தொடர்கள்
தொடர்கள்
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்

20211004203438918.jpeg

ரொம்ப மாசம் கழிச்சு பள்ளிக்கூடம் போகும் மாணவக் கண்மணிகள், ஆசிரியர்களை பேட்டி கண்டு எழுதவும் என்று டேபிளில் துண்டுச்சீட்டு வைத்திருந்தார் ஆசிரியர். சரி, என்று புறப்பட்டார் மிஸ்டர் ரீல்.

மூன்றாம் கிளாஸ் படிக்கும் அர்ஜுன்... ஆன்லைன் கிளாஸ்ல பார்க்கும்போது, கீதா மிஸ் அழகா இருந்தாங்க.. குரல் கூட நல்ல இருந்தது... நேர்ல பாக்கும்போது நல்லாவே இல்லை, குண்டா இருந்தாங்க... குரல் கூட கட்ட குரல்... போட்டோஷாப் பண்ணி ஆன்லைன் கிளாஸ்ல வந்தாங்க போல தெரியுது”.

ஆசிரியர் திருநாவுக்கரசு... “இந்தக் கொரோன காலத்தில் என்னை கொரோனா டச் பண்ணவே இல்லை. ஆனால், அஜீரணக் கோளாறு வந்து ரொம்ப அவஸ்தை ஆயிடுச்சு. ஏப்பம்... டிடிஎச் சவுண்ட் அளவுக்கு சத்தமா வந்து, பக்கத்து வீட்டு பாட்டி பயந்துபோய் எழுந்துட்டாங்க. இந்த விஷயம் போலீஸ் வர போச்சு... நிறைய டாக்டரை பார்த்தேன். எந்த மாத்திரையும் என்னை குணமாகக்ல. பள்ளிக்கூடம் போயிட்டு வந்த முதல் நாளே, இந்த அஜீரண கோளாறு சரியாயிடுச்சு, ஏப்பமும் இல்லை.”

டாக்டரிடம் கேட்டேன்... “இத்தனை நாள் வேலை செய்யாமல் உட்கார்ந்து சாப்பிட்டீங்க... இப்போ வேலை செஞ்சிட்டு சாப்பிடுறீங்க. அதுதான் உங்களுக்கு ட்ரீட்மெண்ட்” என்றார். ஒருவேளை... அது உண்மையாக இருக்குமோ.

பள்ளிக்கூட வாசலில்... கொய்யாப்பழம், வேர்க்கடலை, நாகப்பழம் விற்கும் நாகம்மா...

அப்பாடா... “இனிமே வருமானத்துக்கு பஞ்சமில்லை. பள்ளிக்கூட வாசலில் உட்கார்ந்து, பசங்கள பாக்குறதே ஒரு குஷி. போன வருஷத்துக்கு முன் வருஷம் நாலாங்கிளாஸ் படிக்கற பையன் சேகர், மாங்கா, வேர்க்கடலை வாங்கிய பாக்கி நாலு ரூபா, அவனை காணோம். வந்தா நாலு ரூபா கிடைக்கும். அட்டெண்டர் ஆறுமுகம் 11 ரூபாய் பாக்கி. சம்பளம் வாங்கித் தரேன்னு” சொல்லி இருக்கான்.

ஏழாம் கிளாஸ் டீச்சர் சந்திரகலா...

போன் எல்லாம் இருந்தாலும், “டீச்சர்களுக்குள்ள தொடர்பு எல்லை சரியாக இல்லை. போனில் எல்லா விஷயங்களும் பேச முடியாது. சில கிசுகிசுக்களை நேரில் சொன்னால் தான் சுவையாக இருக்கும். போன தீபாவளிக்கு நான் வாங்கின புடவைய வீடியோவில் காண்பித்தேன்... ஆனால், நேரில் பார்த்தால்தான் சரளா டீச்சருக்கு அல்சர் ஆகும். இதே புடவை எனக்கு எங்க நாத்தனார் வாங்கி தந்தாங்க, கலர் பிடிக்கலைன்னு சொல்லி வேலைக்காரிக்கு தந்துட்டேன் என்று சொல்லி டென்ஷன் ஆயிடுவாங்க”. இந்த சீன் எல்லாம் நேரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும்.

பள்ளிக்கூடம் திறந்ததில் சந்தோஷம் பாதி... வருத்தம் பாதி... சந்தோஷம்.. டீச்சர், பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அழைத்து வரும் அம்மாக்களிடம் 50 -100 கடன் வாங்கலாம். வருத்தம்... பழைய கடனை எப்ப தருவ என்று திருப்பிக் கேட்கிறார்கள். இந்தக் கடன் தள்ளுபடி எல்லாம் கைமாற்று கடனுக்கு கிடையாதா. முதல்வருக்கு ஒரு வாட்ஸ்அப் விட்டதான் சரியாகும்.

மாணவர்களின் அம்மா...

அப்பாடா... “ரொம்ப நிம்மதி... மூணு பசங்கள வீட்டில் வைச்சு கிட்டு நான் பட்ட பாடு, சொல்லிமாலாது. போன் என் கைக்கு வராது. ஆன்லைன் கிளாஸ் என்று சொல்வாங்க, எக்ஸாம்னு சொல்லுவாங்க.. ஓம் வொர்க் இருக்குன்னு சொல்லுவாங்க... கிட்ட போய் பார்த்தா... வீடியோ கேம் ஆடிக் கொண்டிருப்பார்கள். போன் இருந்தா நாலு வீட்டு தகவல் சுடசுட வரும். அது எல்லாம் ஒன்றரை வருஷமாக கட்டாகிவிட்டது. உங்களுக்கு தெரியுமா... மூணாவது தெரு சுமதி இப்ப அவ வீட்டுக்காரருடன் இல்லை. இது நடந்து ஆறு மாதம் ஆகிறது. எனக்கு தெரியவில்லை ஏன் சொல்லவில்லை என்று பார்வதியை கேட்டால்... நீ வாட்ஸ்அப் குரூப்ல இல்லையே.. எப்படி தெரியும்னு சொல்றா... இனிமே எல்லா செய்தியும் சுட சுட வந்து விடும். காரணம் போன் என்கிட்ட இப்ப வந்துடுச்சு..”

பலராமன் ஆசிரியர்...

“நீங்க சும்மா தானே இருக்கீங்கன்னு சொல்லி.. சொல்லியே என் மனைவி என்னை எல்லா வேலையும் வாங்கிட்டா. பாத்திரம் கூட நான்தான் தேய்த்து தந்தேன். வேலைகாரியைக் கூட நிறுத்திட்டா. இப்படி கொரோனா காலத்தில், நான் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது” என்று அவர் அழ ஆரம்பிக்க...

மிஸ்டர் ரீல் இந்தப் பேட்டியில் பல உண்மைகள் விஸ்வரூபம் எடுக்கும் போலிருக்கே என்று யோசித்தார்.