தொடர்கள்
மக்கள் கருத்து
மக்கள் கருத்து - வேங்கடகிருஷ்ணன்

20211003182116478.jpg

நடைபாதை வாசிகளின் தீபாவளி

அழகப்பன் - பிளாட்டில் வாட்சமானாகப் பணி புரிபவர்... (இப்படித்தான் போட்டோ போடவேண்டுமென்று கேட்டார்)

20211003182207980.jpg

“எனக்கு ஊர் பட்டுக்கோட்டை. ட்ரைவரா 25 வருஷம் வேலை செஞ்சேன், இப்போ வயசானதுனால நான் வண்டி ஓட்டுனவர் சிபாரிசுல, அவரோட பிளாட்டுலேயே வாட்சுமேனா வேலை செய்யறேன். தீபாவளியா? அதெல்லாம் இருக்கறவுங்க கொண்டாடுறது. வேலைல இருந்தபோது நல்ல கொண்டாடுனேன். இப்போ அன்னைக்கி யார் என்ன கொடுக்கறாங்களோ, அத வெச்சு கொண்டாட வேண்டியது தான். பொழப்பு என்னமோ இந்த பிளாட்பாரம் ஒட்டி இருக்குற இந்த சின்ன எடத்துல தான். அதெல்லாம் கவலைப்படால... இப்பயும் இந்த பிளாட் பசங்க... தாத்தான்னு வந்து அப்பப்போ ஏதாவது சாப்பிடவோ, காசோ குடுத்துட்டு போகும். அது போறும். மனசு சந்தோஷமா இருந்தா அது தான் தீபாவளி சார்.


பாலாஜி - பிளாட்பாரத்தில் பூ விற்பவர்

20211003182324760.jpg
“என்ன சார் பண்ண... பெரிய கடை வெச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தேன். கொரோனா புண்ணியத்துல போன வருஷம் பிளாட்பாரத்துக்கு வந்தாச்சு. இந்த வருஷம் ஏதோ கடவுள் புண்ணியத்துல ஆயுத பூஜையிலிருந்து ஜனங்க பூ வாங்க ஆரம்பிச்சுருக்காங்க. ஆனாலும், நெறய தேங்கிடுச்சு சார். இப்போ பாருங்க... நாளைக்கு தீபாவளி இன்னிக்கு சாமந்தி கிலோ 30 ரூபான்னு கூவிகிட்டு இருக்கேன். இந்த பூவெல்லாம் வித்து போனாலே போதும் சார். எதாவது புது துணியும் கொஞ்சம் பட்டாசும் வாங்கி தருவேன் குழந்தைகளுக்கு. மழை வேற வியாபாரத்தை கெடுக்குது. என்ன செய்ய? விடியும்னு நம்ப வேண்டியதுதான்....


தவமணி - பிளாட்பாரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி.

20211003182436801.jpg

போன வருஷத்துக்கு இந்த வருஷம் பரவாயில்லை. ஜனங்க வெளில வராங்க. கொஞ்சம் தைக்க ஏதாச்சும் கிடைக்குது. இன்னிக்கு காலைல ஒரு புண்ணியவான் வீட்டுல இருந்த எல்லோரோட கிழிஞ்ச செருப்பையும் கொடுத்து தைக்க சொன்னாரு. 16 ஜோடி இருக்கும். எல்லாம் தெச்சிட்டு 1200 சொன்னேன். மூணு ஐநூறு நாட்டையும் ஒரு சுவீட் பாக்ஸையும் கொடுத்து ஹாப்பி தீபாவளின்னு சொல்லிட்டு போனாரு. எனக்கு கண்ணுல தண்ணி வந்திடுச்சு. இந்த ரெண்டு வருஷத்துல நான் மூணு ஐநூறு ரூபாய சேர்த்து பாத்ததே இல்ல. கடவுள் இருக்கான் சார். இந்த வருஷம் எம் புள்ளைங்களுக்கு, என் ஊட்டுக்காரிக்கு நல்ல துணி எடுத்து கொடுக்கப்போறேன் சார். என்னையும் மதிச்சு கேட்டியே சார், ரொம்ப டேன்க்ஸ் சார்.


சகாய மேரி - பிளாட்பார்மில் பூ கட்டுபவர் (போட்டோவுக்கு முகம் காட்ட வெக்கப்பட்டார், அவரறியாமல் எடுத்தது)

20211003182636968.jpg

மழைல நனைஞ்சினு கீறேன். என்னத்த தீவாளி. பூ முன்ன மேரி கட்ட
மிடியலை. பக்கத்துல ஒரு வீடு வாசல்ல ஓரமா தங்கினு கீறேன். என்னிக்கு வீடு கைமாறுதோ, வரவங்க என்னா சொல்வாங்களோ? யாரு கண்டா? கடேசியா தீவாளி கொண்டாடுனது எங்க ஊட்டுக்கார் இருக்க சொல்ல, அது நாலு வர்ஷம் மின்னாடி. இன்னிக்கெல்லாம் நல்ல சோறு கெட்சாலே தீவாளி தான். இன்னிக்கு நீ சோறு வாங்கி குட்து புண்யம் கட்டிக்கினே. போட்டோல்லாம் வேணாம் பா, வெக்கமா கீது. அடுத்த தீவாளிக்கு இல்லாம ஆண்டவன் என்னே கூட்டுகினான்னா அது போறும் பா. (அதற்கு மேல் நிற்க நமக்கு மனம் வரவில்லை)