மதன் எங்க வாத்யார் பற்றி இந்த வாரமும் தொடர்கிறார்....

"கொஞ்ச காலமாகவே என் ஜோக்குகளில் அவ்வப்போது ஒரு குறும்பான சின்னப் பையனும், தமாஷான ஒரு திருடனும் வந்துகொண்டிருந்தார்கள். டியூப் லைட் போல லேட்டாகத்தான் நானே கவனித்தேன்.! ‘அட, இவர்களுக்குப் பெயர் வைத்து தனி காரெக்டர்கள் ஆக்கலாமே’ என்று தோன்றியது. ‘ரெட்டைவால் ரெங்குடு’வும் ‘சிரிப்புத் திருடன் சிங்காரவேலு’வும் பிறந்தது இப்படித்தான்!
பிறகு ‘முன் ஜாக்கிரதை முத்தண்ணா’வும் ‘புரோக்கர் புண்ணியக் கோடி’யும் வந்தார்கள். இந்த நால்வரும் வாசகர்கள் மத்தியில் ஏன் இவ்வளவு பிரபலமானார்கள் என்கிற கேள்வியை இன்றும் கூட என்னைப் பேட்டி காண வருபவர்கள் தவறாமல் கேட்கிறார்கள். அவர்கள் விகடனில் வந்ததும் அவர்களின் பாபுலாரிட்டிக்கு ஒரு முக்கியக் காரணம் என்று நான் பதில் சொல்வதுண்டு.
லுங்கி டூ பாண்ட்..
நான் விகடனில் ரொம்ப உழைத்தது பொன் விழாவின்போதுதான். பொன் விழா கண்காட்சியின் மொத்தப் பொறுப்பையுமே என்னிடம் தந்தார் எம்.டி.
விகடனில் வந்த புகழ்பெற்ற காரெக்டர்களை MADAM TUSSAD கண்காட்சி ஸ்டைலில் பெரிய பொம்மைகளாகச் செய்து வைக்க வேண்டும் என்று ஐடியா கொடுத்ததை உடனே ஏற்றுக்கொண்டார் எம்.டி.
ஆனால், அழகிய அம்மன் சிலைகளையே செய்து பழக்கப்பட்ட சினிமா ஆர்ட் டைரக்டர்கள் கார்டூன் சிலைகள் செய்ய சிரமப்பட்டார்கள். அதனால் துப்பறியும் சாம்பு, சிரிப்புத் திருடன் முகங்களையெல்லாம் நானே உட்கார்ந்து களிமண்ணில் உருவாக்கியதை மறக்க முடியாது. ராஜாஜி அரங்கில் பிரபல
எழுத்தாளர் ஆர்.கே. நாராயண் கண்காட்சியை திறந்து வைக்க நுழைந்த அதே நேரத்தில் உள்ளே லுங்கி அணிந்து கொண்டு கடைசி படங்களைப் பலகைகளில் ஒட்டிவிட்டு, நிமிஷத்தில் பாண்டுக்கு மாறி ஓடிச் சென்று ஆர்.கே. நாராயண் ரிப்பனை வெட்டும்போது பக்கத்தில் நின்று நானும் கைதட்டினேன்.
இணை ஆசிரியர் ஆனேன்..
பிற்பாடு ஜுனியர் விகடன் ஆரம்பித்தபோது எனக்கு இணை ஆசிரியர் பதவி தந்தார். விகடனிலிருந்து ஸ்ரீதர் ஒய்வெடுத்துக் கொண்ட பிறகு, விகடனுக்கும் என்னை இணை ஆசிரியராக்கினார் எம்.டி.
பொன் விழாவுக்கு அடுத்தபடி நாங்கள் மெனக்கெட்டு உழைத்தது மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்துக்காகத்தான். அதற்கு முந்தையை மாணவர்களுக்கான விகடன் திட்டங்கள் அவ்வளவு வெற்றிகரமாக இயங்கவில்லை. 'மாணவர்களை விகடன் தத்து எடுத்துக் கொள்வதைப் போல ஒரு புதிய திட்டத்தை நாம் தீட்ட வேண்டும்' என்றார் எம்.டி. அந்த அணுகுமுறையும் கவனமும் புதிய திட்டம்
பெரும் வெற்றியடையக் காரணமாக அமைந்தது.
அந்த போன்கால் …!
பொன் விழாவைத் தொடர்ந்து வைர விழாவின்போதும் காமராஜர் அரங்கில் மேடைமீது நின்றேன் நான் – இந்த முறை இணை ஆசிரியராக! அப்போது விகடனுக்கும் எனக்கும் உள்ள தனிப்பட்ட உறவுக்கும் கூட வெள்ளிவிழா நெருங்கிவிட்டது என்பது நினைவுக்கு வந்து பெருமித உணர்வை ஏற்படுத்தியது. வைர விழாவில் திடிரென வாசகர்கள் முன்னிலையில் எம்.டி. என்னை உணர்ச்சிவசப்பட்டு அதீதமாகப் பாராட்டிய போது அவர் என் மீது வைத்திருந்த அன்பு மட்டும்தான் எனக்குத் தெரிந்தது. ( நான் உணர்ச்சிவசப்படவும் இல்லை. அது அதீதமும் இல்லை; என்று பிற்பாடு அவர் மறுத்தது வேறு விஷயம்) நானும் அவரிடம் அபரிமிதமான அன்பும் மரியாதையும் வைத்திருந்தேன். மரியாதை – அவர் எம்.டி. என்பதால் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த, பக்குவமான பத்திரிகையாளர் என்பதால் தான்! ஒரே உதாரணம் – அட்டைப்பட ஜோக்கிற்காக அவர் சிறைக்குச் செல்ல நேரிட்டபோது நடந்த ஒரு சிறு நிகழ்ச்சி! வெளியே யாருக்கும் தெரியாது!
அன்று காவல்துறையின் ஜீப்புகள் மூன்று எம்.டியின் இல்லத்துக்கும் அலுவலகத்துக்கும் படப்பை பண்ணைக்கும் முன் சீறி வந்து நின்றன! விகடன் ஆசிரியர் அப்போது படப்பையில் பனியன் அணிந்து கொண்டு தோட்ட வேலையில் ஈடுப்பட்டிருந்தார்.
'உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம்' என்று காவல்துறை அதிகாரி சொன்னவுடன் வெற்றிலை சீவல் பெட்டியைக் கூட எடுத்துக்கொள்ளாமல் சட்டை மட்டும் அணிந்து கொண்டு சாதாரணமாக வண்டியில் ஏறி அமர்ந்தார் ஆசிரியர். சிறைச்சாலைக்குக் கிளம்புவதற்கு முன் ஒரே ஒரு போன் செய்ய காவலதிகாரிகளிடம் அனுமதி கேட்டார் ஆசிரியர்.
அதே சம்யம் அலுவலகத்தில் திகைப்புடன் அமர்ந்திருந்தேன் நான். போனில் பேசிய ஆசிரியர்அமைதியாக என்னிடம் சொன்னார். 'மதன் – நான் சிறைச்சாலைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நான் வரும்வரை நீங்கள்தான் ஆக்டிங் எடிட்டர். பத்திரிகையைப் பார்த்துக் கொள்ளுங்கள்!' என்றார். இந்த அசாத்திய பக்குவம் எனக்கு அவர் மீது இருந்த பிரமிப்பை மேலும் கூட்டியது எனலாம்!" என நிறுத்தினார் மதன்.
(தொடரும்)

Leave a comment
Upload