தொடர்கள்
தொடர்கள்
காலங்களுக்கோர் பாலம் - 14 - ஜி.எஸ். முரளிதரன்

ஹரிச்சந்திரன் - சென்றவாரத் தொடர்ச்சி

20180612080830376.png

தன் கைபற்றி நடந்த தன் மனைவி சந்திரமதியையும் பச்சிளம் பாலகனாகிய மகன் லோகிதாசனையும் கண்ணீர் மல்கப் பார்த்தான் ஹரிச்சந்திரன்.

இருபத்திநான்கு மணி நேரத்துக்குள் தனக்குச் சேரவேண்டிய தட்சணைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று விசுவாமித்திர முனிவர் கெடு விதித்திருக்கிறார்.

அனைத்தையும் இழந்த தன்னால் அதற்கான பொருளை எப்படி ஈட்ட முடியும் என்றெண்ணி மனம் வெதும்பினான் சத்திய சோதனைக்குட்பட்ட மாமன்னன்.

ஏதும் பேசாது உயிருள்ளதோர் பதுமை போல் காணப்பட்ட மனைவியையும், ‘எல்லாம் சற்று நேரத்தில் சரியாகிவிடும்’ என்ற நம்பிக்கையுடன் செம்பவழ வாய் திறந்து வெள்ளந்தியாய் அவனைப் பார்த்துச் சிரித்த மகனையும் கண்டு அவன் சித்தம் கலங்கியது.

பொன்னெழிலாள் சந்திரமதியைக் கரம் பிடித்த அந்தப் பொன்னான தருணம் நினைவுக்கு வந்தது. மனம் விம்மியது. சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன் அந்தச் சுயம்வரத்திற்குச் சென்றபோது வழியில் தென்பட்ட காளிகோயில் பிரகாரத்திலிருந்த கல்தேர் அவன் தொட்டதும் பொன்னாக மாறியதும், பொன்னாக மாறிய அந்தத் தேரை சாட்சாத் காளிதேவியாகப்பட்டவள் அவனுக்கே பரிசளித்ததும் நினைவுக்கு வந்தது.

சந்திரமதி பொன் தாலியுடன் பிறந்தவள். பெற்றோர் தவிர யாரும் காண இயலாத அந்தத் தாலியை அவளை மணமுடிப்பவன் மட்டுமே காண முடியும் என்ற அசரீரியின் சொல்லுகேற்ப, சுயம்வரத்தில் ஏராளமானோர் குழுமியிருக்க, ஹரிச்சந்திரன் கண்களுக்கு மட்டுமே அவள் கழுத்தில் மின்னிய தாலி தெரிந்தது. ஆகவே அவளை மணமுடிக்கும் பாக்கியம் பெற்றான், ஹரிச்சந்திரன்.

‘அப்படிப்பட்ட பொன்மகள் சந்திரமதியை வழியற்று வகையற்று எதிர்காலம் இருளாய்க் காண எங்கோ அழைத்துச் செல்கிறேனே’ என்று துயரத்தில் தவித்த ஹரிச்சந்திரன் தன்னை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து தேவர்களையும் உளமாற வேண்டினான்.

‘பொன் தேரை எனக்கருளிய காளிதேவியே, என்னைக் காப்பாற்றுவாயாக. சத்தியம் தவறாதவன் என்ற என் பிறவிப் பெருமையைக் காப்பாயாக’ என்று மனமுருக வேண்டினான்.

கால்கடுக்க நடந்து மூவரும் காசி மாநகரை அடைந்தனர். அங்குள்ள ஒரு தர்மசத்திரத்தில் செய்வதறியாது மயங்கியிருக்கும் வேளையில் அங்கு தோன்றினார், விசுவாமித்திரர்.

“ஹரிச்சந்திரா! நீ எனக்குச் சேர வேண்டியதைக் கொடுக்க விதிக்கப்பட்ட காலக்கெடு முடிய இன்னும் மூன்று நாழிகைகளே உள்ளன. என்ன செய்யப் போகிறாய்?”

“மஹா முனிவரே! என்னிடம் உள்ளது என் மனைவியும் மகனும். அத்துடன் நானும். தங்கள் சித்தம் எதுவோ அதன்படியே ஆகட்டும்”

நகைத்தார், விசுவாமித்திரர். அப்போது அங்கு தோன்றினான் ஓர் அந்தணன். அவனைச் சுட்டிக் காட்டிய விசுவாமித்திரர் சொல்வாராயினார்:

“நன்று. இதோ, அதற்கானதோர் உடன்படிக்கை. இந்த அந்தணன் இந்த நகரின் வெகு சில மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவன். அவனுடைய தேவை என்னவென்றும் அதற்கான பரிவர்த்தனை என்ன என்பதையும் அவனே சொல்வான்”

அந்தணன் முன் வந்தான்.

“எனக்கு வீட்டு வேலை செய்வதற்கு ஆள் தேவை. என் குடும்பம் மிகப் பெரியது. என் மனைவி, அவளைச் சார்ந்த உறவுகள், ஆறு மகள்கள், ஏழு மகன்கள், என்று பலபேர் வசிக்கும் என் ஜாகையும் அதற்கேற்றார்போல் விஸ்தாரமானது. அவரவருக்கான தேவைகளை பூர்த்தி செய்து வீட்டையும் பராமரித்து, கொட்டிலில் ஆவினங்களையும் கர்மசிரத்தையாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும். என் குடும்பத்திற்குப் பணிவிடை செய்ய உன் மனைவிக்கு சம்மதமென்றால் சொல், நீ இவருக்குச் செலுத்தக் கடன்பட்டுள்ள தொகையை செலுத்துகிறேன்” என்று முகத்தைப் பாறைபோல் வைத்துக்கொண்டு சொன்னான் அந்த அந்தணன்ர்ர்.

தன் கணவனின் வெதும்பிய மனநிலையறிந்து, சந்திரபிம்பம் போன்ற முகத்தைக் கொண்ட சந்திரமதியாகப்பட்டவள் சற்றே முன்வந்து தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

“நான் சரி என்றால் என் கணவர் மறுக்கமாட்டார்”

“என்ன, ஹரிச்சந்திரா, சம்மதம்தானே?”

மனம் ஒப்பாமல் தலையசைத்து ஒப்புதல் தந்தான் ஹரிச்சந்திர மகராஜன்.

“எனக்குக் கொடுக்க வேண்டிய தட்சணையில் இது அரைப்பங்குதான் பெறும். மீதி அரைப்பங்குக்கு என்ன செய்வது?” கேள்வியில் கெடுவினை வைத்து விழி உயர்த்தினார், விசுவாமித்திரர்.

“அப்பா, என்னையும் விற்று அந்த அரைப்பங்கையும் செலுத்திவிடுங்கள்” என்று மழலை மொழியில் செப்பினான் பச்சிளம் பாலகன் லோகிதாசன்.

பொங்கி வந்த கண்ணீரைக் கடும் பிரயத்தனம் செய்து கட்டுப்படுத்தினான் ஹரிச்சந்திரன். சந்திரமதி கதறியே விட்டாள்.

“அழுதென்ன லாபம்? படவேண்டியதைப் பட்டுதானே ஆகவேண்டும்?” என்ற விசுவாமித்திரர் மேலும் இடருக்கு வழி செய்தார்:

“இவன் சிறு பாலகன். இவனை விற்றால் எனக்குச் செலுத்த வேண்டிய தொகையில் மேலும் கால் பங்கு நிவர்த்தியாகும். அடுத்த கால் பங்குக்கு என்ன செய்வாய், ஹரிச்சந்திரா?”

அப்போது சொல்லிவைத்தாற்போல் தோன்றினான் ஊர்த் தலையாரி. இங்குள்ள சுடுகாட்டில் தினம் வரும் பிணம் எரிக்க எனக்கோர் ஆள் தேவை. நீ வருவாய் என்றால் சொல். உன்னைக் கிரயம் செய்து அந்தக் கால் பங்கையும் நிவர்த்தி செய்து கணக்குத் தீர்ப்போம்” என்றான் அந்தத் தலையாரி.

உடனேயே சம்மதம் தெரிவித்தான், ஹரிச்சந்திரன்.

பொன்வராகங்கள் கைமாறின.

மனைவியும் பிள்ளையும் அந்தணனுடன் செல்ல, ஹரிச்சந்திரன் வெட்டியானாய் மாறி தலையாரியின் பின் சென்றான்.

சுற்றி நின்ற மக்களும், தேவர்களில் நல்ல உள்ளம் படைத்தோரும் கண்ணீர் சிந்தினர். எகத்தாளமாய்ச் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார், விசுவாமித்திரர்.

ந்தணன் வீட்டில் சந்திரமதியும் லோகிதாசனும் பட்ட பாடு சொல்லி மாளாது. வயது முதிர்ந்த பெரியோர் முதல் நண்டு சிண்டு வரை தாயையும் பிள்ளையையும் ஈவு இரக்கமற்று ஏவினர். கருக்கலில் எழுந்து மறுநாள் கருக்கலுக்கு சற்று முன் பொழுது வரை அவர்களை வேலை வாங்கினர்

கல்நெஞ்சம் படைத்த அந்தக் குடும்பத்தினர்.

அம்மாவின் அருகாமை அற்று ஏங்கித் தவித்த லோகிதாசனை இழிவாய்ப் பேசி, அங்கும் இங்கும் செல்லவும் அதையும் இதையும் செய்யவும் பணித்தனர், அரக்க மனம் படைத்த அந்தணன் குடும்பத்தினர்.

அரண்மனையில் அறுசுவை உணவுண்டு சப்ரமஞ்சத்தில் படுத்துறங்கிய தாயும் மகனும், அந்த வீட்டில் அனைவரும் உண்டதுபோக எஞ்சியிருந்த உணவை உண்டு, ஈரித்திருந்த கிழிந்த கோணியில் படுத்துறங்கிய சோகம்தான் என்னே?!

தன் மகனை ஆரத் தழுவிக்கொண்டு கண்ணீர் உகுத்து சற்றே கண்ணயர்வதற்குள் சந்திரமதியை நோக்கி அடுத்த நாளுக்கான அலுவல்கள் வரிசையில் நின்று உருமும் அவலம். வீட்டிலுள்ள அனைவரும் எடுப்பார் கைப்பிள்ளைபோல் தன் மகனை ஏவி, ஏசி, கடுமையாய் வேலை வாங்கிடும் இழிநிலை.

சலங்கைகள் சப்திக்க நடைபயின்ற பொற்பாதங்களும்

வளையல்கள் குலுங்க ஒளிவீசிய மலர்க்கரங்களும்

கிறக்கத்துக்கு இறக்கம் தந்த நீல நயனங்களும்

சோகமுற்று சோபையின்றி சோடை போனதென்னே வினை!

இங்கு இவர்கள் இவ்வாறு துன்பமும் துயரமுமே நித்தியப்பாடு என்றிருக்கையில் மனைவியையும் மகனையும் பிரிந்து, தாங்கொணாத் துயருடன் சர்வசதா காலமும் தவித்து நின்ற ஹரிச்சந்திரனுக்கும் அதே போன்று கையறு நிலை.

சுடுகாட்டில் வெட்டியானாய் பணிபுரிந்த அவனுக்கு பிணம் எரிக்கக் கொடுக்கப்படும் கட்டணம் கிஞ்சித்தும் கிட்டாது. அது தலையாரியைச் சேரும். பிணத்திற்கு இடும் வாய்க்கரிசியை வாகாய் எடுத்து அது புனிதம் பெறுவதற்காக பசுவுக்கு உணவாய்க் கொடுத்து, பின்னர் கோமியத்துடன் விழும் அரிசியைத் திரட்டி சமைத்து உண்டு அதைக் கொண்டு உயிரைப் பற்றி வாழ்ந்து வந்தான் மஹாமேருவாய்த் திகழ்ந்த அந்த மாமன்னன்.

தம்மக்கள் தாமருந்த அமுது பொழியும் சுரபியாய்த் திகழ்ந்த கோமான் தன்னிலையில் தானருந்த சவத்திற்கிட்ட வாய்க்கரிசியை நாடிநின்ற கோலம்!

வழியெங்கே, விடிவெங்கே என்று மூவரும் பரிதவித்துக் கொண்டிருந்த கொடுமையான காலகட்டத்தில் ஓர்நாள் மாலை மங்கும் நேரத்தில் அந்தணன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் மலைபோல் குவிந்திருந்த பற்றுப் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்த சந்திரமதியை உற்று நோக்கியபடி வெளிக்கதவுக்கு அப்பால் நின்றிருந்தனர் நான்கு சிறுவர்கள். அவர்களைக் கண்ணுற்ற சந்திரமதி தானிருந்த இடத்திலிருந்தே சைகை மூலம் என்னவென்று கேட்க, அவர்கள் தயங்கி அவ்விடமே நின்றனர்.

கிழிந்திருந்த தன் ஆடையைச் சரிசெய்தபடி அவர்களிடத்தில் வந்தாள் சந்திரமதி.

“குழந்தைகாள், என்ன சேதி?”

“நீங்கள்தான் லோகிதாசனின் அம்மா என்று ஆட்டிடைச் சிறுவன் ஆறுமுகம் சொன்னான்” என்றான் முதல் சிறுவன்.

“ஆமாம், நான்தான், லோகிதாசனின் அம்மா. என்ன விஷயம்?”

“அவன் எங்களுடன்தான் சமையலுக்கு சுள்ளி பொறுக்கக் காட்டிற்கு வந்தான்” என்றான் இரண்டாம் சிறுவன்.

“ஓஹோ, என்ன, உங்களுடன் திரும்பாமல் முன்னரேயே வந்துவிட்டானா?”

“இல்லை, அவன் இன்னும் வரவில்லை” என்றான் மூன்றாம் சிறுவன். அவன் குரல் கம்மியது. வார்த்தை பம்மியது.

வயிற்றினுள் ஏதோ செய்தது, சந்திரமதிக்கு. “ஏன் வரவில்லை? சமர்த்தாகப் போய் நீங்களே அழைத்து வந்துவிடுகிறீர்களா?” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.

நான்காம் சிறுவன் தொண்டையைச் செருமிக் கொண்டான். “அழைத்து வரும் நிலையில் அவன் இல்லை, அம்மா… அவனை நாகம் தீண்டிவிட்டது. மயங்கிக் கிடக்கிறான், முட்புதர் அருகே” என்று அவன் சொல்லவும் சந்திரமதி வீரிட்டு அலறினாள்:

“என் செல்வமே”…..திக்கற்ற நிலையில் காட்டை நோக்கி ஓட முற்பட்டவளை நிறுத்தியது இடிபோன்ற குரலொன்று.

“நில்”

திரும்பினாள். அந்தணனின் மனைவி அவளை நெருங்கினாள்.

“எங்கே போகிறாய்?”

பதில் சொல்ல முடியாமல் விம்மினாள், சந்திரமதி.

“லோகிதாசனை நாகம் தீண்டிவிட்டது” என்றான் முதல் சிறுவன். அந்தணன் மனைவி முகத்தில் சலனமேதுமில்லை.

“சரி, அதற்கென்ன? நாள் முச்சூடும் சுள்ளி பொறுக்குகிறேனென்று எங்களை ஏய்த்து விட்டு விளையாடும் எத்தனுக்கு ஏற்ற தண்டனைதான்” என்றவள் சிறுவர்களை விரட்டினாள். பிறகு சந்திரமதியை இளக்காரமாய்ப் பார்த்தாள்.

“ராச்சமையலுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுத்து, காய்கறிகள் நறுக்கிய பிறகு, பற்றுப் பாத்திரம் துலக்கும் வேலை முடித்து, கொட்டில் பசுக்களைப் பராமரித்து, அதன் பின் உன் மகனைக் காணச்செல்லலாம். ஒருக்கால் பாம்பு தீண்டியதில் உன் மகன் இறந்திருப்பானாயின் தீட்டுண்டு உனக்கு. அதனால் சமையலை இன்றிரவு நானே செய்து கொள்கிறேன்” என்று கர்ணகடூரமாய் வார்த்தைகளை வாரிக்கொட்டியவள் சந்திரமதிக்கு ஏதோ மாபெரும் கருணை புரிந்து விட்ட முகபாவத்துடன் கழுத்தை நொடித்தபடி வீட்டுக்குள் சென்றாள்.

நெஞ்சு விம்ம, இதயம் பரிதவிக்க, கண்களில் நீர் பெருக்கெடுத்தோட அனைத்து வேலைகளையும் சந்திரமதி முடித்தபோது இராப்பொழுது நடுச்சாமத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

கும்மிருட்டும், கால்களைக் கிழித்த முட்களும் அவள் வேகத்தைத் தடை செய்ய முடியுமா என்ன? ஓடினாள், சந்திரமதி, காட்டை நோக்கி.

“என் தங்கமே, லோகிதாசா, நான் பெற்ற செல்வமே” என்றரற்றியவாறு இருளில் அங்கும் இங்கும் தேடினாள்.

சிறுவர்கள் முட்புதர் என்று சொன்னது அந்த நிலையிலும் நினைவுக்கு வந்தது. அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் முட்புதர்கள்தான்! என்ன செய்வாள் பேதை, எங்கு தேடுவாள், தன் செல்வமகனை?!

வெகுநேரம் தேடியபின் ஒரு திக்கில் விழுதுகளுடன் இருளில் பூதாகரமாய் காட்சியளித்த ஆலமரத்தின் கீழ் புதரோடு புதராய்ப் பொதிந்திருந்த தன் செல்வமகனைக் கண்டாள்.

“மகனே, லோகிதாசா” என்று பெருங்குரலில் அலறியவாறு அவனை வாரியெடுத்து மார்போடு அணைத்த அந்தத் தாய்க்கு அந்த ஸ்பரிசம் உணர்த்தியது, தன் செல்வமகன் உயிரற்ற சடலமாகிவிட்டான் என்பதை. பித்து பிடித்தாற்போல் வெகுநேரம் கதறினாள், சந்திரமதி.

“நாடிழந்து, வீடிழந்து, பொருளிழந்து, பொலிவிழந்தது பொருட்டல்ல என் பொன் மகனே… நீயின்றி அர்த்தமேது இவ்வாழ்வில் என் பூங்கதிரே” என்று புலம்பியவள், தன் மகனின் உடலை தன்னுடன் இறுக அணைத்தவாறு எழுந்து நடந்தாள்.

சற்று தூரத்தில் ஓரிடத்தில் தீ எரியும் ஜுவாலை தென்பட்டது. சுடுகாடுதான் அது என்றுணர்ந்தவள், தன் மகனின் உடலை ஓரிடத்தில் கிடத்திவிட்டு விறகுகளைச் சேகரித்தாள். எரியும் சிதையிலிருந்து ஓர் விறகெடுத்து வந்தால் மகனின் தகனத்தை முடித்துவிடலாம் என்றெண்ணி அவன் உடலைச் சுமந்து கொண்டு வந்து தான் அடுக்கிய சிதையின் மீது கிடத்தினாள்.

அப்போது அவள் அருகே சருகுகள் சிதையும் அரவம் கேட்டது. தலை நிமிர்த்தி நோக்குகையில் ஓர் நெடிய உருவம் தென்பட்டது.

“பெண்ணே, யார் நீ?”

குரல் கேட்டு அதிர்ந்தாள். அது தன் இதயத்தின் குரலல்லவா! அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் தன் கணவன்தான் என்றறிந்ததும் வாய்விட்டுக் கதறினாள்.

“நம் குழந்தை, லோகிதாசன். அரவம் தீண்டி இறந்தான், நாம் பெற்ற செல்வம்” அவள் குரல் கேட்டு நிலையறிந்த ஹரிச்சந்திரனின் இதயம் சிதறியது.

“ஆ, சந்திரமதி!” கண்ணீர் பெருக்கெடுத்தோட பெருங்குரலெடுத்து அழுதான், வெட்டியானாய்த் திரிந்துகொண்டிருந்த மாமன்னன்.

“இனி என்ன மிச்சம், நம் வாழ்வில்? இதற்கு மேல் என்ன… போதும், நம் குழந்தையைத் தகனம் செய்ய மூட்டும் சிதையில் நாமும் வீழ்வோம், என் கண்ணாளனே!” என்று தீர்மானமாய்ச் சொன்னாள், சந்திரமதி.

“அவ்வாறே செய்வோம், சந்திரமதி. அதுதான் சரியான முடிவு”

“வாருங்கள், சிதை மூட்டுவோம். நம் மகனைச் சிதையிலிடும் துர்ப்பாக்கியம் பெற்றேனே என்று நான் மனம் வீழ்ந்து பரிதவித்திருக்க, தாங்கள் இங்கு வந்தருளியதும் ஒரு வகையில் கொடுப்பினைதான்”

“உடன் பட்டேன், சந்திரமதி. ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது” துக்கம் நெஞ்சை அடைக்க, தன் மணாளனை ஏறிட்டாள், சந்திரமதி.

“நான் இச்சுடுகாட்டில் பணிபுரியும் வெட்டியான். பிணம் எரிக்கக் கட்டணம் வசூலிப்பது என் கடமை. கொடுத்த வாக்குக்கும் செய்யும் கடமைக்கும் நேர்மையும் நாணயமும் மிக முக்கியம். ஆகையால் நீ கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது”

“கட்டணத்திற்கு நான் என்ன செய்வேன். என்னிடம் ஒன்றுமில்லையே”

“நீ பணிபுரியும் வீட்டின் எஜமானனாகிய அந்தணனிடம் நிலையைச் சொல். கால் பணமும் முழத்துண்டும் வாங்கிவா”

ஏதும் பேசாது கணவன் சொல்லை சிரமேற்கொண்டு காட்டின் வழியே சென்றாள் பேதை. வழியில், இருட்டில் கால்களில் ஏதோ இடற குனிந்து உற்றுப் பார்க்கிறாள். அங்கு ஒரு சிறுவனின் பிணம் கிடந்தது.

‘ஐயகோ, தன் மகனின் உடலைத்தான் பேய்கள் இங்கு கொண்டு வந்து போட்டனவோ!’ என்று பதறித்துடிக்கிறாள். ‘இருக்காதே, அவர்தான் அங்கு என் அருமை மைந்தன் உடலுக்குக் காவலாய் இருக்கிறாரே… பின் இது என்ன? யார் பெற்ற பிள்ளையோ, பாவம், நம் துக்கத்துக்கு ஈடானதுதானே இந்தப் பிள்ளையைப் பெற்றெடுத்த தாய் தந்தையின் துக்கம்!” என்று பலவாறு எண்ணியவாறு அவ்வுடலைக் கடந்து செல்ல அவள் முற்பட, இடியோசையாய் ஒலிக்கும் குரலொன்று அவளைத் தடுத்து நிறுத்தியது.

“நில், யாரங்கே?”

நகர்ச்சோதனையின் பொருட்டு நகரை வலம் வந்த அரசாங்க வீரர் ஐவர் அவள் முன் தோன்றினர். அவளையும், கீழே கிடக்கும் பாலகனின் உடலையும் கண்டு ஐயத்துடன் அவளை நோக்கினர்.

பாலகனின் சடலத்தைக் குனிந்து நோக்கிய ஒரு வீரன் அதிர்ச்சியுடன் நிமிர்ந்தான்.

“இது நம் மன்னருடைய மகனின் உடல்”

மற்றொரு வீரன் வன்மத்துடன் சந்திரமதியைப் பார்த்தான்.

“அண்டை நாட்டு மன்னன் சதி செய்து கடத்தினான் என்று எண்ணியிருந்தோமே, அது தவறென்று இப்போது புரிகிறது. இந்தப் பெண்தான் நம் அரசரின் மகனைக் கொன்றவள். கையும் களவுமாய்ப் பிடிபட்டாள்”

மூன்றாவது வீரன் அவளை உறுத்துப் பார்த்தான்.

“நடுநிசியில் தன்னந்தனியாக சவத்துடன் நிற்கும் இவள் ஒரு பெண்ணா! இல்லை, இவள் பெண்ணல்ல. பிணந்தின்னிப் பேய்” என்று கூவினான்.

நான்காமவன் அவள் முதுகில் ஈட்டியால் குத்தினான். உள்ளம் மரத்துப்போனவளுக்கு உடலும் உணர்வும் மரத்துப்போகத்தானே செய்யும்! குருதி வழிந்தும் வாளாவிருந்த அவளைப் பேயென்றே முடிவு செய்தனர் அப்படை வீரர்கள்.

“எதுவாயினும் சரி, அவளைச் சங்கிலியால் பிணைத்து அரசரிடம் இழுத்துச் செல்வோம்” என்றான் ஐந்தாவது படை வீரன்.

“ஐயா, என் மகன் இறந்துவிட்டான். அவன் உடலைத் தகனம் செய்ய பொருள் பெற வேண்டி என் எஜமானனை நாடிச் செல்கிறேன். என் மகனின் உடலிருக்கும் இடத்தில் இந்த ஊர் சுடுகாட்டு வெட்டியானாகிய என் கணவர் உள்ளார். இந்தக் குழந்தையைப் பற்றி நான் எதுவும் அறியேன்” என்று குரல் கம்ம, மனம் பதைக்கக் கூறினாள், சந்திரமதி.

அவள் கூறியது எதையும் பொருட்படுத்தாது, அவளைச் சங்கிலியால் பிணைத்த படைவீரர்கள், அவளை இழுத்துச் சென்றனர். சிறுவனின் உடலை ஒரு வீரன் தன் தோளில் சுமந்தான்.

ஆசை மகனின் உயிரற்ற உடலுடன் கணவனும் காத்திருக்க, சந்திரமதி வெளிப் பொதுச் சபையில் அந்நாட்டு மன்னன் முன் நிறுத்தப்பட்டாள்.

“மன்னா, இதோ, இந்தப் பெண்தான் உங்கள் மகனைக் கொன்றவள்” என்றான் வீரனொருவன்.

தன் மகன் உடலைக் கண்டு கதறியழுத காசிராஜன் உடனே தீர்ப்பளித்தான்:

“இவளைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிடுகிறேன். தலையாரியை அழைத்து வாருங்கள்”

சற்று நேரத்தில் தலையாரி வந்து சேர்ந்தான்.

“இன்று என் மனைவிக்குத் திதி. என் கைகளால் தண்டனை நிறைவேற்றுதல் தகாது. அதனால் என் பணியாளனை அழைத்துவரச் செய்கிறேன்” என்ற தலையாரி தன்னுடன் வந்தவனிடம் சொன்னான்:

“சுடுகாட்டில் இருப்பான், வெட்டியானாகப் பணிபுரியும் என் பணியாள். அவனை அழைத்து வா”

சற்று நேரத்தில் ஹரிச்சந்திரன் அழைத்து வரப்பட்டான். அவன் தோளில் அவன் மகனின் உயிரற்ற உடல்.

“இதென்ன கோலம்? யாரிது?” என்று கேட்டான், காசிராஜன்.

“என் மகன்” என்றான், ஹரிச்சந்திரன் உயிரற்ற குரலில். தானும் தன் மனைவியும் மகனின் சிதையில் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்றிருந்த நிலையில் இது என்ன சோதனை!

“இந்தப் பெண்ணைச் சிரச்சேதம் செய்ய வேண்டும். மன்னன் உத்தரவு” என்றான், தலையாரி. “இந்தப் பணியை உன்னிடம் ஒப்படைக்கிறேன்”

“உயிர் பிரிந்தவர்களை எரிக்கும் பணி செய்யும் என்னை ஒரு உயிரை எடுக்கப் பணிப்பது தகுமா?” என்று வினவினான்.

“நீ என் பணியாள். நான் இட்ட கட்டளையை நிறைவேற்றுவது உன் கடமை. உன்னை என் பணியாளாக வாங்கக் கட்டணம் செலுத்தியபோதே இதற்கு நீ உடன் பட்டாய். ஆகையால் நான் சொல்லும் எதையும் நீ மறுக்கலாகாது. மேலும், இது அரச கட்டளை” என்றான் தலையாரி.

தன் மகனின் உடலைக் கீழே கிடத்தினான், ஹரிச்சந்திரன். தான் சிரச்சேதம் செய்ய வேண்டிய பெண்ணை நோக்கினான். உடலில் உள்ள ரத்தம் அனைத்தும் சுண்டிப்போனது போன்ற உணர்வு.

“சந்திரமதி, என் கண்மணி!” என்று சூழ்நிலை மறந்து கதறினான். “என்னே சோதனை, இது?”

சந்திரமதி மண்டியிட்டு பலிபீடத்தில் தலை பதிக்குமாறு கட்டளை பிறந்தது.

கட்டளைக்குக் கீழ்ப்படிந்தாள் கட்டழகியான சந்திரமதி, கட்டியவன் பார்த்திருக்க.

தலையாரி கூர்வாள் ஒன்றை எடுத்து நீட்ட, அதைப் பெற்றுக் கொண்டான், ஹரிச்சந்திரன்.

ஒரு பக்கம் மகன் உடல் கிடக்க, மறுபக்கம் காசிராஜனின் மகன் உடல் கிடக்க, பலர் குழுமியிருக்க, பலிபீடத்தில் தலைபதித்துத் தன் வாள் வீச்சுக்காகக் காத்திருக்கும் சந்திரமதியைக் கண்ட ஹரிச்சந்திரனுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

அப்போது அங்கு தோன்றினார், விசுவாமித்திரர்.

“ஹரிச்சந்திரா, இதுவே உனக்கான கடைசி வாய்ப்பு. என்னால் என்ன நிகழ்ந்தது என்பதை நீயறிவாய். இது எதுவும் என்னால் நிகழவில்லை, நீ எதையும் எனக்கு அளிக்கவில்லை என்று ஒரே ஒரு முறை சொல். நீ இழந்த அனைத்தும், உன் மகனின் உயிர் உட்பட உனக்குத் திரும்பக் கிடைக்கச் செய்கிறேன்” என்றார்.

“இது அனைத்தும் நடந்தவைதானே, பெருந்தகையீர்! உண்மைக்குப் புறம்பாக நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்றான், சத்தியபுத்திரனாகிய ஹரிச்சந்திரன்.

“பிறகு உன் இஷ்டம், உன் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும்” என்ற விசுவாமித்திரர் ஒதுங்கி நின்றார்.

“ம்…ஆகட்டும்” என்று காசிராஜன் கட்டளையிட்டான்.

‘நெறியின் அன்ன என்றனை விடாநிறை இவட்கு உளதேல்

இறுதி இன்மை பெறுக, இல் எனின் இவள் இறுதி பெறுக’

என்று கண்களை மூடி மெல்லிய குரலில் சொன்ன ஹரிச்சந்திரன், “வாய்மையே வெல்லும்” என்று வானத்தை நோக்கிப் பெருங்குரலில் ஓங்காரமாய்க் கத்தியபடி வாளை உயர்த்தி சந்திரமதியின் கழுத்தை நோக்கி வேகமாய் இறக்கினான்.

விந்தை நிகழ்ந்தது!

சந்திரமதியின் கழுத்தை ஸ்பரிசிக்கும் அந்தத் தருணத்தில் கூரிய வாள், மலர்மாலையாய் மாறியது.

அக்கணமே விண்ணிலிருந்து மலர்மாரி பொழிந்தது. தேவர்கள் வாழ்த்தினர்.

‘என்ன நடக்கிறது இங்கே!’ என்று எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்திருக்க, புன்னகை புரிந்தார், விசுவாமித்திரர்.

அவர், தன் கமண்டலித்திலிருந்து நீரெடுத்து பாலகர் இருவரின் உடல் மீதும் தெளிக்க, காசிராஜனின் மகனும் ஹரிச்சந்திரன் மகனாகிய லோகிதாசனும் உறக்கத்திலிருந்து எழுவதுபோல் எழுந்து நின்றனர்.

“எழுந்திரு, சந்திரமதி” என்று அவளை அழைத்தார், விசுவாமித்திரர்.

கழுத்தில் விழுந்த மலர்மாலையுடன் எழுந்து நின்றாள், சந்திரமதி.

மகன் உயிருடன் நிற்கக் கண்டு ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டாள். ஹரிச்சந்திரனின் எதிரில் வந்து நின்றார், விசுவாமித்திரர்.

“உன் வாய்மைக்கு முன் நான் எம்மாத்திரம்!” என்று மட்டும் கூறியவரின் குரல் கம்மியது. ஹரிச்சந்திரனின் தோள்களில் தன் கரங்கள் இரண்டையும் பதித்து சற்று நேரம் மௌனமாய் நின்றார்.

“நான் இப்போது கொடுக்கப்போகும் என் வாக்குமூலத்தை பிரம்மரிஷியாகிய வசிஷ்டரும் கேட்க வேண்டும்” என்று அவர் கூறி முடிக்கும் முன் அங்கு தோன்றினார் வசிஷ்ட முனிவர்.

“ஹரிச்சந்திரனைப் பற்றிய தர்க்கத்தில் தோற்றவன் நான், ஜெயித்தவர் தாங்கள்தான்” என்று அவரை நோக்கிக் கைகூப்பி ஒப்புதல் அளித்த விசுவாமித்திரர், மேலும் சொல்லலானார்:

“ஹரிச்சந்திரனின் மனைவியின் கண்ணாடியறையிலும், நாட்டின் பல இடங்களிலும் தென்பட்டுக் கண்ணீர் உகுத்த பூதகி என்னால் சிருஷ்டிக்கப்பட்டவள். சந்திரமதியையும் லோகிதாசனையும் விலைக்கு வாங்கிய அந்தணனும், ஹரிச்சந்திரனை விலைக்கு வாங்கிய தலையாரியும் நான் நடத்திய நாடகத்தின் பாத்திரங்கள். லோகிதாசனை அரவம் தீண்டியதும், அவன் இறந்ததும், காசிராஜனின் மகன் உருவத்தில் காட்டில் சவம் கிடந்ததும், அரசாங்க வீரர்களின் கூற்றும் நான் அரங்கேற்றிய நாடகத்தின் காட்சிகள். இதற்கு ஒத்துழைத்த காசிராஜனும் இப்போது ஹரிச்சந்திரனின் பெருமையை அறியும் பாக்கியம் பெற்றான்” இவ்வாறு வாக்குமூலம் அளித்த விசுவாமித்திரர், வசிஷ்ட மஹாமுனிவரின் அருகில் வந்து நின்றார்.

“ஹரிச்சந்திரா, உன் மனைவி மகனுடன் இங்கு வா. நாங்கள் இருவரும் சேர்ந்து உன்னை ஆசீர்வதிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்”

தன் மனைவி மகனுடன் ஹரிச்சந்திரன் அந்த முனிஸ்ரேஷ்டர்கள் முன் வந்து நின்றதும் அனைத்துமே மாறியிருந்தது. ஹரிச்சந்திரனும் சந்திரமதியும் பட்டாடை, ஆபரணங்கள் மற்றும் கிரீடத்துடன் அரசனும் அரசியுமாகக் காட்சியளிக்க, அவர்களின் அருந்தவப்புதல்வன் லோகிதாசன் இளவரசனாக ஜொலித்தான்.

“உன் நாடு செல், ஹரிச்சந்திரா. பல காலம் பொன்னாட்சி புரிந்து பூரணமாய் வாழ்வாயாக” என்று வாழ்த்தினார், விசுவாமித்திரர்.

“அவ்வண்ணமே ஆகட்டும், ததாஸ்து” என்று உளமாற ஆசீர்வதித்தார், வசிஷ்ட மஹாமுனிவர்.

மீண்டும் தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். வாய்மை வென்றது. ஹரிச்சந்திரனின் வாழ்க்கையே அதற்கோர் உதாரணம்.

வாய்மை என்றால் ஹரிச்சந்திரன். ஹரிச்சந்திரன் என்றால் வாய்மை.

அடுத்து: சிபிச்சக்கரவர்த்தி

மீண்டும் சந்திப்போம்..