காற்றில் விதைத் துகள்களை பரப்பி தன்னை உயிர்ப்பித்துக் கொள்கின்றன.
பூஞ்சைகளின் உயிரணுவில் "கைட்டின்" எனும் ஒரு வேதி உள்ளது, இது விலங்குகளோடு தொடர்புடையது என்பதாலேயே இவை விலங்கு குடும்பத்தை சார்ந்துள்ளது. பாலில் பூஞ்சைகள் வேலை செய்வதால் கிடைப்பதே தயிர், நாம் சாப்பிட முடிந்தவை சில பூஞ்சைகள் மட்டுமே வெரி சிலவற்றில் நஞ்சு உண்டு. மழைக் காலங்களில் ஆற்றோரம் சேரும் குப்பைகள், சுள்ளிகள், மக்கும் இலை தழைகள், விலங்குகளின் உடல் பாகங்கள் எல்லாவற்றையும் கழித்துக்கட்டி மண்ணை மறுசுழற்சி செய்வது பூஞ்சைகளே, அதனால் அவைகளை "சுற்றுச்சூழலின் முதுகெலும்பு" என்போம் என்று கூறி முடித்த போது எங்களுக்கு வியப்பில் வாயடைத்து போனது.
அதற்கு பிறகு பிளந்த பாறையருகே நுனியில் பூக்களுள்ள ஒரு சிறு செடியை காட்டி இது என்ன செடி என்று யாராவது சொல்ல முடியமா ? என்றார். ஒருவர் இது பிரண்டை போல இருக்கிறது பிரண்டையில் ஏதும் தனி வகையோ என்று கேட்டார். நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தோம், அப்போது தேக்கன் சொன்னார் அதன் பெயர் கள்ளிமுளையான்.
இது வறட்சியை எதிர்கொண்டு வளரும் தாவரம் என்பதால் இதன் நிறம் சாம்பல், சிவப்பு நிறங்கள் திரிந்து ஒரு அடர் பச்சை நிறத்தில் உள்ளது. இது தாகத்தை தீர்க்கும் அற்புதமான செடி. இதன் இலைகளை வாயிலிட்டால் உப்பை வாயிலிட்டதை போல இருக்கும், லேசான கசப்பும் புளிப்பும் கலந்த சுவை சேர்ந்து நாவில் உமிழ்நீரை சுரக்கச் செய்யும். காட்டில் வாழும் பழங்குடிகள் தங்கள் பயணத்தின் போது தங்கம் தனித்துக் கொள்ள இந்த செடியின் இலைகளை பயன்படுத்திக் கொள்வார்கள் என்றார். அதை சுவைத்து பார்க்கும் ஆவல் எங்களில் பலருக்கு இருந்தது ஆனால் அதை உணர்ந்து கொண்ட தேக்கன் வேண்டாம் இந்த செடியின் இலைகளை வீணாக்க வேண்டாம் அதை உண்பதற்கென்றே சில உயிர்கள் இங்கு உண்டு என்றார்.
நாங்கள் தேக்கனை ஆவலாக பார்த்துக் கொண்டிருந்த போது தன் பெரிய சிறகுகளை அசைத்து எங்களை கடந்து போய் ஒரு கிளையில் அமர்ந்தது ஒரு ஆந்தை. அதன் பெரிய கண்களும் சிறகுகளும் எங்களுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. ஆந்தைகள் இரவாடிகள் இல்லையா பகலில் அதற்கு கண் தெரியாது என்று சொல்கிறார்களே, பகலில் அவை வெளியில் வருமா ஐயா ? என்று கேட்டான் என் மகன்.
இந்தியாவில் 33 வகையும் தமிழகத்தில் 15 வகையான ஆந்தை இனங்களும் இருப்பது தெரியவந்துள்ளது. ஆந்தைகளின் தனிப்பட்ட வாழ்வியல் முறை குறித்து பல தவறான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதில் ஒன்றுதான், ஆந்தைகளுக்கு பகலில் கண் தெரியாது என்பது. ஆனால் உண்மையில் ஆந்தைக்கு பகலில் நன்றாக கண் தெரியும். ஆந்தைகளின் தலைப்பகுதியில் சுமார் 25 சதவிகிதத்தை கண்களே ஆக்கிரமித்துள்ளன. பெரிய கண்களைக் கொண்டுள்ள ஆந்தைகளால் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் மிகவும் துல்லியமாகப் பார்க்க முடியும். பூச்சிகள், எலி, பாம்பு, தவளை, ஓணான் போன்றவை ஆந்தைகளின் உணவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆந்தை இறந்துபோன உயிரினங்களை உண்ணாது.
புதிதாக தனக்கான இரையைக் கொன்று உண்ணும். உணவு வேட்டைக்கு அதன் கால்களும் கூர்மையான நகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக பகல் நேரங்களில் உட்கார்ந்து கொண்டே தூங்கும் ஆந்தைகளை பார்த்திருப்போம். பகல் நேரத்தில் மற்ற விலங்குகள் தன்னை தொந்தரவு செய்வதைத் தவிர்ப்பதற்காக எளிதில் கண்டுபிடிக்க முடியாத பாறைகள், புதர்கள் போன்றவற்றில் உருமறைப்பு (Camouflage) செய்து வாழும்.
சில நேரங்களில் காகங்களாலும், கரிச்சான் குருவிகளாலும், ஆந்தைகள் துரத்தப்படுவதைப் பார்த்திருக்கலாம்.ஆந்தைகள் ஒரு நாளில் 4 முதல் 6 எலிகளை வேட்டையாடி உண்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விவசாயத்திற்கு பெரும் ஆபத்தாய் விளங்கும் எலிகளை இது போன்று கொன்று அழிக்கும் ஆந்தைகள் விவசாயிகளின் நண்பன் என்று சொன்னால் அது மிகையில்லை.
ஆந்தையை படமெடுக்க சற்றே ஆற்றில் இறங்க போன ஒரு தோழர் அங்கு ஒரு பெரிய பாம்பு போவதை பார்த்துவிட்டு அவசரமாக கரைக்கு ஏறினார் எங்களிடம் காட்டினார். ஒல்லியாக இருந்தாலும் நல்ல நீளமாகவே இருந்தது அந்த பாம்பு தேக்கனிடம் அது என்ன வகை என்று கேட்டு முடிப்பதற்குள் அது பாறை இடுக்கிற்குள் மறைந்துவிட்டது பழுப்பும் பச்சையும் கலந்த அதன் வால் மட்டுமே தட்டுப்பட்டது. அது அநேகமாக சாரை பாம்பாக இருக்கலாம் என்றார் தேக்கன்.
தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது சற்றே களைப்பை ஏற்படுத்தயது அந்த நேரம் சரியாக ஒரு பெரிய புளிய மரத்தடியில் நாங்கள் அனைவரும் அமர்வதற்கு ஏற்றார் போல விரிவான ஒரு இடம் இருக்கவே அங்கே எங்களை அமரச் சொன்னார் தேக்கன். பூச்சிகளோ பாம்புகளோ வந்தால் என்ன செய்வது என்று சிலர் தயங்கிய போது "எதுவும் உங்களை ஒன்றும் செய்யாது" தயங்காமல் அமருங்கள் என்று எங்களை அமர வைத்தார் தேக்கன்.
நாங்கள் அமர்ந்த இடத்திற்கு எதிரில் சாம்பல் மந்திகள் கூட்டமாக விளையாடிக் கொண்டிருந்தன. நாங்கள் அங்கு போய் சேர்ந்த போது எண்களின் வருகையை கூட்டத்திற்கு தெரிவிக்க ஓசை எழுப்பின, உடனே அனைத்தும் மந்திகளின் பார்வைகளும் எங்களையே தொடர்ந்தது, நாங்கள் அமைதியாக அமர்ந்திருப்பதை கண்டா உடன் அவைகளின் சலசலப்பு சற்றே அடங்கியது, எங்களை குறித்து பயம் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தன போலும். எங்கள் மனதிலிருந்த கேள்விகளை படித்தது போல தேக்கன் பேசத் தொடங்கினார்.
நீங்கள் தற்போது அமர்ந்த்து கொண்டிருக்கும் இந்த முல்லை நிலமானது நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்த சாம்பல் மந்திகளுக்கும் மரஅணிலுக்குமான சிறப்பான வாழ்விடம். இங்கு தான் இவை இரண்டும் குட்டி போட்டு, வளர்கின்றன.
ஐயா குரங்குகளும் மந்திகளும் ஒன்றா அல்லது வேறுவேறா என்று ஒரு கேள்வியை கேட்டார் என் கணவர். அதற்கு தேக்கன், "நல்ல கேள்வி! பொதுவாக பெண் குரங்குகளை மந்தி என்று அழைப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அது உண்மையல்ல. மந்திக்கு ஆங்கிலத்தில் லங்கூர் என்று பெயர் குரங்குகளை mமோங்கெ, பானெட் மக்காக் என்று அழைப்பார்கள். மந்திகள் முதன்மையான உணவு இலைகள் தான், கடினமானந்தவிதைகள் உள்ள காய்களையும் கசப்பு தன்மையுள்ள கனிகளையும் விரும்பி உண்ணும், வளைந்த வால், தலையில் மயிர்போர்வை, உறுதியான தாதிகள், துள்ளிக் குதித்து ஓடுதல், பின்னங்காலகளை தரையில் ஊன்றி நிமிர்ந்து நிற்பது போன்ற சிறப்புகள் குரங்கிலிருந்து மந்திகளை வித்யாசப்படுத்திக் காட்டும்.
இந்த சாம்பல் அணில்களும் சாம்பல் மந்திகளும் ஒரே மரத்தில் வாழும், ஒரே பருவ காலத்தில் குட்டிகள் ஈனும். மந்தி தன் குட்டியை தானே தூக்கி கொண்டு அலையும் ஆனால் அணில் கூட்டில் தன் குட்டியை பாதுகாக்கும். மந்திகள் கிளைகளை அசைத்தால் அதனால் தன்னுடைய குட்டி கீழே விழுந்து விடுமோ என்று அணில்கள் மந்திகளுடன் சண்டையிடும் என்ற போதும் சில மணி நேரத்திலேயே இரண்டும் சமாதானமாகி அணிலை தன் மடியில் போட்டு பேன் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மந்திகள்". இப்படி இந்த விலங்குகளின் நல்லிணக்கத்தை குறித்து பேசி முடித்ததுமே, நாம் நிறைய பேசி விட்டோம் இனி இயற்கை நம்முடன் என்ன பேசுகிறது என்று கேட்போம் என்றார் தேக்கன். எங்களிடம் இயற்கை என்ன பேசியது என்பதை அடுத்து சொல்கிறேன்.
தொடர்ந்து பயணிப்போம்.....
Leave a comment
Upload