தொடர்கள்
கதை
எலேய் எந்திரிடா நேரமாச்சு.... - வினோத்குமார்

20211002164331548.jpg

எலேய் எந்திர்ரா நேரமாச்சு.

அப்பத்தா! போ அப்பத்தா தூக்கம் வருது.

எந்திர்ரா, எல்லாரும் குளிச்சாச்சு. நீ மட்டுந்தா இருக்க.

அப்பத்தா இன்னக்கி லீவு. என்ன தூங்க விடு.

எந்திருச்சு தலைக்கு எண்ண தேச்சு குளிடா.

திடீர்னு ஒரு ஆழமான அமைதி. திடுக்கிட்டு எழுந்தான் தீரண். கால சக்கரத்தில் சிக்கி இருபது ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தது. இன்று ஒரு அந்நிய நாட்டில், அவன், தன் மனைவி, பள்ளி படிக்கும் தன் மகனுடன், ஓர் உயரமான அடுக்குமாடி குடியிருப்பில்.

தீரணின் மனக் கண்முன்.... காலை ஐந்து மணிக்கு எழுந்து, தன் அப்பத்தா காயவெய்த்த வெள்ளைப்பூண்டு, மிளகு, சின்ன காய்ந்த மிளகாயோடு இருந்த சூடான நல்லெண்னையை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்றாக தேய்த்து, அரை நிர்வாணத்துடன், தன் தந்தை வாங்கி வைத்த பட்டாசுகளை தேடி எடுத்தாகிவிட்டது.

நடு வீட்டில் தன் சகோதரனுடன் சேர்ந்து, சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க... தாத்தா, ஆத்தா, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை ஆகியோர்க்கு நடுவில் சங்கு சக்கர வெடியை விட்டு அனைவரையும் பதற வைத்தது நினைவுக்கு வந்தது.

வீட்டு வாசலுக்கு சென்றால், இரவு முழுக்க சொந்தங்கள் சேர்ந்து போட்ட கோலத்தின் நடுவில், சொந்தங்கள் அனைவரும் புடைசூழ, பூந்தொட்டி, கம்பி மத்தாப்பு, சாட்டை வெடி, புஸ்வானம் என பல வெடிகள் வெடித்தக் கொண்டிருக்க (இன்னும் தேய்த்த எண்ணெய் தலையில் ஊற அரை நிர்வாணத்துடன்) அந்த குப்பை, கலர் பேப்பர்களாக, கோலத்தின் வண்ணத்தை மேலும் வண்ணமயமாக்கியிருந்தது.

சூரிய வெளிச்சம் தெரிய ஆரம்பிக்க, அவசரமாக பாத்ரூமிற்குள் அரைநிர்வாணமாக இருப்பது உனர்ந்து ஓடி அரப்பு தேய்து குளித்துவிட்டு, வாங்கி வைத்த புத்தாடைகளை அணியும் போது, எங்கோ வெடித்த பட்டாசு சத்தத்தால் ஈர்க்கப்பட்டு, சரஸ்வதி வெடி, அணுகுண்டு போன்ற போட்டிக்கு சத்தம் எழுப்பும் வெடியை தேடி எடுத்து, “டேய் பாத்து வெடிடா” என்ற தந்தையின் சொல்லுக்கு. “ம்ம்ம்ம்” என்ற பதில் சொன்னவாரே, நாள் முழுக்க பட்டாசு வெடித்து, கடைசியாக சட்டையில் பட்டாசு பட்டு ஒரு சிறு ஓட்டையுடன், வீடு திரும்பியது வரை, தீரணின் மணக்கண்ணில் சில வினாடிகளில் ஓடி முடிந்தது.

இன்று கடந்து வந்த பாதை தந்த அறிவின் குழப்ப சிந்தனையில், தீபாவளி கொண்டாட்டம் இயற்கையை மேலும் மாசுபடுத்துமோ?, எண்ணெய் தேய்த்து குளிக்க நாம் என்ன நரகாசுரணின் பங்காளியா?, ராமன் வனவாசம் முடிந்து வீட்டுக்கு திரும்பியதை ஒளிர் மிகு நாளாக கொண்டாடலாமா வேண்டாமா? என பல கேள்விகள் இருந்தாலும், வாங்கிய ஒரு சின்ன கம்பி மத்தாப்பு பெட்டியையும், புத்தாடையையும் பார்த்த தீரணுக்கு, தன் அப்பத்தா சத்தம் அசரீரியாக உள்ளே கேட்க...

தன் மகனை பார்த்து சத்தமாக சொன்னான்...“எலேய் எந்திர்ரா நேரமாச்சு”