தொடர்கள்
கவிதை
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்... - 3 - இரா.சு.இராசன்

புறநானூறு - 5

20211003165939714.jpeg

பாடியவர் – நரிவெரூஉத்தலையார், பாடப்பட்டோன் – சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை,

திணை–பாடாண்,

துறை – செவியறிவுறூஉ, பொருண் மொழிக் காஞ்சி

பாடல் பின்னணி: தன்னைக் காண்போருக்கு நலம் விளைவிக்கும் தோற்றச் சிறப்புமிக்க கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டு உடல் நலம் பெற்ற நரிவெரூஉத்தலையார், அவனது தோற்றப் பொலிவை வியந்து, தனக்குச் செய்தது போலப் பிறர்க்கும் இன்பம் செய்யும் இயல்பு குன்றாதிருக்க, தீய எண்ணம் உள்ளவர்களோடு சேராமல் ஆளும் நாட்டினைக் குழந்தையைப் போல் பாதுகாக்குமாறு அறிவுறுத்தி இயற்றிய பாடல் இது.

புறநானுறு 5 மூலம்

எருமை அன்ன கருங்கல் இடைதோறும்
ஆனின் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்,
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி,
அளிதோ தானே அது பெறல் அருங்குரைத்தே.

பொருளுரை: எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே!

நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக! அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உனது நாட்டை குழந்தையை வளர்ப்பவர்களைப் போல் பாதுகாத்து அளிப்பாயாக. அளிக்கத் தக்கது அக்காவல். அத்தகைய காக்கும் வாய்ப்பைப் பெறுதல் அரியதாகும்.

எளிய கவிதையாக
புறம் ஐந்தை
எவர்க்கும் விளக்கிடும்
என் முயற்சி.

*******************************

காரெருமைக் கூட்டம் போல்
கறுத்துப் பரந்திட்ட கற்
பரப்பின் மீதலைந்து
ஊருமொரு ஆவினங்கள்
கூட்டம் போல் யானை
நிரைகள் நிறைந்தங்கு
சேருமொரு செழுங்காடு
ஆளுகின்ற தலைவன் நீ
அறிந்திட ஒன்றுரைப்பேன்
பாருலகு போற்றுமொரு
வளமும் சிறப்புமுடைக்
கொற்றவனே என்றும்

அருளும் அன்பும் தன்
நெஞ்சகத்தே கொள்
ளாமல் கீழ்மை பேணி
ஒரு நரகம் நாடி வாழும்
தீயவரொடென்னாளும்
சேர்ந்திடாதொழுகி
சீருடைய உனது நாட்டு
மக்கள் தமை செல்வக்
குழந்தை தம்மை
ஆருயிராய்க் காக்கும்
பெற்றோர் போல்
அளித்துக்காத்தல்
பெரியதொரு கடமை
அரிய தொரு வாய்ப்
பென்றும் அறிந்திடுக.

(அடுத்த இதழில் இன்னும் ஒரு புறப்பாடல் எளிய நடைக் கவிதையாக புறப்பட்டு வரும்).