தொடர்கள்
கதை
வெடித்து மகிழ்... – பா. அய்யாசாமி

20211003165403520.jpeg

டேய், வா, வா விநோத்து, பார்த்து எவ்வளவு நாளாச்சு? கடந்த தீபாவளிக்குக் கூட நீ வரலை, உங்க அப்பா, அம்மா என்னமா ஏங்கிட்டாங்க தெரியுமா... என்ன வேலையாக இருந்தாலும், பண்டிகைக்காவது பெத்தவங்களோட வந்திருந்து கொண்டாடி அவங்களை சந்தோஷப் படுத்துடா என்று கல்லூரி வரை ஒன்றாகப் படித்த தனது நண்பன் விநோத்திடம் கூறிய குமாருக்கு, சொந்த ஊர் சிதம்பரம். சின்னதாக ஒரு எலக்ட்ரிக்கல் கடை, பிஸினஸ் சுமாராக இருந்தாலும், வருமானம் குறந்தபின்னும் பிறந்த ஊரை விட்டு வெளியேபோக ஆர்வமில்லாமல்... தாய், தந்தை, மனைவி, மகனோடு வாழ்பவன்.

சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் நல்ல வேலை, சொந்தமாக அடுக்ககத்தில் ஒரு வீடு, மனைவி, ஒரே மகன் அவனின் படிப்பு என சென்னையில் செட்டில் ஆனவன் விநோத்.

“என்னடா பெரிய தீபாவளி? அதான் இப்போ வந்திருக்கேன் இல்லே, காசுதான் கரையுது என்று அலுத்துக்கொண்ட விநோத், நீ எப்படி இருக்கே குமார்” என்று கேட்டான்.

“பண்டிகையே, மனத்தை மகிழ்வாக வைத்து கொள்வதற்குதான்டா, அதற்கே ஏன் சலித்துக் கொள்கிறாய்?”

“கடையில் லாபமில்லைதான், எனக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் ஆன்லைன் வர்த்தகம், சென்னை மோகம், எது வாங்கினாலும் சென்னைக்குப் போய் வாங்கினாத்தான் வாங்கின மாதிரி இருக்கு” எல்லோருக்கும். “ஒரு செருப்பு கூட சென்னை போகும்போது வாங்கிக்கலாம் என்ற மனநிலையில் இருக்கின்றனர் மக்கள். என்ன சொல்றது? தீபாவளி பண்டிகையின் போது கூட வியாபாரம் இல்லையே, நாங்க எங்கே போய் பொருளை விக்கிறது? என குறு வியாபரிகளின் ஒட்டுமொத்தக் குறலாய் அலுத்துக்கொண்டான் குமார்.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பெரிய பை நிறைய பல வகையான வெடிகளை கொண்டு வந்து வெடிக்க ஆரம்பித்து இருந்தான் குமாரின் மகன் செல்வம்.

ஏண்டா இப்படி? “உன் நிலைமை புரிந்தும் இவ்வளவு அதிக வெடி வாங்கலாமா?” என கேட்டான் விநோத்.

“நீ வெடி எங்கே வாங்கினாய்? எவ்வளவு வாங்கினாய்?” என்று விநோத்திடம் குமார் கேட்டதற்கு...

அதெல்லாம், என் பையனே வேண்டாம் என்று சொல்ல, “நான் வாங்கவே இல்லை” என்றான் விநோத்.

ஏன்?

“காசை ஏன் கரியாக்கனும்?”

“தீபாவளிக்கு வெடிக்காமல் எப்பத்தான் வெடிக்கிறது? நாமெல்லாம் அப்போது வெடிக்கலையா?”

அப்போது எல்லாம் “இவ்வளவு மாசும், காசும் இல்லைடா, இப்ப அப்படியா?” என்றான் விநோத்.

“இது நாம் நமக்கு சொல்கிற சால்ஜாப். ஒன்று நீ அதை காசாக பார்க்கின்றாய், இல்லை மாசாக பார்க்கின்றாய்.” இரண்டுமே தவறு.

“மாசு பூமியிலே மட்டுமில்லைடா, எல்லார் மனத்திலேயும் இருக்கு. முதலில் குழந்தைகளை, குழந்தையாகவே இருக்க விடுங்கடா” என்ற குமார். “குழந்தைங்கதாண்டா வெடிக்க ஆசைப்படுவாங்க, இயல்பு அது அதில்தான் அவங்களோட மகிழ்சியே இருக்கு.”

“வெடிகளை நீ காசு, பொருளாகப் பார்ப்பதினால்.. வாங்க யோசித்திருக்கிறாய், உன் மகனும் விரும்பவில்லை போல.”

“ஒரு மகிழ்ச்சியான நேரத்தில், என் மகனுக்கு மேலும் மகிழ்வை கொடுக்க கூடிய ஒரு பொருளாக மட்டும் நான் பார்க்கின்றேன்.” ஆகையால் என்னுடைய கஷ்ட நிலையிலும், ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கி அதை வாங்கிக்கொடுத்துள்ளேன் என்றான் குமார்.

நேராக வீட்டிற்குச்சென்றவன், படுத்துக்கொண்டே துப்பாக்கியால் சுட்டு, செல்போனில் விளையாடிக்கொண்டிருந்த தனது மகனை அழைத்துக்கொண்டு, வெடிக்கடைக்கு கிளம்பினான் பெரிய துணிப்பையுடன் விநோத்.