தொடர்கள்
பொது
இசையில் மூழ்கடிக்கும் வெளிநாட்டு பறவைகள்... - மாலாஸ்ரீ

பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்!!

20211003195151918.jpg

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தின் தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேப்பமரம், புளியமரம், தென்னை உள்ளிட்ட மரங்கள் ஏராளமாக உள்ளன. இதனால், பெரம்பூர் கிராமமே பசுஞ்சோலையாக, ரம்மியமாக காட்சி தரும்.

பெரம்பூர் கிராமத்துக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் இருந்து நத்தை கொத்தி நாரை, கொக்கு, பாம்புதாரா உள்ளிட்ட பல்வேறு அபூர்வ வகை பறவைகள் இங்கு வந்து, இங்குள்ள மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு அடை காத்து குஞ்சுகள் பொரிக்கிறது. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்து பறக்கும் வரை அவைகளை பாதுகாத்து மீண்டும், அனைத்தும் பறவைகளும் டிசம்பர் மாதத்தில் தங்களின் நாடுகளுக்கு திரும்பி செல்கின்றன.

20211003195214837.jpg

வேதாரண்யம், வேடந்தாங்கல் பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளை சேர்ந்த கொக்கு, மடையான் மற்றும் நீர்காகங்கள் பெரம்பூர் கிராமத்திற்கு தங்கள் ஜோடி பறவைகளுடன் கூட்டமாக வருகிறது.

2021100319524664.jpeg

‘‘எங்களின் கிராமத்துக்கு ஆண்டுதோறும் 25 வகைக்கும் மேற்பட்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து, இனப்பெருக்கம் செய்து, குஞ்சுகளை பத்திரமாக தங்கள் இருப்பிடத்திற்கு பறந்து செல்கின்றன. வெளிநாட்டு பறவைகளின் பாதுகாப்புக்கு எங்கள் கிராம மக்கள் அனைவரும் முழு மனதோடு அதற்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாத்து வருகிறோம். எங்களின் கிராமத்தில் 24 மணி நேரமும், அப்பறவைகளின் இனிமையான சங்கீத ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும். எங்கள் கிராமத்தில் வந்திருக்கும் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடும் நோக்குடன் நபர்கள் யாரேனும் வந்தால் எங்கள் கிராம மக்கள் பொங்கியெழுந்து, அக்கும்பலை அடித்து விரட்டிவிடுவோம்.

பறவைகளின் நலன் கருதி, எங்கள் பெரம்பூர் கிராம சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எங்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் யாரும் தீபாவளிக்கு முன்னரோ அல்லது பின்னரோ பட்டாசு வெடிப்பதில்லை. பட்டாசு விற்பனைக்கு, எங்கள் கிராமத்தில் அனுமதியில்லை என்று பெரம்பூர் கிராம மக்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.