தொடர்கள்
தொடர்கள்
திரை நாயகிகள் 21 தி. குலசேகர்

சட்டகத்திற்குள் அடைபடாத பறவை

20211002153137518.jpg

‘பறவை ஒரு நாளும் கான்கிரீட் வீடு கட்டுவதில்லை. அதற்கு வியர்ப்பதுமில்லை. அதற்கு விளிம்பற்ற திறந்தவெளி வானமே வீடு. காற்று மண்டலமே விசிறி. கிளைகளில் அசைந்தாடுவதே ஊஞ்சல். அவற்றின் உற்சாக ஒலிகளே துள்ளல் இசை. கொண்டாட்டங்களே திருவிழா. இயற்கையே அதன் தாரக மந்திரம். வனமே அதன் குறியீடு’


வஜ்டா. இது சவுதி அரேபியாவின் முதல் முழுநீளப்படம். ஹைஃபா என்கிற பெண் இயக்குநர் இயக்கி இருக்கிறார். வேட் என்கிற பதின்பருவ பெண் கதாநாயகியாக, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அத்தனை இயல்பு.

20211002153548751.jpg

அரை வரி கதை. அதில் வருகிற அந்த கிளைமாக்ஸ் பற்றி எத்தனை பக்கம் வேண்டுமானாலும் எழுதிக் கொண்டே இருக்கலாம். அதற்கு பதிலாக ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால், கவிதை.

இந்தப் படத்தின் இயக்குநர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. வஜ்டா கதை நாயகி. பள்ளியில் பிளஸ் டூ படிக்கிறாள். அவள் ஒரு பாடும் பறவை. அவளுக்கு பாடல் என்றால் உயிர். நதி என்றால் உயிர். வானம் என்றால் உயிர். கடல் என்றால் உயிர். வனம் என்றால் உயிர். இசை என்றால் உயிர்.

சவுதி அரேபியா, மதச் சட்டங்களுக்கு முக்கியத்துவம் தருகிற ஒரு நாடு. அங்கே இசை ஹராம். வஜ்டா அதையெல்லாம் சட்டை செய்வதில்லை. எத்தனை சிங்கங்கள் வாழ்கிற காட்டில், சாமர்த்தியமாக மான்களும் அங்கே வாழ்கின்றன. பொந்துகளில் பூனைகளை சமாளித்து வாழ்வதற்கு சுண்டெலிக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது.

அவள் எப்படியோ அந்த கடைக்காரரை தாஜா பிடித்து வைத்துக் கொண்டு, அவளுக்கு பிடித்த கேசட்டுகள் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் ஹெட் செட்டில் போட்டு கேட்காமல் இருக்க மாட்டாள். இயல்பானவள். துறுதுறு. அவள் அம்மா, அப்பா அவ்வளவு தான்.

20211002153614284.jpg

அவளுக்கு ஒரு தோழன் இருக்கிறான். அவனுக்கு பத்து பனிரெண்டு வயது இருக்கலாம். பொடியன். அது ஒரு நட்பு அல்லது பப்பி லவ். அவன் அவளை விட ஐந்தாறு வயது அதிகம் உள்ள வஜ்டாவிடம் ஒருமுறை வெள்ளந்தியாக சொல்வான். நாம சின்னப்புள்ளையா இருக்கறப்போ, பெருசானதும் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னன்ல.. அதனால தான் என்கிட்ட இருக்கிறதெல்லாம் உன்கிட்ட குடுக்கறேன் என்பான். அவள் அலட்டிக்கொள்ளாமல் சிறுபுன்னனகையோடு கடந்து செல்வாள். அதிசயம் என்னவென்றால், அவளுக்கு இந்த சமூகத்தை அலட்டிக்கொள்ளாமல் எப்படி எதிர்கொள்வது என்கிற சூட்சுமம் இயல்பிலேயே தெரிந்திருப்பது தான்.

அவளின் பிரதான கனவு. ஒரு சைக்கிள் வாங்கி ஆசை தீர வேகவேகமாக ஓட்ட வேண்டும். ஆனால் அங்கே பெண்கள் சைக்கிள் பொதுவாக ஓட்டுவதில்லை. அம்மாவிடம் சைக்கிள் வாங்கி தரச் சொல்வாள். அம்மா சைக்கிள் ஓட்டினால் அவங்களுக்கு குழந்தை பிறக்காது என்பாள். இத்தனைக்கும் அவள் அம்மா நவீனமாக உடை உடுத்துபவள் தான். குரான் ஓதும்போது மட்டும் சிவப்பு நிறத்தில் முகம் மட்டும் தெரிகிறாற்போல் ஒரு பர்தா அணிவாள். உடனே வஜ்டா, நீ சைக்கிள் ஓட்டிட்டு தான இருந்தெ? உனக்கு நான் பிறந்திருக்கேனே? என்பாள். அவளிடம் யாரும் பேசி ஜெயிக்க முடியாது. அவள் அமைதியானவள். அளவாக அளந்துஅளந்து தான் பேசுவாள். அவள் வாய் பேசுவதை எல்லாம் அதற்கு முன்பாக அவளின் கண்கள் பேசி விடும். ரத்தின சுருக்கமாக இருக்கும். அதிபுத்திசாலி. சமயோசிதசாலி.

அவளின் தோழன் அந்த குட்டி பையனிடம் சைக்கிள் இருக்கும். அவன் அவள் எது கேட்டாலும் செய்வான். அவனுக்கு பதினான்கு வயதிருக்கலாம். அவனை விட அவள் கொஞ்சம் பெரியவள். அவன் சைக்கிளை வாங்கி அவள் தானாகவே விழுந்து எழுந்து ஓட்ட பழகிக் கொள்கிறாள்.

கதை நெடுக மதவாத நாட்டில் எப்படி இருக்குமோ, அப்படி அங்கே இசுலாமிய சட்டங்கள் கடுமையாக குழந்தை பருவத்திலிருந்தே திணிக்கப்படுவதை அணுவணுவாக காண்பிக்கிறார்கள். எதையும் சொல்லாமல் சொல்லி செல்கிறது இதன் திரைக்கதையில். எந்த இடத்திலும் விளக்கங்களோ, விவாதங்களோ, அங்கலாய்ப்புகளோ இருக்காது. ஆனாலும், குரானை எப்படி நினைவு தெரிந்த நாளில் இருந்து பெண்ணிற்குள் அந்த சமூகம் திணிக்கிறது என்பதை நுட்பமாக இதன் இயக்குநர் உணர்த்தியிருக்கிறார்.

வஜ்டாவிற்கு குரான் பிடிபடுவதில்லை. அது அந்நியமாகவே இருக்கிறது. அவளை வெளியே செல்லும்போது பர்தா போடச் சொன்னால், தலையில் ஸ்கார்ஃப் சுற்றிக்கொள்ள சொன்னால் அதை ஒழுங்காக அவள் செய்வதில்லை. அதேசமயம் ஊருக்குள், பள்ளிக்குள் செல்கிறபோது சமத்தாக ஊர் சொல்கிறபடி அதனை சரியாய் அணிந்து கொள்வாள். குரானில் கடவுள் எல்லாவற்றையும் செய்வார் என்று படிக்கையில், எனக்கேன் சைக்கிள் அவரால் வாங்கி தர முடியவில்லை என்று தோன்றும். அவளுக்கு குரானில் சில விசயங்கள் ஏற்புடையதாக இருக்கும். பல விசயங்கள் அதுவும் பெண்களை பற்றி சொல்கிற விசயங்களில் அவளுக்கு ஏராளமான கேள்விகள் இருக்கும். அதனால் அவள் அதை புனிதப்படுத்துவதில்லை. புரியாத விசயங்களை அவள் அலட்டிக்கொள்ளாமல் கடந்து செல்வதே அவளின் சுபாவம்.

20211002153644835.jpg

எந்த ஒரு பெண்ணுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருப்பதற்கு அங்கு வாய்ப்பில்லை. பள்ளிப்படிப்பு முடிப்பதற்குள் பெரும்பாலும் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். பள்ளியில் குதிரைக்கு லகான் போட்டு விட்டது மாதிரி அதை அப்படியே பின்பற்றும்படி திரும்பதிரும்ப கண்டிப்போடு போதிக்கிறார்கள். ஆண் பிள்ளைகளோடு சேர்ந்து பழக அனுமதிக்க மறுக்கிறார்கள். ஆண்கள் செய்வதையெல்லாம் பெண்கள் செய்ய முடியாது என்று பிரலாபிக்கிறார்கள்.

ஒரு தோழி ஒரு ஃபோட்டோ காட்டி, அடுத்த மாதம் தன்னை கல்யாணம் செய்து கொள்ள போகிற நபர் என்று காட்டுகிறாள். அவள் வயதுக்கு வந்து ஒரு சில வருடங்கள் கூட ஆகி இருக்காது.

வஜ்டா அந்த மாதிரியான சடங்கு சம்பிரதாயங்களை எதிர்க்கவும் மாட்டாள். இணங்கவும் மாட்டாள். அவளுக்கு சரியென படுகிறதை செய்வாள். படிப்பில் படுசுட்டி. அவளுக்கு எதுவாக இருந்தாலும், அதன் வேர்க்காரணியை கண்டுபிடித்து விட தெரியும். அதனால் கணித வகுப்பில் ஆசிரியை சொல்லி தருகிறதை தாண்டி அவர் வேறு வழியில் அந்த ஆசிரியையைவிட வேகமாக அந்த கணிதத்தை செய்து முடித்து விடுவாள். வாழ்க்கையை ஒரு இறகை போல, லெகுவாக, லேசாக வாழ்ந்து விட துடிப்பவள்.

அங்கே பெண்கள் பள்ளியும், ஆண்கள் பள்ளியும் அடுத்தடுத்து இருக்கிறது. அவள் படிப்பது பெண்கள் பள்ளி. அங்கே எல்லோரும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் குரான் வகுப்பிற்கு செல்லலாம். இவள் அதில் கலந்து கொள்வதில்லை. இந்த தருணத்தில் குரான் படித்து அது சார்ந்து நடக்கிற போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று அறிவிக்கிறார்கள்.

அடுத்த நாள் வஜ்டா குரான் வகுப்பில் போய் சேருகிறாள். முதலில் மிகவும் தடுமாறுகிறாள். அவள் ஒன்றை நினைத்து விட்டால் அதை எப்படியாவது அடைந்து விடக் கூடியவள்.

அதற்கு அவள் ஒரு உபாயம் செய்கிறாள். அவள் கேசட், சிடி வாங்குகிற ஒரு பெரியவர் கடைக்கு சென்று பேரம் பேசி குரான் சிடி ஒன்று வாங்குகிறாள். அது அதிலுள்ள முக்கியமான விசயங்களை அப்ஜக்டிவ் டைப் வடிவில் எளிமையாய் கற்றுக் கொடுக்கும். அதை போட்டுப்போட்டு ஜாய் ஸ்டிக் வைத்து வீடியோ கேம் விளையாடுவது போல விளையாடி அதன் நுட்பத்தை கண்டுபிடித்து, குறுக்கு வழியில் குரானில் என்னென்ன கேள்விகள் கேட்க முடியும் என்பதை கண்டறிந்து, அதில் பக்காவாக தன்னை தயார் படுத்திக் கொள்கிறாள்.

போட்டி நாளன்று வஜ்டா டான் டான் என பதில் சொல்லி, முதல் பரிசை வெல்கிறாள். குரான் டீச்சர் இந்த பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டதும், அவள் சைக்கிள் வாங்கி ஓட்டப் போகிறேன் என்கிறாள். உடனே அடிப்படைவாதத்தில் ஊறிப்போன அந்த டீச்சர் அதிர்ந்து போகிறாள். அப்படியென்றால் அந்த பணத்தை உனக்கு தர முடியாது. அதை ரகசியமாய் பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக அனுப்பி வைத்து விடுகிறேன் என்கிறார். உங்களுக்கு இருக்கிற ரகசிய காதலரை மாதிரியா என்று வஜ்டா கேட்க, அந்த குரான் ஆசிரியை உறைந்து போகிறாள். அவள் அதை கவனிக்காதது போல கடந்து போகிறாள். பரிசு பட்டயத்தை மட்டும் கையில் கொடுத்து அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

20211002153712951.jpg

அவள் தன் அம்மாவிடம் வந்து நடந்ததை எல்லாம் சொல்கிறாள். அப்படியே என்னை மாதிரியே வந்திருக்கிறாய் என்று சொல்கிற அம்மா அவளை வீட்டின் பின்பக்கம் அழைத்து செல்கிறாள். எப்போதும் சமூக அச்சத்தின் காரணமாக மகளை கடிந்து கொள்ளும் அந்த தாய், அன்று அப்படி எதுவும் கடிந்து கொள்ளவில்லை. அவள் அழைத்துக்கொண்டு போய் அந்த வராண்டா விளக்கை போடுகிறாள். அங்கே ஏற்கனவே புதிதாய் அவளுக்காக வாங்கி வைத்திருக்கிற சைக்கிள் இருக்கிறது. வஜ்டா அம்மாவை கட்டிக் கொள்கிறாள்.

மறுநாள் பக்கத்து வீட்டு பொடியனோடு சைக்கிள் விடுகிறாள். முடிஞ்சா என்னை முந்தி பாருடா என்று சொன்னபடி, சரசரவென அவனை முந்திக்கொண்டு விடுகிறாள். அவன் எத்தனை தான் விரட்டியும் அவளை முந்த முடியவில்லை. அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியை அதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. ஒரு இடத்தில் போய் நிறுத்தி, மூச்சிறைக்க பின்னால் வந்து கொண்டிருக்கும் தோழன் தன்னோடு வந்து சேர்ந்து கொள்ளட்டும் என்று அவள் மலர்ச்சியுடன் காத்திருக்கிறதோடு, இந்த கதை நிறைவடைகிறது.

பேச்சுவாக்கில் மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்பார்கள். உண்மையில் நம்பிக்கை என்றால் என்ன? அது அபாரமானது. அசைக்க முடியாதது. அது நம்மில் இருந்து உருவெடுக்கிற படைப்பு சக்தி. அது சுயமானது. அது நமதான தேடலில் கண்டடைகிற உள்ளுணர்வு. அது நமதான பிரபஞ்ச சமிக்ஞை. நமதான பிரபஞ்ச மொழி. காலவெளி கடந்த டெலிபதி.

மதநம்பிக்கை என்பது உருவாவதல்ல. உருவாக்கப்படுவது. ஊட்டப்படுவது. திணிக்கப்படுவது என்பதை எந்த வியாக்கியானங்களும் இல்லாமல் இயல்பிலேயே வஜ்டா உணர்ந்திருக்கிறாள். அவளால் மதசட்டகங்களுக்குள் தன் பறத்தலை அடைத்துக் கொள்ள முடியவில்லை. அப்படி இந்தச் சமூகம் வழிகாட்டுகிற போதெல்லாம் அவளுக்கு தங்ககூண்டில் சிறைப்பட்ட வலசை பறவையாய் மூச்சு முட்டிக் கொண்டு வருகிறது. அவள் அதற்கான மாற்று உபாயத்தை யாரிடமும் எதிர்பார்ப்பதில்லை. அவள் இயல்பிலேயே யாரையும் எதற்காகவும் சார்ந்திருப்பதில்லை. அவள் ஒரு சுயம்பு. அவள் அவளின் தேவைகளை அவளே தீர்மானிக்கிறாள். அதை அடைவதற்கான வழிகளையும் அவளே அவளுக்குள்ளிருந்தே கண்டடைகிறாள். அந்த முயற்சிகளில் ஏற்படுகிற சிடுக்குகளை அவளே அவளுக்கேயான வழிகளில் அவிழ்க்கவும் யத்தனிக்கிறாள். அப்படியாக அவள் வழிநெடுக இயங்குகிறாள். அவளின் பயணம் எப்போதும் நதியாய் பயணிக்கிறது. அந்தப் பயணம் அவளை அவளின் உச்சபட்ட இலக்கு நோக்கி இயல்பாகவே அழைத்தும் செல்கிறது.

மதச்சட்டகத்திற்குள் அடைபடாத பறவையாக இருக்கிறாள். அவளின் அம்மாவும் அப்படித் தான் இருந்திருக்கிறாள். அதனால் தான் அவள் தன்னுடைய வீட்டிற்குள் நவீனமயமான, நேர்த்தியான உடைகளை அணிகிறாள். ஊருக்காக வெளியில் வருகிற போது மட்டும் சிவப்பு வண்ணத்திலான முகம் மறைக்காத பர்தா அணிகிறாள். வஜ்டா அதையும் தாண்டுகிறாள். அவள் தாண்ட வேண்டும் என்று எதையும் தாண்டுவதில்லை. அவளின் இயல்பே அது தான். பறவையின் இயல்பு எல்லையற்ற நீலவானத்தில் பறப்பது தான். அப்படித்தான் அவள் பறந்து திரிகிறாள்.

வஜ்டா என்கிற அந்த பருவத்தின் வாசலில் அடியெடுத்து வைக்கிற மாசற்ற, விலங்குகளற்ற, விளிம்பற்ற இளம்பெண்ணும் ஒரு மழை தான்.. ஒரு வனம் தான்.. ஒரு நதி தான்.. ஒரு அருவி தான்.. ஒரு கடல் தான்.. ஒரு வானம் தான்.. ஒரு வலசை பறவை தான்..


20211002153747984.jpg