
ஸ்ரீ முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் முக்கிய விரதமான ‘கந்த சஷ்டி விரதம்’ தீபாவளி பண்டிகை நன்னாளில் நவம்பர் 4 (ஐப்பசி 18) அன்று தொடங்குகிறது.
நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை - கந்த சஷ்டி விரதம் தொடக்கம்.
நவம்பர் 9ம் தேதி செவ்வாய்க் கிழமை அனைத்து முருகன் திருக்கோயில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடக்கும்.
நவம்பர் 10-ம் தேதி புதன் கிழமை முருகப்பெருமான் தெய்வானை திருமணம்.
கந்த சஷ்டி விரதம், ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப் படுகிறது. சூரபத்மனை எதிர்த்து முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சி கந்த சஷ்டி விரத முறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.
‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்ற பழமொழியின் உண்மையான விளக்கமே சஷ்டியில் விரதம் இருந்தால், அகமென்னும் பை சிறப்பாக மாறும் என்பதுதான். பெண்கள் சஷ்டியில் விரதமிருந்தால், அவர்களின் அகமென்னும் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதும் ஐதீகம்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால், முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது நம்பிக்கை.
கந்த சஷ்டி விரத முறை:
இவ்விரத முறையில் சிலர், ஆறுநாட்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர். ஒரு சிலர்... ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது. இரவில் பால், பழம் மட்டும் அருந்தலாம். ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு, இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கியத்துவம் என்னவென்றால்... முருக பெருமானை எந்த நேரமும் நினைத்து இருக்க வேண்டுமே தவிர, பட்டினி இருந்து தான் வழிபட வேண்டும் என்ற கட்டாயமில்லை. நம் உடல் வலிமைக்கு ஏற்றவாறு உண்ணாவிரதத்தை மேற்கொள்ளலாம்.
விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நீராடி, திருநீறணிந்து முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து முறைப்படி பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று வரலாம். கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு முருகப்பெருமானது அருள் கிட்டும்.
கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை:
இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படிக்கலாம். இதனை படிப்பதால் மனஅமைதி நிலவும். இதைத்தவிர சுப்பிரமணிய புஜங்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.

கந்த சஷ்டி விரதத்தின் பலன்:
குடும்பத்தில் ஆண்கள் தங்கள் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கடன் தொல்லை நீங்கவும்.... திருமணமான பெண்கள்... குடும்ப நன்மைக்காகவும், குழந்தை வரம் வேண்டியும், கன்னிப்பெண்கள்... திருமண வரம் வேண்டியும், மாணவர்கள் கல்விக்காகவும், இந்த விரதத்தை கடைப்பிடிப்பதனால் விரும்பிய பலன்களை பெறலாம் என்பது ஐதீகம்.
ஆறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விரதம்:
ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், மற்றும் முருகன் குடி கொண்டுள்ள எல்லா கோயில்களிலும் கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

கட்டுப்பாடுகளுடன் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம்:
தேவர்களை வதைத்த அசுரர்களை, ‘வெற்றி வேல் வீரவேல்’ என முழக்கமிட்டு வந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட ஸ்தலம் திருச்செந்தூர். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 4ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் விரதம் இருப்பதும், சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பதும் வழக்கம். கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டைப் போல இந்தாண்டு பக்தர்கள் கலந்து கொள்வதற்குப் பல கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் விதித்துள்ளது.

சூரசம்ஹாரம்:
ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்தாண்டு நவம்பர் 9ம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யான நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுப்ரமணிய காயத்ரி:
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்’
முருகப் பெருமானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி, அவரை வழிபட்டால் முருகனின் அருள் கிட்டும்.

Leave a comment
Upload