இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான தலைநகரம் என்று பாராட்டப்படுகிறது சென்னை. அதிலும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தலை சிறந்த இடமாக இங்குள்ள மருத்துவமனைகள் சிறப்பு பெற்றிருக்கின்றன.
குறிப்பாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பில்ரோத் மருத்துவமனை! இதுவரை 2500 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து அரசின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட கிட்னியை, கோளாறு உள்ளவர்களுக்கு பொருத்தி 100க்கும் மேற்பட்ட வெற்றிகரமான சிறுநீரக மாற்று ஆப்பரேஷன்களும் செய்து சாதனை படைத்திருக்கிறது பில்ரோத். சிறுநீரக ஆபரேஷனில் தமிழ்நாடுதான் முன்னிலை இடம்பெற்றுள்ளது.
சிறுநீரகக் கோளாறுடன் வரும் நோயாளிகளின் பயத்தைப் போக்கி சிகிச்சை அளிப்பதிலும், சிறுநீரக மாற்று அறுவையை வெற்றிகரமாக நடத்த துணை புரிவதிலும் மருத்துவ மேதை டாகடர் ஆர். விஜயகுமாரின் பணி, பில்ரோத் மருத்துவமனையில் மகத்தானதாக இருப்பது உண்மை. சிறுநீரக இயல் நிபுணரான இவருடன் நடத்திய ஒரு மணி நேர சந்திப்பு, பல சந்தேகங்களுக்கு விடையாக அமைந்தது.
இனி விருது பெற்ற மருத்துவ மேதை டாக்டர் விஜயகுமார் விகடகவி வாசகர்ளிடம் பேசுகிறார்….
"யூராலாஜிஸ்ட் என்கிறவர்தான் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்பவர். ‘நெஃப்ராலஜிஸ்ட்’ என்பவர் சிறுநீரகக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பவர். இவர்கள் இருவரும் இணைந்துதான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள். முன்பெல்லாம் உயிரோடு இருப்பவரிடம் இருந்து தானமாகப் பெற்ற ஒரு கிட்னியை, கிட்னி செயல் இழந்தவர்களுக்கு பொருத்துவதுதான் நடந்தது. இப்போது மூளை சாவு அடைந்தவர்கள் என்று உறுதி செய்யப்பட்டவரிடம் இருந்து உறவினர் அனுமதியுடன் சிறுநீரகம் பெற்று சிறுநீரக மாற்று அறுவை நடக்கிறது.
ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் மட்டுமே சிறுநீரகத்தை தானமாக தர முடியும். ஒரு கிட்னியை தானமாக வழங்குவதில் ஒருவருக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. ஒரு கிட்னி தேவைக்கு ஏற்ப தன்னை சற்று பெரிதாக்கிக் கொண்டு வேலை செய்யும். எம்ஜிஆருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்ட செய்திகள் வந்தபோதுதான் மக்களிடையே அதுபற்றி பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது எனலாம். எம்.ஜி.ஆரும், பிறகு தமிழகமெங்கும் உள்ள மருத்துவமனைகளில் சிறுநீரக சிகிச்சைக்கு என்று தனிப் பிரிவு ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் இருந்ததைவிட இப்போது சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றவர் நீண்ட காலம் உயிர் வாழ்கிறார். சாதாரண மனிதனைப் போல தன் பணிகளை செய்கிறார்.
சிறுநீரகம் என்பது சிறு சிறு பகுதிகளால் ஆன தொகுப்பு. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் நெப்ரான்களால் ஆனது சிறுநீரகம். அதன் முக்கிய பணி, நமது ரத்தத்தில் கலக்கின்ற வேண்டாத பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுவதுதான்! நாள் ஒன்றுக்கு இரண்டு லிட்டர் வரையிலும் நமது உடலிலிருந்து சிறுநீர் பிரிகிறது.
சிறுநீரகம் சரியாக வேலை செய்யாவிட்டால், உடலிலுள்ள ரத்தத்தில் யூரியா, கிரியேட்டின் அதிகமாகிவிடும். இது ஆபத்தானது. கிட்னி பழுதடைய காரணமாக அமையும்.
இன்று சிறுநீரகக் கோளாறுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது சர்க்கரை நோய். அடுத்து அதிக ரத்த அழுத்தம். 30 வயது தாண்டிவிட்டால், சுகர், பிபி இருக்கிறதா என்கிற பரிசோதனை மிக அவசியம். கால் வீக்கம், முக வீக்கம், மூச்சு இரைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் சிறுநீரக சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
கிட்னி நன்றாக வேலை செய்ய ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம், தாகம் இல்லாவிட்டாலும்! உப்பு அதிகம் உணவில் சேர்க்கும் பழக்கத்தை குறைக்க வேண்டும். டின் உணவுகள், சிப்ஸ், வறுவல், ஊறுகாயை தவிர்க்க வேண்டும். ஆதிமனிதன் காலத்தில் இயற்கை உணவில் உப்பு இருந்ததில்லை. இப்போது கூட எஸ்கிமோக்கள் உப்பு இன்றி சாப்பிடுகிறார்கள்! அவர்களுக்கு பிபி வருவதில்லை! பகல் நேரத்தில் மூன்று அல்லது நான்கு முறை சிறுநீர் கழிப்பதும், இரவில் ஒரு முறை சிறுநீர் கழிப்பதும் ஆரோக்கியமான கிட்னிக்கு அடையாளம்.
சிறுநீரில் உள்ள யூரியா, புரோட்டின் அளவுகளை அறிந்து முன்னெச்சரிக்கையுடன் மருந்துகளை சாப்பிட்டு வந்தால் டயாலிசிஸ் அவசியமில்லை, தவிர்க்கலாம். சிறுநீரகம் முற்றிலும் செயல் இழந்து விட்டால் டயாலிசிஸ் முறையில் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்ற நேரிடுகிறது. தற்காலிக செயல் இழப்பு என்பது இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் செய்தால் சிறுநீரகம் நார்மல் ஆகிவிடும். மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரை டயாலிசிஸ் தொடரலாம். பல ஆண்டுகள் தொடர்ந்து டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள் உண்டு"
டாக்டர் விஜயகுமார் இவ்வாறு பல தகவல்களை கூறிக் கொண்டே போனார். உலக தரத்துக்கு ஏற்ப நோயாளிகளின் சிறுநீரக கோளாறுகள் தவிர்க்கப்படுவதிலும், உயிர் காப்பாற்றுவதிலும் சென்னை சிறப்பாக செயல்படுகிறது என்பதனை அவரது பேச்சிலிருந்து சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தது.
டாக்டர் விஜயகுமார் டாக்டர் அபிநேஷ்
பில்ரோத் மருத்துவமனையில் டாக்டர் விஜயகுமாருடன் இணைந்து பணியாற்றுகிறார் டாக்டர் அபிநேஷ். இளம் நெஃப்ராலாஜிஸ்ட் ஆன இவரது திறமையும் அங்கே பளிச்சிடுகிறது. இவர் டாக்டர் விஜயகுமாரின் மகன். தந்தையை போலவே இத்துறையில் உள்ள அத்தனை மேற்படிப்புகளையும் இளம் வயதிலேயே முடித்து 'மிகத்திறமை வாய்ந்த மருத்துவர்' என்ற பெயருடன் இவரும் அருமையாகத் திகழ்கிறார்.
Leave a comment
Upload