தொடர்கள்
கதை
“பேசும் கிளிகள்…!” - வெ.சுப்பிரமணியன்

20211003165216888.jpeg

ஊரிலிருந்து கிளம்பிய எனக்காக காத்திருந்த என் பேத்தி, நான் போனதும், “தாத்தா நான் சோகமா இருக்கேன். நேத்திக்கு இந்த அம்மா என்னை திட்டினா, அப்புறம் முறைச்சுப் பார்த்தா” என்று ‘பிராது’ குடுத்தாள்.

“எதுக்கும்மா அம்மா திட்டினா?” எனக்கேட்டேன்.

“நேத்திக்கு என்னை பல் டாக்டர்கிட்டே கூட்டிண்டு போனாளா… அந்த டாக்டர் என்னை வாயத்தொறந்து ‘ஆஆஆ…’ காட்டச் சொன்னார். நான் விரலால என்னோட வலிக்கிறப்பல்லை தொட்டுக் காட்டினேன். நீ கையை எடுபாப்பா… நானே பார்த்துக்கிறேன்னார் டாக்டர்” என்று சொல்லிவிட்டு தேம்பினாள்.

எனக்கு காஃபி எடுத்துக்கொண்டு, சிரித்தபடியே வந்த என் மருமகளோ,

“அம்மாவுக்கு, பல் ஓட்டையை அடைக்க, போனவாரம் ஒரு டென்டிஸ்டிடம் போயிருந்தோம். பல் ஓட்டையை அடைச்சுண்டு வந்த ரெண்டே நாளில், அம்மாவோட பல்லிலிருந்த ‘காவிட்டி-சிமென்ட்’ விழுந்துடுச்சு. ‘அதே’ டாக்டர்கிட்டே குழந்தையை கூட்டிண்டு போகவேண்டாம். ‘அந்த ஆள் போலி டாக்டர், ஞானசூன்யம்’, அப்படீன்னு அம்மா என்கிட்டே சொன்னதை, உங்க பேத்தி கேட்டிண்டிருந்தா” என்றாள்.

“பக்கத்திலே வேற கிளினிக் இல்லே. அதனால அவர்கிட்டயே காட்டலாம்னு முடிவுபண்ணி, அம்மாவுக்கு காட்டின அதே டாக்டரிடமே உன் பேத்தியை கூட்டிண்டு போனோம்” என்றான் என் மகன்.

“உனக்கு வலிக்கிற பல்லை நானே பார்த்துக்கிறேன்னு அந்த டாக்டர் இவகிட்டே சொன்னதும், ‘நீங்க போலி டாக்டர், ஞானசூன்யம்னு’ என் பாட்டி சொன்னா. அதனாலதான் நானே தொட்டுக்காட்டறேன்னு சொல்லி, எங்க மானத்தை வாங்கிட்டாப்பா” என்றாள் என் மருமகள்.

“நீங்க டாக்டரைப் பத்தி தப்பா பேசிட்டு, குழந்தையை கோவிச்சுக்கலாமா?” என்றேன்.

“அப்பா… நாலு நாளைக்கு முன்னாடி, இவ செஞ்ச விஷயத்தை…” என்று என் மருமகள் ஆரம்பிக்கவும்,

“அதெல்லாமா அப்பாகிட்டே சொல்லறது” என்று என் மருமகளை சிடுசிடுத்தான் என் மகன்.

“பரவாயில்லே சொல்லும்மா” என்றேன்.

“போன வெள்ளிக்கிழமை சாய்ங்காலம், உங்க பேத்திக்கு, ஆன்லைன்ல பாட்டு கிளாஸ் நடந்தது. ஓரமா நின்னு கிளாசை கவனிச்சிண்டிருந்த உங்க பிள்ளை, ‘பாட்டு டீச்சரோட குரல் சகிக்க முடியாட்டியும், ஆள் பார்க்க சூப்பரா இருக்கான்னு’ கிச்சன்லே வேலையாயிருந்த எங்கிட்டே கமென்ட் அடிச்சுட்டுப் போயிட்டார். எதேட்சையா, கிச்சனுக்கு தண்ணி குடிக்கவந்த உங்க பேத்தி, அவர் சொன்ன கமென்டை கேட்டுட்டா.
பாட்டுகிளாஸ் முடிஞ்சதும், “மிஸ் நீங்க சூப்பரா இருக்கீங்க, ஆனா உங்க குரல் சுமாராத்தான் இருக்குன்னு என்னோட டாடி சொன்னாருன்னு” உங்க பேத்தி அந்த மிஸ்கிட்டே உளறிட்டா.

“அதுக்குப் பிறகு, நான் அந்த மிஸ்ஸோட வீட்டுக்கு நேர்ல போய், ‘சாரி மிஸ்… என் வீட்டுக்காரர் எதோ டி.வி. புரோகிராமை பார்த்துட்டு கமென்ட் பண்ணினதை, என் ‘டாட்டர்’ தப்பா புரிஞ்சுகிட்டு, உங்களிடம் சொல்லிட்டான்னு’ சொல்லி சமாளிக்கறதுக்குள்ளே முழி பிதுங்கிப் போச்சு” என்றாள் என் மருமகள்.

அங்கே வந்த என் மனைவி மைதிலியோ, “ஏங்க… நம்ம பிள்ளை சொல்லாததையா பேத்தி சொல்லிட்டா” என்று சொல்லவும்,

என் மருமகளோ, “அப்பா…அப்பா… பிளீஸ், அந்த இன்ஸிடென்டை சொல்லுங்கப்பா” என்று என்னிடம் கெஞ்சினாள். நானும் சொல்ல ஆரம்பித்தேன்.

“அப்போ… உன் புருஷன் நாலாங்கிளாஸ் படிச்சுண்டிருந்தான். ஒருநாள் ஸ்கூல்லயிருந்த வந்தவன், நேரா மைதிலிகிட்டே போனான். “அம்மா… இன்னிக்கு, எங்க ஸ்கூல்ல எல்லா ஸ்டூடென்ட்ஸுக்கும் கண்ணு, காது, மூக்கு, வாய் எல்லா இடத்திலேயும் ‘டார்ச்லைட்’ அடிச்சுப் பார்த்து ‘செக் பண்ணினாங்க” என்றான்.

“அப்போ… இன்னிக்கு பாடமே நடத்தலையான்னு” மைதிலி கேட்டா.

“இல்லேம்மா… அந்த கடைசி ‘டெஸ்டு’ எடுக்கும்போதுதான், எங்க எல்லோருக்குமே, வெட்கமா இருந்தது” என்றான்.

“அப்படி என்னடா டெஸ்டு?” என்று மைதிலி கேட்டாள்.

“எங்க எல்லாரையும் ஒரு கிளாஸ் ரூமுக்கு அனுப்பி, டிராயரை அவுக்கச்சொல்லி, ‘அந்த’ இடத்தை செக் பண்ணினாம்மா” என்று சொன்னவன், “பாய்ஸை மட்டுமில்லேம்மா! கேர்ள்ஸையும் செக்பண்ணினாங்க” என்றான்.

“மைதிலி முறைத்துப் பார்க்கவும், ஒரு பேப்பரை கொண்டுவந்து, அப்பா இந்த ‘மெடிக்கல் ரிப்போர்ட்ல’ பேரன்ட்ஸோட சிக்னேச்சரை வாங்கிண்டு வரச் சொன்னாங்க” என்றான்.

“அன்னிக்கு எனக்கு சந்திராஷ்டமம்… என் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாம, ‘ஏண்டா… உன் மிஸ்ஸுக்கெல்லாம் மெடிக்கல் செக்கப் பண்ணலையா’ என்றேன். ‘தெரியல்லேப்பா…’ என்றவனிடம் என் ‘போறாத வேளைக்கு’, நானே ஒரு பதிலைச் சொல்லித்தொலைத்தேன்.

“அடுத்தநாள் மாலையில், ஸ்கூல் ஹெட்மாஸ்டர், என்னையும் மைதிலியையும் ஸ்கூலுக்கு வரச்சொல்லி வீட்டுக்கு ஆள் அனுப்பியிருந்தார். நாங்களும் போனோம். எங்களைப் பார்த்ததும் கோபத்தில் கத்தினார் ஹெட்மாஸ்டர்.

“பேரன்ட்ஸிடம் கையெழுத்து வாங்கின மெடிக்கல் டெஸ்டோட ரிப்போர்ட்டை குடுங்கன்னு” உங்க பையனோட கிளாஸ்ல மிஸ் கேட்டிருக்காங்க. அப்போ உங்க பையன் எழுந்து, “மிஸ் உங்களுக்கு ஹெட்மாஸ்டரே ‘எல்லா டெஸ்டும் பண்ணுவார்னு, என் அப்பா சொன்னாரே… டெஸ்ட் பண்ணிட்டாரான்னு கேட்டிருக்கான்” என்றார்.

“உங்க பையனோட டீ.சியை வாங்கிட்டுப் போயிடுங்க… இந்த வயசிலேயே அவன் இப்படி பேசறான்னா, இன்னும் பெரியவனானா எல்லாப் பையங்களையும் கெடுத்துடுவான்” என்றார் அந்த தலைமை ஆசிரியர்.

“அப்புறம் கெஞ்சிக் கூத்தாடி, நான் மன்னிப்பெல்லாம் கேட்டுதான் உன் புருஷனை, திரும்பவும் அதே ஸ்கூல்ல கன்டினியூ பண்ணவைச்சேன்” என்று சொல்லிவிட்டு, “நீங்க என்னடான்னா, என் பேத்தியை தப்பு சொல்லறீங்க” என்றேன் என் மருமகளிடம்.

“அப்பா… குழந்தை ரெடியாயிட்டா. அவளைக் கொண்டுபோய் ஸ்கூல்ல விட்டுட்டு வரேம்பா” என்று சொல்லிவிட்டு ஸ்கூலுக்கு கிளம்பினாள் என் மருமகள்.

‘சிட்-அவுட்டில்’ போட்டிருந்த ஈசிச்சேரில் சாய்ந்தபடியே, எனது எட்டு வயதில், ‘என்’ அம்மா-அப்பா பேசியதை அடுத்தவரிடம் ‘நான்’ சொன்னதால், ஏற்பட்ட விளைவுகளை, என் மனம் அசை போட்டது.

“அந்த வாயாடி சீனுமாமி, காலையிலேயே நம்மாத்துக்கு வந்து, உங்களாண்டை ‘நூறு ரூபாய்’ கைமாத்து கேட்கப்போறேன்னு, நேத்திக்கு சொல்லியிருந்தா” என்று என் அப்பாவிடம் சொன்னாள் என் அம்மா.

பொழுது விடிந்தும், தூக்கக் கலக்கத்தோடு எழுந்துவந்த என் காதில், அப்பா கோபமாக அம்மாவிடம் பேசியது மட்டும் தெளிவாக கேட்டது.

“அந்த சனியன் நம்ம ஆத்துக்கு வரலேன்னு, இங்கே யாரு அழுதா?. அந்த மூதேவிக்கு ஏற்கனவே நிறைய குடுத்து அழுதாச்சு. பழைய கடனே இன்னும் திருப்பித் தந்தபாடில்லே. சும்மாசும்மா நம்மாத்து வாசலை மிதிக்கறோமேன்னு அவளுக்கு வெட்கமில்லே. சோறுதான் திங்கறாளான்னு சந்தேகமா இருக்கு” என்று உறுமினார் அப்பா.

“இங்க பாருங்கோன்னா… நீங்க பாவம்பார்த்தாலும் நான் இன்னிக்கு விடமாட்டேன். இனிமே எங்காத்து வாசல்ல வந்து நிற்காதீங்கோன்னு சொல்லிடறேன்” என்ற என் அம்மா, அருகே இருந்த என்னைப்பார்த்து, “நீ ஏண்டா பெரியவா பேசும்போது, வாய்பார்த்துண்டு நிக்கறே? போய் பல்லை தேய்ச்சுட்டு வா” என்று என்னை விரட்டினாள்.

“காலையிலேயே அம்மாவும் அப்பாவும் யாரைத் திட்டிண்டிருக்கா” என்ற மண்டை குடைச்சலோடு, பல்தேய்க்கப் போனேன்.

அன்று காலையில் மணி பத்தாகியிருந்தது. “டேய்… நானும் அப்பாவும், மளிகைக்கடைக்கு போயிட்டுவரோம். வீட்டைத் திறந்து போட்டுட்டு, எங்கேயாவது விளையாடப்போகாதே. பத்து நிமிஷத்துக்குள்ளே வந்திடுவோம்” என்று சொல்லிவிட்டு அப்பாவோடு, கிளம்பினாள் அம்மா.

வீட்டு வராண்டாவில் பம்பரம் விட்டுக்கொண்டிருந்தேன். வாசலில் குதிரைவண்டி சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்தேன். என் அப்பாவின் மூத்த அக்கா, ‘கேரளாவிலிருந்து’ வந்து இறங்கி, எங்கள் வீட்டு வாசல் படிக்கட்டில் கால்வைத்தாள்.

“ஐயோ… அத்தே… ஓடிப்போயிடுங்கோ! நீங்க மூதேவியாம். ஏற்கனவே உங்களுக்கு நிறைய குடுத்து அழுதாச்சாம். இங்கே வரதுக்கு உங்களுக்கு வெட்கமில்லையாம். சோறுதான் திங்கறேளான்னு சந்தேகமா இருக்காம். இந்தமாதிரித்தான், காலையிலேயே அப்பாவும் அம்மாவும் உங்களைப் பத்தி பேசிண்டிருந்தா” என்று அபாய சங்குஊதி, என் அத்தையை ‘அலர்ட்’ ஆக்கினேன்.

“அப்படியெல்லாம் பேசமாட்டானே என் தம்பி” என்று சொன்னவள், எதற்கும் நேர்லேயே கேட்டுவிடுவோம் என்று நினைத்தாளோ என்னமோ, வராண்டாவை தாண்டி, உள்ளேபோய் ஹாலில் வெயிட் பண்ணினாள்.

அப்போது… அப்பாவுடன் வந்த என் அம்மாவோ, வாசலில் கிடந்த ஒரு ஜோடி ‘லேடீஸ் செருப்பை’ பார்த்தாள். “அந்த சனியன் வந்துதாடா?” என்று கேட்டாள். ஒன்றும் புரியாமல், “உள்ளேதான் போயிருக்கா” என்று சொன்னேன்.

“ஏண்டா கடங்காரா… அந்த மூதேவியை உள்ளே விடாதேன்னு, உங்கிட்டே சொல்லிட்டுதானே, போனோம். எங்க அவ…? இன்னிக்கு செருப்பாலயே அடிச்சாதான், இனிமே இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கமாட்டா” என்று கத்திக்கொண்டே ஆவேசத்துடன் படியேறினார் என் அப்பா.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே ஹாலிலிருந்து வெளியே வந்தாள் என் அத்தை. “என்னைப் பத்தி, நீங்க பேசிண்டதா குழந்தை சொன்னதெல்லாம் வாஸ்தவம்தான். இனிமே இந்த ஜென்மத்திலே உங்க மூஞ்சியிலே முழிக்கமாட்டேன்னு” வீரசபதம் செய்து விட்டு, கிளம்பிப்போனாள் என் அத்தை.

‘சீனுமாமிக்காக’ அம்மாவும் அப்பாவும் பேசிய பேச்சை காதில் வாங்கிக்கொண்டு, அதை ‘அத்தையிடம்’ மாற்றிச்சொல்லி, குடும்பத்தை பிரித்ததற்கு, என் முதுகில் விழுந்த அடிகளுக்கும் ஏற்பட்ட ரத்தக்காயங்களுக்கும் கணக்கே கிடையாது.

“இட்லி ரெடி… வரேளா” என்று மைதிலி அழைத்து, என்னை நிகழ்காலத்துக்கு மீட்டுவந்தாள்.

மஹா ஜனங்களே…! குழந்தைகள் பாவம். அவர்கள் காதால் கேட்டதை அப்படியே திருப்பிச்சொல்லும் ‘பேசும் கிளிகள்’. நீங்க அவர்களின் காதுபட, அனாவசியமா எதையாவது பேசினால், அதுவே, உங்களுக்கு நீங்களே ‘சுயமாக வைத்துக்கொள்ளும் சூன்யம்’.