தொடர்கள்
தொடர்கள்
காதல் பொதுமறை - 61 - காவிரிமைந்தன்

20210719220347750.jpg

20210719220421741.jpg

காவிரிமைந்தன்

2021930173907898.jpg

நான் கண்ட பாகங்கள் நழுவவிடவில்லையே!

அன்பிற்கினியவளே..

கார்முகில்கூந்தல் பின்னோட்டம்.. காதலியே.. உன்னழகில் ஏகாந்தமல்லவோ முன்னோட்டம்!

எனவேதான் வாரியணைக்கும்போதிலும் வள்ளல்போல் நீ எனைத் தாங்கிவிழுகிறாய்!

மடிமீது சாய்ந்தின்பம் மாறாத இரவுகளே தினம் நான் வேண்டும் வரங்களாகும்!

மெளனத்திலிருந்தாலும் மைவிழியால் நீ பேசும் பேச்சுக்களே எனக்கு அப்போது போதும்! போதும்!

அன்பெனும் திருவீட்டில் ஆதாரம் நீயாக.. வாழ்வெல்லாம் இனித்திடுமே.. யோகம்!

யோகம்!! இதயத்தின் மொழிதான் இன்பக்காதல் என்பதனை இருவரும் உணர்ந்திடும்வேளைதான் சொர்க்கம்! சொர்க்கம்!!

தேவைகளை நீயறிந்து சேவையென புரியவரும் நேரம்.. செவ்வானம் என்மீது பொன்மலர்கள் தூவும்! தூவும்!!

ஏடெடுத்து எழுதிவைக்க உன் எழிலை நான் முயன்றேன்.. என்றாலும் எட்டவில்லையடி உன் அழகின் உயரம்! உயரம்!!

தோள் கண்டார் தோள் கண்ட கதைபோல நான்கண்ட பாகங்கள் நழுவவிடவில்லையே நான் என்ன செய்வேன்!

நளினங்கள் வழியாக நீ நடந்து செல்ல.. நயனங்கள் என் மனதில் குடிபுகுந்துகொள்ள.. நாணங்கள் நீ பொழியும் நேரமதில் இன்பம் தேன்மழைபோல் நம்மிடமே ஓடிவந்து பாயும்!

தென்றல்வர இடமில்லையடி இடையில் என்பதிலே நமக்குத்தான் எத்தனை எத்தனை பெருமை!

வெண்ணிலவின் ஒளியில் நம்மை நாம் மறந்து சந்தித்திருப்போமே அங்குதான் காதலின் பூரணம் வாழ்ந்திருக்கும்!

இன்பத்துப்பால் தொட்டு எழுதும் கவிதைகள் என்றைக்கும் இனிக்கும் என்று சொல்லத்தான் வேண்டுமா?

இருவருக்கும் நெருக்கம் இருக்கும் நிலையில் எனதெல்லாம் உனதாகும்!

உனதெல்லாம் எனதாகும்! இருவருக்கும் பொதுவாகும்.. இன்பம்.. இன்பம்!!

வள்ளுவன் முதலாக வரைந்தளித்த பாத்திரங்கள் இதுபற்றி எத்தனை எத்தனை கதைகள் கூறும்! கூறும்!

முதற்பாலும் இரண்டாம்பாலும் எவர் வேண்டாம் என்று சொல்வார்?

இருந்தாலும் மூன்றாம் பாலுக்குத்தான் அடிமனதில் இடமிருக்கும் - அன்பே நீயங்கு வாழுவதால்!!

முக்கியமாய் இருப்பதனால்தான் முறையாக நிறைவாக இப்பாலை அவனும் வைத்தான்!

தப்பாமல் நாமும் அந்த தடத்தில் செல்வோம்!