
தீபாவளி என்றாலே விளக்கு ஏற்றுவது மற்றும் பட்டாசு வெடிப்பது தான் தலைப்பு செய்தி…
ஒவ்வொரு வருடமும் புதுமையான பெயர்களில், வித விதமான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும்.
ஆரம்ப காலங்களில் பட்டாசு வெடிப்பதினால் உண்டாகும் சத்ததினால் தங்களை நெருங்க வரும் கெட்ட சக்திகள், ஆவிகளை விரட்ட முடியும் என்று புராணங்களில் கூறப்பட்டதை நம்பினார்கள். ஆனால், இன்று... என்னதான் புராணங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சொன்னாலும், இன்றைய சூழலில் அது மிகவும் கேடு விளைவிக்க கூடிய காற்று மாசுபடுதல், கொரோனா, தீ விபத்துக்கள், வாயில்லா ஜீவன்களை தொல்லைக்கு உள்ளாக்குவது போன்றவைகளால் குறைந்துள்ளது.

புராணங்களில் பட்டாசு:
இராவணனை வென்றெடுத்த பின்னர், இராமர் அயோத்திக்கு திரும்பும் போது மக்கள் பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்றார்கள் என்று கூறப்படுகின்றது. அதேபோல் நரகாசுரனை, கிருஷ்ணர் வென்றெடுத்த மகிழ்ச்சியில் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக புத்தாடை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதைத் தவிர, தீபாவளியன்று தங்களின் வீடுகளுக்கு செல்வ வளம் அளிக்கும் லட்சுமி வருவாள் என்ற ஐதீகம் இருக்கிறது. எனவே லட்சுமியை தங்கள் வீட்டிற்கு வரவேற்கும் விதத்தில் பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சாஸ்திரத்தில் தீபாவளி பட்டாசு:
தீபாவளி பண்டிகையின் பட்டாசுகள் பற்றி சாஸ்திரத்தில் சிறப்பாக கூறப்பட்டுள்ளது. மஹாளய பட்சத்தில் பூவுலகிற்கு வந்த பித்ருக்கள் திரும்பிச் செல்லும் காலம் தீபாவளி. எனவே அவர்கள் தங்களுடைய பித்ரு லோகத்திற்குத் திரும்பச் செல்லும் வழியினை ஒளிமயமாக்கத்தான் உயர்ந்த கம்பங்களில் தீப்பந்தங்கள் முற்காலத்தில் ஏற்றப்பட்டன. ஆகாயத்தில் வாணவேடிக்கைகளும் கூட இதற்காகத்தான் தீபாவளியின் போது ஏற்படுத்தப்பட்டன. மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும் அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.
“ஸ்மிருதி கௌஸ்” என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது...
“துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ: உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்”
என்ற இந்த ஸ்லோகத்தில், ‘துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, “உல்கா” எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். இதில் வரும் “பூத” என்ற வார்த்தை, சதுர்த்தசியைக் குறிக்கும். அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி. “தர்சம்” என்ற வார்த்தை “அமாவாசை”யைக் குறிக்கும். இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம். காரணம் என்ன? “பித்ரூணாம்” என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது. பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி, சொர்க்கம் நோக்கி முன்னேறிச் செல்வார்கள். ஆகையால், பட்டாசை விரும்பாதவர்கள் கூட, நம் முன்னோருக்காக, கண்டிப்பாக மத்தாப்பாவது கொளுத்த வேண்டும்.

அறிவியல் ரீதியாக பட்டாசு:
பட்டாசு வெடிப்பது பற்றி நிறைய புராணக் கதைகளில் எழுதியிருந்தாலும் அறிவியல் ரீதியாகவும் பட்டாசு வெடிப்பதற்கு விளக்கம் கூறப்படுகின்றது.
தீபாவளி வரும் நேரம் மழை காலமாக இருப்பதால் எண்ணற்ற பூச்சிகள் வருவதற்கு ஆரம்பிக்கும். அதனால் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இதனை தடுக்க வெப்பம் அவசியம். அதற்காகவே வீடுகளில் விளக்கு ஏற்றவும், பட்டாசு வெடிக்கவும் கூறப்பட்டது. மற்றும் பட்டாசுகளில் உள்ள சல்ஃப்ர் பூச்சிகள் அதிகரிப்பதை தடுக்கின்றது.

பட்டாசு வெடிக்கும் போது கவனிக்க வேண்டியவை:
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் பொழுது பெரியவர்கள் உடனிருந்து கவனிக்கவேண்டும்.
வீட்டிற்குள் வைத்து பட்டாசு வெடிக்கக்கூடாது.
திறந்தவெளியில் வைத்துத்தான் வெடிக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். பாதுகாப்புக்கு காலணிகள் அணிந்து கொள்ள வேண்டும்.
கொரோனா அச்சத்தால் சானிடைசரை கைகளில் பூசிக்கொள்கிறோம் . சானிடைசரில் ஆல்கஹால் அதிகம் உள்ளது . இது எளிதில் தீப்பற்றக் கூடியது . சானிடைசர் பூசிய கைகளால் மத்தாப்பு , பட்டாசுகளைத் தொட வேண்டாம். அந்தக் கைகளால் பட்டாசு வெடித்தால், தீக்காயம் ஏற்படக்கூடும்.
தீபாவளி நாட்களில் சானிடைசரை தவிர்க்கவும். கைகளை சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்தவும்.
பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு வாளி நீா், மணல் ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
நீண்ட ஊதுவத்திகளைக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். வெடிக்கும்போது, முகத்தினை பாதுகாப்பாக வேறுபக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும்.
அதிக சத்தத்தை எழுப்பும் அணுகுண்டு போன்ற வெடிகளை தவிர்க்கலாம்.
குடிசை பகுதிகள் அருகே பட்டாசு, குறிப்பாக ராக்கெட் உள்ளிட்டவற்றை வெடிக்கக்கூடாது.
வெடிக்காத பட்டாசுகளை கையில் தொடக்கூடாது.
பட்டாசு வெடிக்கும்போது, முதியவா்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் மற்றும் விலங்குகளை மனதில் கொள்ள வேண்டும்.
பட்டாசு வெடிக்க தடை:
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பண்டிகைகள் ஏதும் கொண்டாட முடியாமல் களையிழந்து இருந்தது. இந்த ஆண்டு. மக்கள் நலன் கருதி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் முன் கூட்டிய அறிவிக்கப்பட்டதால், மக்கள் ஆர்வமுடன் புத்தாடைகளையும் பட்டாசு, பலகாரங்களையும் வாங்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தமிழக அரசு தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.
பட்டாசு வெடிக்க அரசு தரப்பில் விளக்கம்:
பட்டாசு வெடிக்கும் புகையினால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், மூச்சுத்திணறல் உள்ளவர்கள், இதயம் பலவீனமானவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வந்தவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிப்பார்கள். இதனை தாண்டி காற்று மாசுபாடு ஏற்படும் என்பதனால் தான் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நாமும் அரசு ஆணைகளுக்கு கட்டுபட்டு வெடிப்போம் தீபாவளி பட்டாசு!!


Leave a comment
Upload