தொடர்கள்
ஆன்மீகம்
முன்னோர்களை பிதுர்லோகத்திற்கு வழியனுப்பும் “எம தீபம்” - ஆரூர் சுந்தரசேகர்.

எம தீபம்


தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று திரயோதசி திதியில் “எம தீபம்” ஏற்றுவது வழக்கத்தில் உள்ளது. ‘எம தீபம்’ ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும், திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும்.

எம தீபம் எதற்கு ஏற்ற வேண்டும்:

மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு வரும் முன்னோர்களை (பித்ருக்கள்) மாஹாளய அமாவாசை அன்று திதி கொடுத்து வணங்கி வருகிறோம். அன்று வந்த பித்ருக்கள் மீண்டும் தீபாவளித் தினத்தன்று, நாம் செய்யும் பூஜையையும், நைவேத்தியத்தையும் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு, நம்மை ஆசீர்வதித்து, பின்னர் அவர்கள் பிதுர்லோகத்திற்கு திரும்புகின்றனர் என்பது ஐதீகம். எனவேதான் தீபாவளித் திருநாளில் பித்ருக்களை அவசியம் வழிபட வேண்டும். இதனால் மறைந்த நம் முன்னோர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “எம தீபம்” மட்டுமே. அத்தீபத்தை தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும்.
எம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு, நலன்களையே செய்வார்கள்.

சாஸ்திரப்படி “எம தீபம்” ஏற்றும் முறை:

எம தீபம் ஏற்றும் முறை குறித்து நமது சாஸ்திரங்கள் வழி வகைகள் ஏற்படுத்தி உள்ளது.

வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் எம தீபம் ஏற்றப்பட வேண்டும்.

எம தீபம் தெற்கு திசை நோக்கி எரிய வேண்டும். விளக்கேற்றிய பின்னர் முன்னோர்களை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
விளக்கேற்றிய பின் கீழ்கண்ட சுலோகம் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

இந்த ஸ்லோகம் சொல்லி வணங்கினால் முன்னோர்கள் மட்டும் அல்லாமல் எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படாது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

முன்னோர்கள் ஆசிகள் பெற எம தீபம் ஏற்றுவோம்!! முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்!!!