மெக்கன்சி ஆவணங்களில் ஒரு சுவாரஸ்யமான, இலக்கிய நயத்துடன் நடைபெற்ற காதல் கதை - குறும்பர் ராஜாவின் மகளுக்கும் சோழராஜா குமாரனிற்கும் இடையே ‘பல்லாவரம் டு மீனம்பாக்கம்’ பயணிக்கிறது.

பல்லாவரத்துக் கைபீதில் (டி.2805), சென்னை சைதாப்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த (செங்கை மாவட்டம்), பல்லாவரம் என்ற ஊரின் வரலாறு பேசப்படுகிறது. (பல்லாவரம் - செங்கை மாவட்டத்தில், ஆலந்தூர் உள்வட்டத்தில் அமைந்தள்ள ஊர் பல்லாவரம்).

சமணக் குறும்பன் ஒருவன் அந்நாளில் இப்பகுதியை ஆண்டதாகச் சுவடி தெரிவிக்கிறது; பல்லன் என்பது அச்சமணக் குறும்ப அரசனின் பெயர் என்றும் சுவடி பேசுகிறது. இந்தச் சுவடி மேலும் ஒரு பழைய தமிழ் அம்சத்தைத் தருகிறது. அஃதாவது, விடுகதை போல, சாடை பேசும் முறையில், ஒருவர் கருத்தை மற்றவருக்கு மறைவாகப் புலப்படுத்துவதில் தமிழ்மக்கள் வல்லவர்கள்! இந்தத் தமிழ்ப்பண்பாடு இப்போது மறைந்துவிட்டது எனலாம், என்று சுட்டிக்காட்டுகிறார் முனைவர் சு. சௌந்தரபாண்டியன், காப்பாட்சியர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்.
“கருத்துச் செறிவும், மொழி வளமும் இந்தச் சாடைமொழியில் இருக்கும். ஒரு பூவாணிச்சி மூலமாக ஒரு காதல் செய்தியைத் தலைவன் தலைவிக்குச் சொல்லியனுப்புகின்றான்; அதற்கு தலைவி, தனது பதிலை மறைமுகமான கூற்று மூலம் அனுப்புகிறாள்! இந்நூலுள்ளே படித்தால் உங்களுக்கு நன்கு விளங்கும். மிகச் சிறந்த நாடகப்பாணியில் இச்சுவடி செல்கிறது”.
இந்தச் சுவடியின்படி, பல்லாவரப் பகுதியை ஆண்ட காலிங்கன் என்ற சமணக் குறும்ப மன்னனின் மகள் மீது, சோழன் ஒருவனின் மகன் காதல் கொண்டான்; காதலை நிறைவேற்ற உதவியவன், சோழனின் மந்திரியின் மகன். இந்த இருவரிடையே நடக்கும் காதல் தொடர்பான, மேலே கண்ட, செய்திப் பரிமாற்றங்கள், மிகவும் அருமையான முறையில் இந்த கலாச்சார வரலாறு பதிவுசெய்கிறது.
“பல்லாவரத்திலிருந்த பூர்வீக ராசாக்களுடைய கைபீது (p.2805)
1. பூருவத்திலே பல்லஎநன்றொரு ராசா யிருந்தான். அவன் ஆதியாய் இந்த ஸ்தலத்தில் பிறபுத்துவம் பண்ணியபடியிநாலே, இந்த ஸ்தலத்துக்கு முன் மறு பேரில்லாமல் அந்த ராசாவிநாலாளப்பட்டபடியிநாலே பல்லபுறம் அல்லது பட்டணமென்றழைக்கப்பட்டது.
2. “அவன் சயின குறும்பநென்று சொல்லப்பட்டிருக்குறான். இவன் வெகுநாள் பிறபுத்துவம் பண்ணி தெய்வலோக பிராப்த்தி ஆனான் (தெய்வலோக பிராப்தி ஆனான் - இறந்தான்)”.
3. “பின் இவன் மகன் காலிங்கன், தன் தகப்பன் பட்டத்துக்கு வந்தான். இவன் வெகுநாள் தபம் (தவம்) பண்ணியவிடத்தில், ஒரு பெண் பிறந்துது. அதுக்குப் பேர் பத்மாவதி யென்று பேரிட்டு, வெகு செல்வீகமாக வளர்த்தான்; அவள் மகா ரூபவர்ண்ண சவுந்தரியமாக இருந்தாள். அவள் தகப்பனாகிய காலிங்கன், அதிக வேதாத்தியாக இருந்து, தன் பிள்னைக்கு அதிக படிப்புக்கத்து கொடுத்து, அந்த நாள் கால வழக்கமாயிருந்த நயின பாஷை முதலானதுகள் தர்ப்பித்துக் (கற்பித்து) கொடுத்தான்”.
4. “இப்படி. இவள் மகாவித்தியா சாமர்த்தியம் பொருத்தியவளானதை தகப்பன் சந்தோஷப்பட்டு, இவகுடைய வித்தியாப்பிசம் நடந்துவந்த பிறகு, இவளுக்கு தனிமயிலே (தனிமையிலே) ஒரு பெலத்த மாடி தன் அரண்மனைக் கடுத்தாப் போலே கட்டிவைத்து. அதிலே சில சாதிகளும் இவளைவு மங்கே வைப்பித்தான்”.
5. “அங்கே, இவள் நாள்தோறும் வித்தியாப்பியாசம் பண்ணிவிக்கயில், அதிக சமர்த்திகவதி ஆயிநாள். இதுவன்றியில், இவள் நாள்தோறும் மீனம்பாக்கத்திலிருந்த தீர்த்தத்தில், ஸ்தானபானத்துக்கு தன் தாதிகளுடன் போறத்துக்கு வழக்கப்பட்டிருந்தாள். யிப்படியில் நாள்தோறும் போகுற வழக்கமாக இருக்குகயில், ஒரு நாள் சோழ ராசா மகனிலொருத்தன், அதிக வித்தியாசாமர்த்தியம் பொருந்திய தன் மந்திரிகளுடனே வேட்டை மார்க்கம் அதிக காடுகள் செடிகளுடன் அதிக மிருகசாதிகள் வாசம்பண்ணுகற ஸ்தலமாகயிருந்ததால், அவ்விடம் வந்து வேட்டைகளாடி, மீனம்பாக்கத்திலிருக்குற தீர்த்தத் தண்டயில் வந்து, தாகம் தீர்த்துக் கொண்டிருக்கும்போது, அந்த ராச குமாறத்தி தாதிகளுடன் புடைசூழ ஸ்தானத்துக்கு (குளிப்பதற்கு) வந்தாள்”.
6. “அப்போது, ஸ்தானத்தீர்க்கு வந்திருக்குற சோழராசாவின் குமாரன் இவளைக் கண்டு அதிகமாய் மோகித்தான், அப்போ அவளும் இவனைக் கண்டு அதிகமாய் மோகதாப மாகினாள். அதன்பேரில் அவன் ஸ்தானத்திலிறங்கி ஸ்தானம்பண்ணி அறண்மனைக்கு திரும்புகாலில் இந்த ராசகுமாறனின் பேரில் உடைத்தாகிய அதிக மோகதாபத்திநாலே இவளதிக வித்தியாசாமர்த்தியமுடையவளாக இருந்ததிநாலேதான் தான் படித்திருந்ததன்படி ஒரு புஷ்பத்தை எடுத்து தன் பல்லில் வைத்துக்கொண்டு போய்விட்டாள்”.
(தொடரும்)
ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை (9841010821 rangaraaj2021@gmail.com)

Leave a comment
Upload