தொடர்கள்
பொது
ஒரு கிராமத்து தீபாவளி !! ஃப்ளாஷ்பேக் - தி.குலசேகர்

20211003065641314.png

என்னுடைய பள்ளி வாழ்க்கை முழுவதும் பசுமை சூழ்ந்த பட்டிவீரன்பட்டி என்கிற கிராமத்தில் நிறைந்திருந்தது. என்னுடைய படைப்புகளில் சுனை அது. அங்கே இருந்த காலங்களில் மிகுந்த மகிழ்ச்சியை உணர்ந்திருக்கிறேன். இத்தனைக்கும் லோயர் மிடில் கிளாஸ் பொருளாதார நிலையில் தான் அப்போது எங்கள் குடும்பம் இருந்தது. பொதுவாக கிராமத்தில் செருப்பு அணிவதெல்லாம் அப்போது பழக்கத்தில் இல்லை. அது பணக்காரர்கள் மட்டுமே செய்கிற காரியம். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த என்னை போன்றவர்கள் எல்லாம் கல்லூரி படிப்பின் போது தான், முதன்முதலில் செருப்பு அணிகிற அனுபவத்தை பெற்றேன். அதுவரை வெறும் கால் தான். அப்படி வெறும் காலோடு தான் சுட்டெரிக்கும் வெயிலில், விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தில் காப்பி குச்சியை செதுக்கி, கவர் பந்து வைத்து, ஹாக்கி விளையாடுவோம். அப்போதெல்லாம் வெயிலை விட, விளையாட்டில் உள்ள வேகம் எங்களை மெய் மறக்க செய்து விடும்.

20211003065919258.jpg

நினைத்த நாளில் நினைத்த மாதிரி புத்தாடைகள் வாங்குகிற இப்போதைய கலாச்சாரம், கிராமங்களில் அப்போது இல்லவே இல்லை. தீபாவளி, பொங்கல் இந்த இரண்டு பண்டிகைகளுக்கு தான் புத்தாடைகள். அதுவும் ரெடிமேட் என்பது அப்போதெல்லாம் ஆச்சர்யமான ஒரு விசயம். ஒருமுறை மார்க்கெட் தெருவில் உள்ள ஒருவர் ரெடிமேட் சட்டை விற்கிறார் என்று பதினைந்து ரூபாய்க்கு அம்மா டெர்லீனில் ஒரு சட்டை எடுத்துக் கொடுத்த ஞாபகம் இருக்கிறது. அது ஒன்று தான் ரெடிமேட் ஞாபகம். மற்றபடி சுப்பிரமணி டெய்லர் கடையில் அளவெடுத்து தைத்து வாங்கி போட்டுக் கொள்வது தான் வழக்கம். அவர் அங்கே மிகவும் பிரபலம். அதனால் சமயங்களில் டவுசர், சட்டை தைத்து தருவதில் இழுபறி நீடிக்கும். தீபாவளி துவங்குவதற்குள் தந்து விடுவாரா என்று சஸ்பென்ஸ் கொடுத்து, நகம் கடிக்க வைத்து தான் ஒவ்வொரு முறையும் தருவார். சமயங்களில் காலை வரை கூட காத்திருந்து, நம்பிக்கையிழக்கிற நேரத்தில் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாய் பிரமாதமாக தைத்து தருவார். அப்போது பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவனின் சந்தோஷத்தை போல அப்படியொரு சந்தோஷத்தை உணர்ந்திருக்கிறேன்.

தீபாவளி அன்று அப்பா ஒவ்வொருவரையாக அழைத்து, மனைக்கட்டையில் உட்கார வைத்து, உடம்பு முழுக்க நல்லெண்ணெய் தேய்த்து விடுவார். தொப்புளில் எண்ணெய் விட்டு தேய்க்கிற போது அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்து விடும். அப்போது தான் அவர் விரலை இன்னும் உள்ளே விட்டு ஆட்டி சிரிப்பின் வேகத்தை அதிகப்படுத்துவார். கண்ணில் எல்லாம் எண்ணெய் விடுவார். பிறகு அரைமணி நேரம் வெயிலாற விட்டுவிட்டு, சீயக்காய் தேய்த்து குளிப்போம். அப்போதெல்லாம் சாம்பூ என்கிற வார்த்தையை கிராமம் அறிந்திருக்கவில்லை. அதிகபட்சம் சீயக்காய் சோப்பு என்ற ஒரு சோப்பு வரும். அது பார்க்க பழைய லைஃப்பாய் சோப்பு போல இருக்கும். அரக்கு நிற கலரில். அதை தலைக்கும் தேய்த்து குளிக்கலாம். அப்படி குளித்து விட்டு, பேக் பாக்கெட் வைத்து தைத்து தந்த டவுசரையும், உள்பாக்கெட் வைத்து தைத்த சட்டையையும், மஞ்சளை காலரில் தடவியபின் போட்டுக் கொள்வோம். அந்த புதிய துணியின் வாசம் இனம்புரியாத பரவசத்தை தட்டி எழுப்பும். பிற்பாடு இனிப்பு பலகாரங்களை ஒரு பிடி பிடிப்போம்.

அதன் பிற்பாடு தான், பட்டாசு விடும் நேரம் துவங்கும். அப்பா அனைவருக்கும் ஆளுக்கு ஒரு பாக்கெட் ஓலை வெடி வாங்கி தருவார். அதில் முக்கோண வடிவில் ஓலையால் செய்த பட்டாசு நூறு இருக்கும். அதை பெருக்குமார் குச்சியில் செருகி, மெழுகுதிரி ஏற்றி திரியை தொட்டுதொட்டு வெடிப்போம். டொப்..டொப் என பயந்து போய் பலகீனமாய் சத்தம் எழுப்பும்.

20211003070132379.jpg

அன்று மதியம் மாட்னி ஷோ சினிமாவிற்கு, அய்யம்பாளையம் அழகேசன் திரையரங்கு நோக்கி செல்வோம். அந்த தியேட்டர் எங்கள் ஊரிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருந்தது. அதற்கு நானும், என் அண்ணணும் வெறுங்காலோடு உற்சாகத்தோடு நடந்து செல்வோம். தார் ரோடு அந்த வெயிலின் வெம்மை தாங்காமல் துடிதுடித்து உருகிக்கொண்டிருக்கும். எங்களுக்கு லேசாக பாதங்கள் தகிக்க ஆரம்பிக்கும். ஆனாலும், படம் பார்க்க போகிற ஆர்வம், அந்த பொசுங்கலை சட்டை பண்ண விடாது. அண்ணன் ஒரு உபாயம் செய்வான். சாலையின் இருமருங்கிலும் தென்னை மரங்கள் வரிசைகட்டி நிற்கும். அதிலிருந்து உதிர்ந்து கிடக்கும் தென்னம்பாளையை எடுத்து வந்து அதில் என்னை ஏறி நிற்கச்சொல்லிவிட்டு, அதன் பட்டையை பிடித்து, மனித ரிக்சா போல இழுத்துக்கொண்டு ஓடுவான். ஒரு கட்டத்தில் அவனுக்கு மூச்சு முட்ட ஆரம்பித்து விடும். மனசு கேட்காது.

இறங்கி இரண்டு பேரும் உச்சு வெயிலில், வேகமாக ஓட ஆரம்பிப்போம். எங்கே நிழல் இருக்கிறதோ அங்கே சற்றே ஒதுங்குவோம். சில நொடிகள் இளைப்பாறுகிறதில், பாதங்கள் சகஜநிலைக்கு வந்திருக்கும். உடனே அடுத்த நிழலை நோக்கி மறுபடி ஓட்டம். இப்படியாக ஓடிப்போய் பார்த்த படங்கள் இப்போதும் நினைவில் அப்படியே உயிர்த்திருக்கின்றன.

இந்நாட்களில் நினைத்த நேரம் இருபத்திநான்கு மணி நேரமும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பார்க்கிற டெக்னாலஜி வளர்ந்து விட்டது. ஆனாலும், அன்றைக்கு படம் பார்க்க செல்கிறபோது கிடைத்த அந்த பரவசத்தை, இந்நாட்களில் ஒருபோதும் உணர்ந்ததில்லை.

மாலையில் நண்பன் குணசீலன் வீட்டிற்கு செல்வேன். அவன் வீட்டில் விதவிதமாக பட்டாசு வெடிப்பார்கள். கிருஷ்ண சக்கரம், சீனிவெடி, ரிவால்வர் துப்பாக்கி, பாம்பு மாத்திரை, சாட்டை, அணுகுண்டு என்று விதவிதமாக அங்கே வெடிப்பார்கள். அவர்கள் வீட்டில் போய் அத்தனையையும் வேடிக்கை பார்ப்பேன். வீடிருப்பவருக்கு ஒரு வீடு. வீடில்லாதவர்களுக்கு உலகமே வீடு என்பது போல, வீடு வீடாக போய் அவர்கள் விடுகிற வெடிகளை காதை பொத்திக்கொண்டு ரசிக்கிற போது, நானே அத்தனையையும் வெடிக்கிறதாய் உணர்வு ஏற்படும்.

அது சுவைகளின் உச்சம். அன்று ஒரு நாள் தான் கிடைக்கும், அப்படியாக உச்சம் தொடுகிற வாய்ப்பு. அதனால் கிடைத்த பட்சணம் எல்லாம் உள்ளே சென்றிருக்கும். இரவு கணக்கில்லாமல் இனிப்பு பலகாரங்கள் வைத்து மேய்ந்ததின் நிமித்தம் அரை மயக்கத்தில் புரள ஆரம்பிக்க, குடும்ப வைத்தியர் வந்து பரிசோதித்து விட்டு, மருந்து தந்து விட்டு செல்வார். மறுநாள் எழுந்ததும் இந்த இனிய அனுபவத்திற்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே என்று ஏக்கமாக இருக்கும்.

இப்போது சென்னை வாசம். கடந்த இருபத்தைந்து வருடங்களாக இங்கே தான் ஜாகை. ஒரு முறை கூட அப்படியொரு தீபாவளியை அனுபவித்ததில்லை. அதே புத்தாடை தான். அதே இனிப்பு பலகாரங்கள் தான். போதாதற்கு உறவுக்காரர் பட்டாசு கடை வைத்திருப்பதால், ஒரு மூட்டை பட்டாசு வருடாவருடம் வீடு தேடி வந்து விடும். ஆனாலும், அதை வீட்டில் உள்ளவர்கள் வெடிக்கையில் வாசலில் வந்து பார்க்கிற ஈடுபாடு கூட இப்போது இல்லை. காதை பொத்திக்கொண்டு, ஜன்னலை அடைத்துக்கொண்டு, இன்டர்நெட்டில் எதையாவது படித்தபடி இருந்து விடுகிறது மனது.

படங்கள் பார்க்கிற போது, அந்த மாட்னி ஷோ தந்த பரவசத்தை எந்த படமும் தருவதில்லை. அந்த அனுபவமே வேறு. கரன்ட் திடீர் திடீரென போய் விடும். உடனே பியூஸ் போன பல்ப் போல மனசும் இருண்டு போகும். வெக்கையில் கசகசத்திருப்பதை சட்டை செய்யாமல் காத்திருப்போம். எதிர்பார்த்திராத தருணத்தில் மின்சாரம் வர, அப்படியொரு பரவசம் உள்ளுக்குள் வந்து தொற்றிக் கொள்ளும். இப்போது மின்தடை எப்போதாவது வந்தாலும், இன்வெர்ட்டர் லைனில் வந்து விட, இன்டர்நெட் தடையில்லாமல் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அந்த பரவசம் மட்டும் மிஸ்ஸிங்.

இனிப்பில் கூட அளவில்லாமல் திகட்டதிகட்ட சாப்பிட்ட அந்த நாட்களை போல ஈடுபாடு ஏற்படுவதில்லை. இரண்டு அல்லது மூன்றோடு போதும் என்று தோன்றி விடுகிறது. அது எந்த பட்சணமாக இருந்தாலும், அந்த நாட்களில் இனித்த அளவிற்கு இனிப்பதேயில்லை.

புத்தாடைகள் உடுத்துகிறதில் அப்போது ஏற்பட்ட பரவசம் இப்போது விதவிதமாக வாங்கி உடுத்துகிற இந்த நாட்களில் ஏனோ வருவதில்லை. சமயங்களில் வாங்கிய புத்தாடைகளை அணிவது கூட இல்லை. அதிலெல்லாம் இப்போது ஆர்வம் இல்லை. காரணம் எப்போது வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம், உடுத்திக் கொள்ளலாம். அந்த நாட்களில் பண்டிகை வருகிறபோது, கஷ்டப்பட்டு அனுபவித்த பரவசங்கள், இப்போது சுலபமாக கிடைத்து விடுகின்றன. எல்லாம் டெக்னாலஜி செய்யும் சௌகர்யம் அல்லது சாபம். எது எப்படியோ? கவலையில்லாமல் சிறகடித்து பறந்து திரிந்த அந்த நாட்களில் அனுபவித்த விலைமதிப்பில்லாத பரவசங்களை, இப்போது நினைத்தாலும் அந்த பரவசத்திற்குள் நொடியில் அழைத்துச் சென்று விடுகிறது.