
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையற்றது என நம்மூர் அரசியல் கட்சிகள் கங்கணம் கட்டி கொண்டு எதிர்த்து போராடி வருகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு எழதுவதில் இருந்து விலக்கு பெறுவதற்கு முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு பல்வேறு பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்தது.
நீட் தேர்வினால், தமிழக மாணவர்களுக்கு குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதல பாதாளத்தில் இருக்கிறது. இதனால் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர முடியாமல் அவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. நீட் தேர்வானது முதல் முறை தேர்வில் தவறியவர்கள், மீண்டும்... மீண்டும் தேர்வு எழதுவபவர்கள் தான் வெற்றி அடைகிறார்கள். இதனால் முதல் முறையாக நீட் தேர்வு எழதும் மாணவனின் ரிசல்ட் பாதகமாகி விடுகிறது. நீட் தேர்வு எழதும் மாணவனுக்கு அழத்தத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள், மாணவர்களிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தரமான மாணவர் மருத்துவ படிப்பில் சேர்வதை, நீட் தேர்வு உறுதிசெய்யவில்லை. குறைந்த திறனுள்ள மாணவர் மருத்துவ சீட் பெறுவதை உறுதி செய்கிறது.
12ஆம் வகுப்பு வரை... எல்லா மட்டங்களிலும் மனப்பாடம் செய்து மாணவர்கள் பயிற்றுவித்து தேர்வடைவதை ஊக்குவிக்காமல், கற்பதை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகத்தினையும், சட்டத்தை இயற்றி தமிழக அரசு கட்டுபாட்டில் கொண்டு வர குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். 12-ம் வகுப்பில் எடுக்கும் மார்க்கை அடிப்படையாக கொண்டு மருத்துவ சீட்டினை மாணவர்களுக்கு வழங்க வேண்டும், நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என நீதிபதி ஏ.கே .ராஜன் தனது அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ள சில பரிந்துரைகள் ஆகும்.

கொரோனோ ஒருபுறம் நம்மை புரட்டி போட, ஒரு வழியாக இந்த வருட நீட் தேர்வு, நாடு முழவதும் 202 நகரங்களில் சுமார் 3,682 தேர்வு மையங்களில் சுமார் 16.14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழதினார்கள்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நீட் தேர்வு எழதிய இரண்டு மாணவர்கள் பதில் அளித்த ஒ.எம்.ஆர். தாள்கள் மாறியதாக புகார் எழந்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீட் தேர்வு ரிசல்ட் வெளியிட கூடாது என தடையுத்தரவு பெற்றனர். அதன்பின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு, நீட் தேர்வின் முடிவுகள் வெளியானது.
தற்போது நீட் தேர்வில், 500 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் 75 சதவீதம் பேர். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை நீட் தேர்வு எழதி தேர்ச்சி பெற்றவர்கள் என்று புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடம் மற்றும் சிபிஎஸ்இ உட்பட இதர கல்விமுறையில் பயின்ற மாணவர்கள், மொத்தமாக 1,08,319 பேர் தேர்வு எழதியதில், 58,922 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் தமிழகத்தில் நீட் தேர்வினை மாநில பாடத்தில் பயின்ற 88,933 பேர் எழதியதில், 42,202 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

நீட் தேர்வின் அதிகபட்சமான 720 மதிப்பெண்களை டெல்லி, மும்பை, ஹைதராபாத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் எடுத்து இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வினை எழதிய நாமக்கல் எம். ப்ரவீன், தும்மங்குறிச்சி மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி இருவரும் 710 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர். இந்த மாணவர்கள் சேலம் அருகே உள்ள பயிற்சி மையத்தில் ஒராண்டு படித்தவர்கள் என்ற செய்தி வருகிறது.
நீட் தேர்வுக்கு, தமிழகத்தினை தவிர மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல், தங்கள் மாநில மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர கிட்டதட்ட தங்கள் பாடதிட்டங்களை முதல் தரமானதாக மாற்றி கொண்டு விட்டது.

தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக, நீட் தேர்வினை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இனி நீட் தேர்வை ரத்து செய்து வழக்குதொடுக்க முடியாது என்ற நிலை வந்த பின், தமிழக அரசு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் நீட் தேர்வு ரத்திற்காக செய்து வருகிறது.
தமிழக மாணவர்கள் படிக்கும் மாநில பாடதிட்டத்தினை, நீட் போன்ற தேர்வுகளுக்கும் தயார் ஆவாது போல் மாற்றி வடிவமைத்தால், நம் மாணவர்கள் தான் இந்திய அளவில் நடக்கும் நீட் தேர்வில் முன்னிலை வகிப்பார்கள் என்று பிரபல கல்வியாளர் ஆலோசனை தெரிவிக்கிறார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற எல்லோருக்கும் மருத்துவ சீட் கிடைக்குமா என்பது பில்லியன் டாலர் கேள்வி. தமிழகத்திற்கு இளநிலை மருத்துவபடிப்பிறக்கான 9100 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது அரசு மருத்துவ கல்லூரி, சுயநிதி மருத்துவ கல்லூரி மற்றும் டீம்ட் யூனிவர்சிட்டி மருத்துவ கல்லூரிகளின், மருத்துவ சீட்டிற்கான இடங்கள் இதில் அடங்கும்.
இந்திய அளவில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான 83,075 இடங்கள் உள்ளது. இது தவிர பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் மருத்துவபடிப்பிற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் சிபிஎஸ்இ படிப்பவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது கடந்த இரண்டு வருடங்களாக மாநில பாடத்தில் கேள்விகள் கேட்கப்படுவதால், தமிழக அரசு பள்ளி பயிலும் மாணவர்களும் நீட் தேர்வில் தேர்வாகி வருவது தெரிகிறது.

தற்போது வெளியாகி இருக்கும் நீட் தேர்வு முடிவுகளில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களை விட, மற்ற மாநிலங்களில் உள்ள போர்டு மாநில பாடங்களை பயின்ற மாணவர்கள் 66 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை படித்தால் மட்டுமே இனி நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் முதல் முறையாக தகர்தெறியப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர்கள், நீட் தேர்வில் கிட்டதட்ட 64.5 சதவீதம் பேர் தேர்வாகி முதலிடம் வகிக்கின்றனர். CISCE என்ற பாடதிட்டத்தில் படித்த மாணவர்கள் 71.7 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜஸ்தான் மாநில கல்வி திட்டத்தில் பயின்ற மாணவர்கள் 61.8 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மாநில கல்வி திட்டத்தில் பயின்றவர்கள் நீட் தேர்வில் 47.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆக மொத்தம் தற்போது நடைப்பெற்ற நீட் தேர்வில் 50 சதவீத மாணவர்கள் 13 மாநில பாடதிட்ட கல்வியில் பயின்றவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த வருடம், நாடு முழவதிலிருந்தும் 9 திருநங்கைகள் நீட் தேர்வில் தேர்வாகி உள்ளனர் என்பது நல்ல செய்தியாக உள்ளது.
கர்நாடகா, பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பெருமளவில் தேர்ச்சி பெறவில்லை.
2019-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு பிறகு ஜார்கண்ட, தமிழ்நாடு உள்பட 13 மாநில மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஓரளவு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ‘நீட்’டுக்கு எதிராக அதிக குரல் ஒலிப்பதால், மாநில பாட திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதாகவும், இனி வரும் காலத்திலும் இது தொடர வேண்டும் என்பதே பெற்றோர்களின் குரலாக உள்ளது.

இனி வரும் காலத்தில், நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையா இல்லையா என்பதை காலம் தான் முடிவு செய்யவேண்டும். அதுவரை நமது மாணவர்கள் தொடர்ந்து நீட் தேர்வு எழத, அதற்கான சிறப்பான பாடதிட்டங்களை தமிழக அரசு வகுத்து தேர்வு எழதும் மாணவர்களுக்கு அதிக பயிற்சிகளை அளிக்க, அரசு தன் சொந்த செலவில் அனைத்து பள்ளிகளிலும் பயிற்சி தரவேண்டும் என்பதே அனைத்து கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழகம் மட்டும் நீட் தேர்வு வேண்டாம் என்று போர்கொடி பிடிக்கிறது என்ற வாதம் தற்போது வலுப்பெற்று உள்ளது. இங்கிருக்கும் சில அரசியல்வாதி போர்வையில் உள்ள மேதைகள், தங்கள் சுயலாபத்திற்காக, அரசியல் செய்து நீட் தேர்வை பூதாகரமாக்கி குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது, திறமையும் தகுதிவாய்ந்த நமது மாணவ செல்வங்களின் எதிர்காலம் தான். அதனால் இனி வரும் ஆண்டுகளில், நீட் தேர்விற்கு விருப்பமுள்ள மாணவர்கள் தங்களை தயார்படுத்தி, நீட் தேர்வில் ஜெயிக்க இப்போது இருந்தே தயாராக வேண்டும் என்று முதுபெரும் கல்வியாளர் தெரிவிக்கிறார்.என்ன செய்ய... அரசியல்வாதிகள் தான் நமது நாட்டை பாழக்கிகொண்டு இருக்கின்றனர். தற்போது அவர்களின் அரசியல் நமது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையோடு விளையாடி கொண்டிருக்கிறது என்பதே நிஜம்!

Leave a comment
Upload